வீட்டுக்கு வீடு மரங்களை வளர்க்கச் சொல்கிறது அரசாங்கம். அதற்கும் ஒருபடி மேலாக கடந்த முப்பது வருடங்களாக குளித்தலையில் வீதிக்கு வீதி மரங்களை நட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார் மாமுண்டியா பிள்ளை.
மரங்களுக்காக மட்டுமல்ல.. மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதிலும் குளித்தலையின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்.
மரக்கன்று எல்லா இடத்திலும்தான் நடுகிறார்கள். பேருக்கு நடுவார்கள். அப்புறம் அது என்னானது என்று பார்க்க ஆள் இருக்காது. மாமுண்டியா பிள்ளை அப்படி அல்ல.. மரக் கன்றுகளை நட்டு அதற்கு வேலி அமைத்து, தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, பெற்ற பிள்ளையை வளர்ப்பதுபோல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்.
இன்றைக்கு, குட்டி நகரான குளித்தலையின் பல பகுதிகள் பச்சைப் பட்டு உடுத்தியதுபோல மரங்களால் சூழப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் இயற்கையை நேசிக்கும் 76 வயது மாமுண்டியா பிள்ளையின் உழைப்பு.
அக்கிரமங்களைக் கண்டால்..
‘‘சின்ன வயசுலயே, கண்முன்னாடி ஒரு அவலம் நடந்தா கடுமையா கோபம் வரும். ஊருக்கு நியாயம் கேட்கப் போனதாலேயே எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல படிப்பைத் தொடர முடியல. எங்க குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்கிறதால என் சம்பாத்தியத்தை எதிர்பார்க்கல. 36 வயசுல கல்யாணம் முடிச்சு குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிட்டேன். குடும்பத்து வரவு செலவுகளை கவனிக்கிறதுக்காக குளித்தலை பஸ் ஸ்டாண்டுல புத்தகக் கடை வைச்சேன். அதுவும் பேருக்குத்தான். யாராவது பிரச்சினைனு வந்து கூப்பிட்டா, கடையைப் போட்டுட்டு ஓடிருவேன்’’ என்கிறார் பிள்ளை கம்பீரமாக. ‘‘அவரு தொண்டு செய்து பழுத்த பழம். ஆனா, அக்கிரமங்களைக் கண்டா சிறுத்தையா கெளம்பிடுவாரு’’ என்கிறார்கள் குளித்தலை மக்கள்.
தொடரும் சட்டப்போராட்டம்..
கடை வருமானம், வீட்டு வாடகை இவற்றில் ஒரு பகுதியை பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போடுவதற்கும் பொதுநல வழக்குகளுக்கும் செலவு செய்கிறார். காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்யக்கோரி வழக்கு, குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கோரி வழக்கு என உச்ச நீதிமன்றம் வரை பொதுப் பிரச்சினைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
‘‘பிரச்சினை சின்னதா இருந்தா நானே பார்த்துக்குவேன். பெருசா இருந்தா கூட்டத்தை திரட்டிருவேன். குளித்தலை வழியா போற நான்கு வழிச்சாலையை குளித்தலை மக்கள் காவிரி ஆத்துக்கு போகமுடியாத அளவுக்கு உயரமா போட்டாங்க. இதைக் கண்டித்து, ஊருக்கு மையத்துல ஒரு சுரங்கப் பாதை அமைக்கச் சொல்லி ஆட்களை திரட்டி போராட்டம் நடத்தினேன். உடனே சுரங்கப் பாதை போட்டுக் குடுத்தாங்க. இப்படித்தான், குளித்தலை ரயில்வே ஸ்டேஷன்ல நடைமேம்பாலத்தையும் போராடிப் போட வைச்சோம்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிறதால இந்தப் பகுதியில அடிக்கடி விபத்து நடக்குது. குளித்தலை அரசு மருத்துவமனையில அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால, காயம்பட்டவங்கள திருச்சிக்கு கொண்டுபோக வேண்டியிருக்கு. அதனால சில நேரங்கள்ல உயிரிழப்பு ஆகிடுது. அவசர சிகிச்சைப் பிரிவு கொண்டுவரச் சொல்லி போராடிட்டு இருக்கேன்.
இதுமாதிரி, ரெண்டாயிரம் பொம்பளப் புள்ளைங்க படிக்கிற அரசு பெண்கள் பள்ளி இடப்பற்றாக்குறையால் தவிக்குது. பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையை வேற இடத்துக்கு மாத்திட்டா, பள்ளிக்கூடத்துக்கு அந்த இடம் கிடைக்கும். குழந்தைங்க வசதியா படிக்கலாம்’’ என்கிறார் மாமுண்டியா பிள்ளை.
பெரும்பாலும் சமூக அக்கறையுடன் போராடும் பலர் தங்களுக்குப் பிறகு அத்தகையை போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஆட்களை தயார்படுத்துவதில்லை. ஆனால் மாமுண்டியா பிள்ளை, ஒரு இளைஞர் பட்டாளத்தையே தயார்படுத்தி வைத்திருக்கிறார். அவரால் ‘தைரிய உரம்’ போட்டு வளர்க்கப்பட்ட முப்பது இளம் பிள்ளைகள், ‘மாற்றம்’ என்ற பெயரில் இப்போது குளித்தலை பகுதியில் மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.