உயிர் மூச்சு

இயற்கை விவசாயத்தில் துளிர்க்கும் திராட்சைக் கொடிகள்

பிருந்தா சீனிவாசன்

இன்று செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இல்லாமல் விவசாயம் செய்வது மிகக் குறைவான அளவிலேயே நடைபெற்றுவருகிறது. சூழல் மாசுபாட்டால் வளமிழந்து நிற்கும் மண்ணில் இருந்து, நல்ல மகசூலைப் பெறுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் பதிலாக இருக்கிறது. ஆனால், இயற்கை முறையில் திராட்சை சாகுபடியைச் சவாலாக எடுத்துக்கொண்டு செய்து வருகிறார் தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த கே.கே.பட்டியை (கம்ய கொண்டான் பட்டி) சேர்ந்த ராஜ்குமார்.

அதுவும் திராட்சையைப் பொறுத்தவரை பயிரிடுவதில் தொடங்கி, அறுவடை வரை ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், உரங்களின் துணை அதிகம் தேவைப்படுகிறது. இதற்குக் காரணம், மற்ற பயிர்களைவிட இதற்கு நேரக்கூடிய நோய்த்தொற்றும் பூச்சித் தாக்குதலும் அதிகம்.

ஐந்தரை ஏக்கர் கொண்ட திராட்சைத் தோட்டத்தை, இயற்கை விவசாயத்துக்கான ஆராய்ச்சிக் களமாக இவர் மாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் நிறைய தோல்விகளையும் நஷ்டத்தையும் சந்தித்திருக்கிறார். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின்படி திராட்சைத் தோட்டத்துக்கான இயற்கை உரத்தையும், பூச்சிக்கொல்லியையும் இவரே தயாரிக்கிறார்.

இருந்தாலும் தொடர்ந்து நூறு சதவீதம் இயற்கையையே நம்பியிருக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறார் ராஜ்குமார்.

"இந்த உலகத்துக்கே படியளக்கும் மண்ணை மலடாக்கிவிட்டு, அடுத்த வேளை உணவைத் தேடி எங்கே போகப் போகிறோம்? கட்டடங்களை இடித்தா பயிர் செய்ய முடியும்? அதனால்தான் நம்மால் முடிந்த அளவுக்கு மண்ணின் வளத்தைப் பாதுகாக்க முடிவு செய்தேன். அதற்கு மறைந்த நம்மாழ்வார் ஐயாவும் வழிகாட்டினார். முதல் கட்டமாக, திராட்சையை முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே பயிரிட முடிவு செய்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை. பூச்சிகளும் அதிகமாகத் தாக்கின" என்கிற ராஜ்குமார், தோல்விக்குப் பின்னும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அடுத்தடுத்துப் பிரச்சினைகள் தலைதூக்கியபோதும், இயற்கை விவசாயம் என்கிற கொள்கையில் உறுதியாக நின்றிருக்கிறார்.

நூறு சதவீதமே இலக்கு

"என் நிலத்தில் எப்படிப் பயிர் செய்வது என்பதைப் பற்றி மட்டும்தான் நான் முடிவு செய்ய முடியும். அதில் நானே வெற்றியைத் தொடாதபோது அடுத்தவர்களையும் என்னைப் போலவே சோதனை முயற்சியில் இறங்கச் சொல்ல முடியுமா? சுற்றியிருக்கும் வயல்களில் பூச்சி மருந்து அடித்தால், அங்கிருக்கும் பூச்சிகள் எல்லாம் என் திராட்சைத் தோட்டத்துக்குள் புகுந்துவிடுவது இயல்புதானே. அளவுக்கு அதிகமான பூச்சிகளை, இயற்கை பூச்சிக்கொல்லிகளால் முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் குறைந்த அளவு செயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை. அதுவும் கொடிகளுக்கு மட்டும்தான். மண்ணுக்குள் எந்த ரசாயனத்தையும் நான் அனுமதிப்பது இல்லை. கொடிகளுக்கு அடிக்கிற ரசாயனப் பூச்சிக்கொல்லிகளையும் முழுவதுமாக நிறுத்துவதற்காகத் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்கிறார் ராஜ்குமார்.

தோற்றுப் போய்விடுவோமோ என்கிற பயம்தான் ஆரோக்கிய மான முயற்சிகளைக்கூட முடக்கிப்போட்டுவிடும். ஆனால் ராஜ்குமார் போன்றவர்கள்தான் அந்த முட்டுக்கட்டைகளையும் தங்கள் முயற்சிக்கான ஏணியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நம்பிக்கையே இந்த மண்ணை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT