செயற்கையாகத் தாவரத்தை நட்டுப் பராமரித்தோ அல்லது காடுகளை அழித்து வேளாண் நிலங்கள் உருவாக்கப்பட்டபோது, இவ்வகையான பயன்தரும் மரங்களைக் கண்டறிந்து அழிக்காமல் விட்டிருக்கலாம். அத்துடன் பண்ணையில் இயற்கையில் வளரும் மரங்கள் கண்டறியப்பட்டு, பண்ணையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அகத்தி, பேமா, நாவல், நோனி, முந்திரி மரங்களின் விதைகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர்ப் பண்ணையத்தில் தேவைப்படும் இடங்களில் நடவு செய்யப்படுகின்றன. மற்ற மரங்கள் தண்டுத் துண்டுகள், பதியமிடல் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீவனத்துக்காக வளர்க்கப்படும் மரங்கள் குறுகிய இடைவெளி விட்டு (20 முதல் 25 செ.மீ.) நடப்படுகின்றன. பழம், வீட்டுக் கட்டுமானப் பொருட்களைப் பெற மரத்துக்கேற்றாற்போல் போதிய இடைவெளி விட்டு (1 முதல் 7 மீ.) வளர்க்கப்படுகின்றன.
இலவசக் கால்நடைத் தீவனம்
சில நேரங்களில் பண்ணையத்தில் உயிர்வேலியாக வளர்க்கப்படும் மரங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் சுபா புல், கிளைரிசிடியா போன்ற குறு மரங்கள் நடப்படுகின்றன. இம்மரங்களை 1.5 மீட்டர் உயரத்தில் வெட்டி புதிய கிளைகளை உருவாக்கிக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு உயிர்வேலிகள் அமைப்பதன் மூலம் ஒரு வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு டன் பசுந்தீவனம் கால்நடைகளுக்குக் கிடைப்பதோடு வீட்டுக் கட்டுமானப் பொருட்களும் மரக்கட்டைகளும் கிடைக்கின்றன. பண்ணையத்தின் உட்பகுதிகளிலோ குளங்களைச் சுற்றியோ வளர்க்கப்படும் மரங்களிலிருந்து ஆண்டுக்கு 15 முதல் 30 கிலோ தீவனம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத் தேவை
பருவநிலை மாறுபாடு அடைந்து விளைநிலங்கள் சீர்கேடு அடைந்துவரும் பின்னணியில் வேளாண்மையுடன் மரங்கள், கால்நடைகளை ஒருங்கிணைப்பது சிறந்த தீர்வாக அமையும். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்தக் கலப்புப் பண்ணைய முறை மிகவும் பொருத்தமானது என்பது ஆராய்ச்சி முடிவு. இது பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவருவதோடு, தீவுகளின் தாங்கும் திறனையும் (மக்கள்தொகை) இவை மேம்படுத்துகின்றன. மேலும் மிகக் குறைந்த அளவு மழைப்பொழிவு உள்ள இடங்களுக்கும், தமிழகக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொருத்தமான பல்நோக்கு மரங்களைக் கலப்புப் பண்ணையத்தில் ஒருங்கிணைத்துக்கொண்டால், பண்ணையின் பொருளாதாரம் நிலைப்புத் தன்மை மேம்படும். ஏனென்றால் இவ்வகை பல்நோக்கு மரங்களுக்கு எப்போதும் நல்ல நிலம் மட்டுமே தேவை என்பதில்லை.
விவசாயிகள் பண்ணையின் அமைப்பு, வேளாண் பயிர்கள், கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துப் பசுந்தீவனங்களைத் தனிப் பயிராகவோ, மற்ற வேளாண் பயிர்கள் அல்லது பழ மரங்களுக்கு இடையேயும் சாகுபடி செய்யலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பசுந்தீவனம், வேளாண் பயிர்கள், கால்நடை பராமரிப்பைத் தொடர்வதன் மூலம் மண்ணின் வளத்தைப் பெருகி, ஆண்டு முழுவதும் நிரந்தர வருமானம் பெற இயலும்.
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com