உயிர் மூச்சு

சென்னையில் சுற்ற சைக்கிள் போதும்: வழிகாட்டும் வெளிநாட்டினர்- நாம் தயாராவது எப்போது?

ஹெச்.ஷேக் மைதீன்

சென்னையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒற்றைச் சக்கர சைக்கிளில் வலம் வருவதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இது சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. சைக்கிள் பயணத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

80 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னையில் 35 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. போக்குவரத்து நெரிசல், வாகனப் புகை மிகுந்த சென்னை சாலைகளில் வாகனத்தில் செல்வது சாமானிய வேலை அல்ல. திடீர் திடீரென உயரும் எரிபொருள் விலை, மோட்டார் வாகன விலைவாசி, சுற்றுச்சூழல் ஆபத்து போன்ற பிரச்சினைகளையும் சமாளித்தாக வேண்டும்.

மேம்பாலங்கள், உயர்மட்ட மேம்பாலம், மெட்ரோ, மோனோ புதிது புதிதாக திட்டங்கள், பணிகள் வந்தாலும் பெரும் சவாலாக முன்நிற்கிறது போக்குவரத்து நெரிசல் பிரச்சினை. அதன் விளைவு.. நம் போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது.

சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு அதிகாரிகள் மத்தியிலும், ஆட்சி செய்வோர் மத்தியிலும் எழுந்துள்ளது. சைக்கிள் பயணத்தை அதிகப்படுத்த சில இடங்களில் தனியாக சைக்கிள் பாதை அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆரோக்கியம் தரும் சைக்கிள்

இந்நிலையில், சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் ஒற்றைச் சக்கர சைக்கிளில் வலம் வருவதை பரவலாக காண முடிகிறது. ஒரே ஒரு சக்கரம், பெடல், சீட் ஆகியவை இணைந்ததுதான் இந்த சைக்கிள். இதில் அவர்கள் செல்வதை பார்க்கும்போது, வேடிக்கையான உணர்வு மட்டுமின்றி, இருசக்கர சைக்கிள் ஓட்டும் ஆர்வமும் ஏற்படுகிறது. சைக்கிள் பயணத்தால் உடல்நலப் பிரச்சினைகள் குறிப்பாக, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை.

இதுதொடர்பாக சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினரும், சேவைக் கரங்கள் நிறுவனருமான எஸ்.திலக் ராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:தனி பாதை அமைக்கணும்

சைக்கிள் பயணத்தை நீண்ட தூர நிகழ்ச்சியாகவே நடத்துகிறோம். சென்னையில் இருந்து கொடைக்கானல், ஏலகிரி மலை, தடா அருவி போன்ற இயற்கையான இடங்களுக்கும், கிராமங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்கி

றோம். எங்களது கிளப் உறுப்பினர்கள் பலர் கார் உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும், அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்கின்றனர். சைக்கிளில் செல்ல பிரத்தியேக பாதைகளை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அமைக்க வேண்டும்.

ஹாங்காங் போன்ற நாடுகளில் சைக்கிளில் செல்வோருக்காக என ரயிலில் தனி பெட்டிகள் உள்ளன. வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரை சைக்கிளில் வருபவர்கள், ரயிலிலும் கூடவே சைக்கிளை எடுத்துச் செல்வார்கள். அரசும் சமூகமும் சைக்கிள் பயணத்தை ஊக்குவித்தால், போக்குவரத்து பிரச்சினைகள், எரிபொருள் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கிய வாழ்வும் வாழலாம்.

சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க www.chennaitrekkers.org மற்றும் cycle to office என்ற பேஸ் புக் பக்கம் உள்ளது. நீண்ட தூர சைக்கிள் பயணம் செய்ய விரும்புவோர் எங்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு திலக் ராஜ் கூறினார்.

ஜரோப்பா 'ஜான்'

ஒற்றைச் சக்கர சைக்கிளில் சென்னை வாலாஜா சாலையில் வலம் வந்தவர் பெயர் ஜான். சென்னையை சுற்றிப்பார்க்க ஐரோப்பாவில் இருந்து வந்திருக்கிறார். அண்ணா சாலையில் இருந்து மெரினாவுக்கு சைக்கிளில் செல்வதாகக் கூறினார். தன் உடமைகளுடன் சைக்கிளையும் கூடவே எடுத்து வந்ததாக கூறினார். இது உடற்பயிற்சிக்காக வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் சைக்கிள். தமிழகத்தில் விற்கப்படுவது இல்லை. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலையுள்ள இந்த சைக்கிளை தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்று மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT