முண்டின்சியா கலபுரா (சிங்கப்பூர் செர்ரி) மரத்தைப் போன்றே மிக விரைவாக வளரும் உள்ளூர் மரங்களும் உள்ளன. அவற்றை உள்ளூர் முதியவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். வனத்துறையில் பட்டறிவுமிக்க அலுவலர்கள், இதற்குப் பெரிதும் உதவுவார்கள். சவுக்கு மரம் நல்லதொரு காற்று தடுப்பான். கிலுவை என்று இலை அதிகம் வளராத மரம் ஒன்று உண்டு. இது வேலியாகவும் காட்டுத் தடுப்பானாகவும் செயல்படும்.
பனை மிகவும் பொருத்தமான மரம். பனங்கொட்டைகளை வேலி ஓரங்களில் நெருக்கமாக, அதாவது ஐந்தடிக்கு ஒன்றாகப் புதைப்பதன் மூலம், அவை வளர்ந்து நல்ல காற்றுத் தடுப்பானாகவும் வேலியாகவும் இருக்கும். ஆனால், பனை வளர்வதற்கான கால அளவு அதிகம் தேவை.
கோபுரக் கற்றாழை என்றொரு தாவரம் உள்ளது. இது மிகவும் மோசமான வறட்சியிலும் வளர்ந்துவிடும். இவற்றை வேலி ஓரமாக வளர்ப்பதன் மூலம் காற்றைத் தடுக்கலாம்.
வேப்ப மரங்களைச் சரியான இடைவெளியில் மாறிமாறி நட்டு வளர்த்தால், அவை ஆழமாக வேர்களை இறக்கி, மிகச் சிறந்த காற்றுத் தடுப்பானாகச் செயல்படும். அதிக நிலம் உள்ளவர்கள் ஆல மரத்தை நட்டு வளர்க்கலாம். இவை பெருங்காற்றையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.
மற்றத் தடுப்பு முயற்சிகள்
நிலத்தின் ஓரங்களில் கல்வேலி அமைத்து, அவற்றின் மீது கொடிகளைப் பரவவிட்டும் காற்றின் வேகத்தைத் தடுக்க முடியும். அதேபோலப் பருக்கைக் கற்கள் அதிகம் கிடைக்கும் இடங்களில் கற்களைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கலாம். இவையும் காற்றின் வேகத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
காலியான சிமெண்ட் பைகளில் மண்ணை நிரப்பி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அவற்றையும் தடுப்பரண்களாக வைக்கலாம். மண் அணைகளை உயரமாக அமைத்து அவற்றையும் காற்றுத் தடுப்பான்களாக மாற்றலாம்.
பந்தல் வேண்டாம்
இந்த அனைத்து முறைகளையும் பண்ணையின் தேவையையும், பண்ணையாளரின் வசதியையும் பொறுத்து அமைத்துக்கொள்ள வேண்டும். சாகுபடி செய்யும்போது கூம்பு வடிவப் பயிர்ப்பந்தல் அமைத்துக்கொண்டு, அதில் கொடிக் காய்களைப் பயிர் செய்தால் ஓரளவு காற்றின் தாக்கத்தைத் தடுத்துக்கொள்ளலாம். ஆனால், திறந்த வெளியில் மிகப் பெரிய பந்தல்களை அமைப்பது நல்லதல்ல. குறிப்பாகப் பசுமைக் கூடாரங்களைக் காற்றுத் தடுப்பு இல்லாத இடங்களில் அமைப்பது ஆபத்தானது. ஏனெனில், அவை உடனடியாகக் காற்றால் தூக்கி எறியப்படும். இதில் எனக்கு நேரடியான அனுபவம் உண்டு. குறிப்பாகக் காற்றடிக்கும் காலங்களில் பெரும் பந்தல்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தகரம், தீ - எச்சரிக்கை
காற்றின் வேகத்தைப் பொறுத்துக் கட்டுமானங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். வேகமாகக் காற்றடிக்கும் இடங்களில் மெல்லிய தகரங்களைக் கொண்டு கொட்டகை அமைக்கக் கூடாது. கடுங்காற்று வீசும்போது தகரக் கூரைகள் பிய்ந்து பறந்துவிடும். கூடவே இது வேறு பல ஆபத்துகளையும் ஏற்படுத்திவிடும். எனவே, உயரத்தைக் குறைத்துக் கொட்டகைகளை அமைக்க வேண்டும்.
உடனே நெருப்பு பற்றிக் கொள்ளும்படியான மரங்கள், குறிப்பாகச் சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட வேண்டும். பண்ணைக் கழிவுகளைத் தேவையற்ற முறையில் குவித்து வைக்கக் கூடாது. அவை தீப்பற்றும் தன்மை கொண்டவை. வைக்கோல் படப்புகள், கூரை வீடுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பான முறையில், குறிப்பாகக் காற்றின் வேகத்தை அனுசரித்து அமைத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com