உயிர் மூச்சு

அந்தமான் விவசாயம் 33: கிராம்பு: எதிர்காலத்தின் பணவங்கி

ஏ.வேல்முருகன்

கிராம்பு தாவரத்தின் எந்த உறுப்பு என்பது தெரியுமா? சிஸைஜியம் அரோமாடிகம் (Syzygium aromaticum) எனப்படும் மரத்தின் திறக்கப்படாத மலர் மொட்டுகள் உலர்த்தப்பட்டுக் கிராம்பு பெறப்படுகிறது. மணப்பொருளாகவும், மூலிகைத் தன்மை உடையதுமான கிராம்பு தொன்றுதொட்டுச் சித்தர்களாலும், தற்காலத்தில் ஒப்பனை, மருத்துவப் பயன்பாடுகளுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு சந்தையில் அதிகம் தேவைப்படும் பொருளாக மாறிவருகிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் தரம், மணமுடைய, அங்கக முறையில் விளைவிக்கப்பட்ட கிராம்பின் தேவை பல மடங்கு அதிகரித்து அதிக வருவாய் ஈட்டித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலப் பயிர்

உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதால் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கிராம்புக்குப் புகழ்பெற்றவையாகத் திகழ்கின்றன. சரியான தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டால் மலைச்சரிவுகள், தென்னையில் ஊடுபயிராக விளைவிக்கப்படும் கிராம்பு, அந்தமானின் பணவங்கியாக மாறும் என்பது வர்த்தகக் கணிப்பு.

இதற்கு இங்கு நிலவும் தட்பவெப்பம், மழையளவு, மண், தீவுகளின் புவியியல் அமைப்பு, குறைந்த அளவிலான பூச்சி மற்றும் நோய்கள், அங்கக முறை சாகுபடி, தெற்காசியச் சந்தை, பெருகிவரும் சுற்றுலாப் பயணிகளின் வரவு போன்றவை கிராம்பை எதிர்காலப் பயிராக இனம் காண வைத்துள்ளன.

(அடுத்த வாரம்: கிராம்பு: வளர்ப்பு முறை)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

SCROLL FOR NEXT