உலகிலுள்ள 500 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்களில், 3.4% மட்டுமே (17 கோடி ஹெக்டேர் மட்டுமே) மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் தற்போது குறைந்துவருகிறது. இதில் பெருமளவு ஐந்து நாடுகளிலும், கிட்டத்தட்டப் பாதிக்கு மேல் அமெரிக்காவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. அங்கும்கூட விலங்கு உணவாக மட்டுமே பயிரிடப்படுகிறது. ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை விதித்துள்ளன.
இந்தியாவில் பயிரிடப்படும் பயிர்களில், பி.டி. பருத்தி மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர். 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி. பருத்தி 95% சந்தையைப் பிடித்துள்ளது. வேறு வழி இல்லாததாலும், கடுமையான விளம்பரங்கள் காரணமாகவும் விவசாயிகள் இதைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம், இன்றளவும் தற்கொலையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலோர் பருத்தி விவசாயிகளே. பி.டி. பருத்தி விளைச்சலும் விலையேற்றம், பூச்சித் தாக்குதல் எனக் கணக்கு வழக்கற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட உணவு
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரியை வரவிடாமல் தடுக்க நடைபெற்ற போராட்டம் பற்றி நினைவிருக்கலாம். ஏழு வருடங்களுக்குப் பின்னர் இப்போதும் பி.டி. கத்திரி பாதுகாப்பானது என்று நிரூபிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத் தொழில்நுட்ப வல்லுநர் குழு இதையே வலியுறுத்தி மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரும், களப்பரிசோதனையும் தேவையில்லை என்று பரிந்துரைத்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் மரபணு மாற்றப்பட்ட பயிர் நம் நாட்டுக்குத் தேவை இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
இப்படியாக மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் கடுமையான எதிர்ப்பை மீறி மோடி அரசு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரை அறிமுகப்படுத்தத் துடிக்கிறது. பி.டி. கத்திரியை அறிமுகப்படுத்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம் முயற்சித்தது. இப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்த முயற்சிப்பது, அரசு அமைப்பான டெல்லி பல்கலைக்கழகம்.
விளைச்சல் அதிகமா?
இந்தப் புதிய கடுகில் விளைச்சல் அதிகம் (வெறும் 25%) என்று ஆசைவார்த்தை காட்டப்படுகிறது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை என்று பல அரசு தரவுகள் கூறுகின்றன. நமது பாரம்பரியக் கடுகு விதைகள், சில ஒட்டுக் கடுகு விதைகள், செம்மைக் கடுகு சாகுபடி போன்றவை மூலம் இந்த 25% விட அதிக விளைச்சல் கிடைக்கிறது என்பதை வேளாண் விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். ராஜஸ்தானில் பரத்பூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) கடுகு ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒட்டுக் கடுகு ரகங்களும் பாரம்பரிய ரகங்களும் 58% முதல் 130% வரை அதிக விளைச்சல் தந்திருப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் மரபணு மாற்றப்பட்ட கடுகு சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும், உழவர் வாழ்வாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தில்லுமுல்லு
இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படும் எந்த ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிருக்கும் களப்பரிசோதனை நடத்தி, அதில் கிடைத்த முடிவுகளை மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழுவுக்கு (Genetic Engineering Appraisal Committee) சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பான முடிவுகளைப் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தியும், அது காதில் வாங்கப்படவேயில்லை.
இந்தப் பின்னணியில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனை முடிவுகளில் தில்லுமுல்லு நடந்திருப்பதாகவும், உண்மை மறைக்கப்பட்டு முடிவுகள் மாற்றி எழுதப்பட்டிருப்பதாக நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் (ASHA) தலைவர் கவிதா குருகந்தி, விஞ்ஞானி சரத் பவார் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முறையற்ற ஒப்பீடு
களப்பரிசோதனையின்போது DMH-11 என்னும் மரபணு மாற்றப்பட்ட கடுகு பாரம்பரியக் கடுகு, ஒட்டு ரகக் கடுகைவிட அதிகம் மகசூல் தந்ததாகக் காண்பிப்பதற்காகத் தரவுகளைத் தவறாகக் காண்பித்துள்ளனர். அத்துடன் சமீபத்திய ஒட்டு ரகக் கடுகுடன் ஒப்பிடாமல், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ரகத்துடன் ஒப்பிட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் 18 இடங்களில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடல் பரிசோதனை நடந்துள்ளது. இவற்றில் தங்களுக்கு வசதியான 8 இடங்களில் நடந்த பரிசோதனை முடிவுகளையும், சில ஆண்டுகளின் தரவுகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆராய்ச்சிக்காக இதுவரை ரூ. 100 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், களப்பரிசோதனைகளில் 20 % விளைச்சல்கூட அதிகரிக்கவில்லை. இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட கடுகின் உற்பத்தியாளரும், அதை நெறிப்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டாளர்களும் கைகோத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
இது அவசியமா?
மரபணு மாற்றப்பட்ட விதைகள் அறிவியல்ரீதியிலும், சுற்றுச்சூழல்ரீதியிலும், சமூகரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதிலிருந்து, களைக்கொல்லிகளின் பயன்பாடுவரை மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் உள்ளன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் தேனீக்களும் தேனும் குறையும் வாய்ப்பிருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள கடுகு வயல்களை ஒட்டிய பகுதிகளில்தான், நாட்டிலேயே அதிகத் தேன் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றப்பட்ட கடுகில் உயிரியல் பாதுகாப்புப் பரிசோதனைகள் (Bio safety), ஆபத்து மதிப்பீடு பரிசோதனைகள் (Risk assessment) போன்றவை நடத்தப்படவில்லை. முழுமையான பரிசோதனைகள் நடத்தப்படாத, வெளிப்படைத் தன்மையற்ற, திரும்பப்பெற முடியாத, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்குத் தேவையா?
கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com