‘ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமியுங்கள். ஒழுகும் குழாயை மூடுங்கள்’ இது நாம் அடிக்கடி கேட்கும், காணும் ஒரு வாசகம். ஒரு நொடிக்கு ஒரு சொட்டு நீர் ஒழுகினால் நாளொன்றுக்கு 30 லிட்டர் நீர் செலவாகும் என்பது என்னவோ உண்மைதான். நல்லது, நாம் அனைவரும் குழாயை மூடிவிடுவோம். அதனால் மட்டும் நாடெங்கும் நீர் சேமிக்கப்பட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு தீர்ந்துவிடுமா?
நிதர்சனத்தில் அப்படி நடக்கப் போவதில்லை. நீர் சேமிப்பில் மக்களுக்கும் பங்குண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால், அப்பங்கு மக்களுக்கு மட்டுமே உரியதல்ல. மக்களைவிட அரசுக்கே அதில் பெரும் பங்கு உண்டு. ஏனென்றால், அதுதான் நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறது. ஆனால், இத்தகைய பரப்புரைகள் நீர் சேமிப்புக்கான பொறுப்பையும், நீர்ப் பற்றாக்குறைக்கான காரணங்களையும் முழுக்கவும் மக்கள் தலையில் மட்டுமே சுமத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இதனால் அரசு இயந்திரத்தின் இயலாமை, நீர் மேலாண்மையில் அதன் தோல்வி போன்ற காரணிகள் வெகு திறமையாகப் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
சாம்பல் நீர்
தமிழகத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை இயற்கையானதல்ல. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றே. உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதேயளவு நீர்தான் இன்றும் இருக்கிறது. அதில் ஒரு சொட்டுகூட அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. அப்படியெனில் இருந்த நீரெல்லாம் எங்கே போனது? இதற்கான விடையை நன்னீரின் இயல்பு சொல்லிவிடும். நன்னீரை வண்ணங்களின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கிறார்கள் 1) பச்சை நீர், 2) நீல நீர், 3) சாம்பல் நீர்
பச்சை நீர் என்பது வளி மண்டலத்து நீர். நீல நீர் என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகள். இவை இரண்டுமே புவி தோன்றிய காலத்திலிருந்தே நீர் சுழற்சியால் நிலைபெற்று இருந்துவருபவை. இவற்றோடு மனிதர் உருவாக்கிய சாம்பல் நீர் சேர்ந்த பிறகே நீர்ச் சிக்கல் தோன்றியது. சாம்பல் நீர் என்பது கழிவு நீர். தொழிற்புரட்சிக்கும் நகரமயமாக்கலுக்கும் பிறகு பேரளவில் பெருகத் தொடங்கிய சாம்பல் நீர், நீர்நிலைகளோடு நிலத்தடி நீரையும் சேர்த்துப் பாழாக்க, நன்னீரின் அளவு குறைந்தது. உலகளவில் சாம்பல் நீரின் அளவு 2025-ல் 18,000 கன கிலோமீட்டராக அதிகரிக்கும் எனும் தகவல் பேராபத்து நம்மைத் தாக்கப் போவதற்கான அறிகுறி என்பதில் சந்தேகமில்லை.
எடுத்துக்காட்டாக, ஒரு லிட்டர் ‘பிரேக் ஆயில்’ ஒரு குளத்தில் தவறிக் கொட்டிவிட்டால், அது ஒரு லட்சத்து 58 ஆயிரம் லிட்டர் நன்னீரைப் பாழாக்கிவிடும். அப்படியெனில் தமிழகம் முழுக்க வேதிப்பொருட்களைக் கையாளும் தொழிற்சாலைகளால் மொத்தம் எத்தனை கோடி கன லிட்டர் நீர் பாழாகியிருக்கும்? தமிழகத்துக்கான பதிலைச் சொல்ல நொய்யலும் பாலாறுமே போதும்.
மணல் எனும் நீர் வங்கி
சரி, இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? முதலில் புவியியல் பாடத்தைத் திரும்பவும் கற்க வேண்டும். மழைமறைவுப் பகுதியான தமிழகத்தின் மொத்தப் பரப்பில் 27% மட்டுமே நீர் ஊறும் இயல்பு (Water Transmission) கொண்டது. மீதமுள்ள 73% பகுதியில் பலவிதப் பாறைகள் இருப்பதால், அந்த இயல்பு குறைவு. இந்த இருபத்தேழு விழுக்காடும் ஆற்றுப்படுகைகளில் மட்டுமே அமைந்துள்ளது. தமிழகத்தில் 33 ஆறுகள் இருந்தாலும், 17 ஆற்றுப்படுகைகள் மட்டுமே நீர் ஊறும் இயல்பு கொண்டவை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
நீர் ஊறும் இயல்புக்கு அடிப்படையாக இருப்பது மணலே. மணல் என்பது நிலத்தடி நீர்த் தொட்டியின் மறுவடிவம். இது அரசுக்குத் தெரியாது என்பதைக் குழந்தைகள்கூட நம்ப மாட்டார்கள். ஒவ்வொரு லோடு மணலிலும் ஒழுகும் நீரின் அளவு ஆயிரம் லிட்டர் எனில் ஒட்டுமொத்த ஆற்று மணலும் எவ்வளவு கோடி லிட்டர் நீரைச் சேமித்துத் தந்திருக்கும்? ஏன் இவர்கள் நம்மை மட்டும் குழாயை மூடச் சொல்கிறார்கள் என்பதன் மர்மம் புரிகிறதா?
பருவமழை எங்கே போகிறது?
இரு பருவ மழைகளிலும் வடகிழக்குப் பருவமழையே நம் உயிர் ஊற்று. ஆனால், இது வெறும் 23 மழை நாட்கள் மட்டுமே. இதைக் கணக்கிட்டே நம் முன்னோர்கள் மழைநீரைச் சேமிக்க ஏரி, குளங்களை உருவாக்கிவைத்திருந்தார்கள். அதிலும் சங்கிலித் தொடர் ஏரிகள், உலகம் வியந்த ஒரு தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பத்தின் மேல்தான் குப்பைகள் கொட்டப்பட்டன. கட்டிடங்கள் கட்டப்பட்டன. தமிழகத்திலுள்ள மொத்த ஏரிகளின் கொள்ளளவு 6,000 மில்லியன் கன மீட்டர். இவற்றுக்கு உயிரூட்டினாலே நமது நீர்ச் சிக்கல் தீரும். அப்படித் தீர்ந்துவிட்டால், பிறகு எப்படித் தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் வாழ்வது?
இரு பருவ மழைகளிலும் வடகிழக்குப் பருவமழையே நம் உயிர் ஊற்று. ஆனால், இது வெறும் 23 மழை நாட்கள் மட்டுமே. இதைக் கணக்கிட்டே நம் முன்னோர்கள் மழைநீரைச் சேமிக்க ஏரி, குளங்களை உருவாக்கிவைத்திருந்தார்கள். அதிலும் சங்கிலித் தொடர் ஏரிகள், உலகம் வியந்த ஒரு தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பத்தின் மேல்தான் குப்பைகள் கொட்டப்பட்டன. கட்டிடங்கள் கட்டப்பட்டன. தமிழகத்திலுள்ள மொத்த ஏரிகளின் கொள்ளளவு 6,000 மில்லியன் கன மீட்டர். இவற்றுக்கு உயிரூட்டினாலே நமது நீர்ச் சிக்கல் தீரும். அப்படித் தீர்ந்துவிட்டால், பிறகு எப்படித் தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் வாழ்வது?
தென்மேற்குப் பருவமழையால் நமக்கு நேரடியாகப் பலன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் ஆறுகளை நிரப்புவது என்னவோ, அதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சோலைக்காடு நதிகளின் தொட்டில். ஆனால், அறிவியல்பூர்வமற்ற காட்டழிப்பு அத்தொட்டிலைக் கொன்று, பருவ மழையின் அளவைக் குறைத்துவிட்டது. தேயிலைத் தோட்டங்களால் இம்மலைகள் நீர்ப்பிடிப்புத் திறனை இழந்து நிற்கின்றன. சட்டவிரோதமாக இயங்கும் தேயிலைத் தோட்டங்கள் வணிகத்தைப் பெருக்கிக்கொண்டிருக்க, காப்பி பயிரிடும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோ மழையைப் பெருமளவு கொன்றுவருகின்றன.
நீர் திருட்டு
இதையும் மீறிக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச நீரையும் பசுமைப் புரட்சியின் தாகம் குடித்துத் தீர்க்கிறது. முன்பு வியக்கத்தக்க நீர் மேலாண்மையைக் கொண்டிருந்தவர்கள் நாம். நிலத்தின் மேற்பரப்பிலுள்ள நீர்நிலைகள் பரப்பு நீர் (Surface Water) எனப்படுகிறது. மண்ணின் மேலடுக்கில் இருக்கும் நிலத்தடி நீர் கரப்பு நீர் (Subsurface Water). கீழடுக்கில் அமைந்திருந்தது நீரகம் (Aquifer). இதில் கரப்பு நீர் காலியாகிப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால், ஆழ்துளைக் கிணறுகள் நீரகத்தின் நீரை இழுத்து உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. 77% நீரக நீரை உறிஞ்சி இந்தியாவிலேயே அதிக நீரக நீரை உறிஞ்சும் மாநிலம் என்ற அவலப் புகழைத் தமிழகம் பெற்றிருக்கிறது.
கரப்பு நீர் அளவைக் குறையாமல் பாதுகாத்து வைத்திருந்ததே நம் நீர் மேலாண்மை. இதையே அறிவியல் ‘வளங்குன்றா நீர் மேலாண்மை’ (Sustainability Water Management) என்கிறது. இது மழைநீர் சேமிப்பால் மட்டுமே இயலும் என்பதால் மரங்களின் அடர்த்தியும் நீர்நிறைந்த குளம் போன்ற பல்லுயிரிய மையங்களும் பாதுகாக்கப்பட்டன. அன்று வேளாண்மைக்கும்கூடக் கரப்பு நீரே பயன்பட்டது. இன்றோ பரப்பு நீருக்கு அடிப்படையாகத் திகழும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், வரத்துக் கால்வாய்கள் அழிக்கப்பட்டுக் கரப்பு நீருக்கு வழியில்லாமல் போய்விட்டது. ஆனால், இன்றும் ஏறக்குறைய அதே அளவு மழையைத்தான் இயற்கை தந்துகொண்டிருக்கிறது.
ஆனால் சட்டங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும் துருப்பிடித்துக் கிடக்கின்றனவே! போரூர் ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டால் சோமங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடம் தருகிறது அரசு நிர்வாகம். குளம் தொட்டு வளம் பெருக்கச் சொன்ன சங்கப் புலவன் சிரிக்கிறான்.
காணாமல் போகும் நீர்
நகரமயமாக்கல் இன்னொரு சிக்கல். உலக நலவாழ்வு நிறுவனத்தின் (WHO) கணக்குப்படி நகர மனிதர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு 140 லிட்டர். சிற்றூர் மனிதர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு 40 லிட்டர். வேலைவாய்ப்பை நகரத்தில் மட்டுமே குவித்து 40 லிட்டர் நீரில் புழங்க வேண்டிய மக்களை, 140 லிட்டர் தேவைப்படும் நகரத்தை நோக்கி இழுப்பது என்ன அறிவுடமை? மின்சாரமும் நீர்தான். ஆடம்பர மின்னலங்காரம், கால்ஃப் திடல்கள், நீர் விளையாட்டு பூங்காக்கள் போன்ற மிகைநீர் பயன்பாடு கொண்ட அம்சங்கள், நீர்ப் பற்றாக்குறை நிறைந்த நம் மாநிலத்தில் பெருகிக்கொண்டே போகின்றனவே.
மறைநீர் (Virtual water) பற்றிப் பேசத் தொடங்கி ஆண்டுகள் பல ஓடிவிட்டன. நம்மைவிட இரு மடங்கு குறைந்த நீராதாரமுள்ள சீனாவோ மறைநீர் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி ஒன்றரை மடங்கு நீரைச் சேமிக்கிறது. இவ்வளவுக்கும் சீனாவின் ஏற்றுமதி பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். மறைநீர் அதிகமுள்ள அரிசி, கோதுமையை அந்நாடு ஏற்றுமதி செய்வதில்லை.
வெகு அண்மையில்தான் மாநில நீர்வள மேலாண்மை முகமையின் மேனாள் இயக்குநர் ஒருவர், ‘மறைநீர் ஏற்றுமதியைக் குறைத்தால் நீர்ப் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்’ என்று வாய் திறந்திருக்கிறார். அதுவும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு. இப்போது பதவியில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அதிகாரிகளே இப்படி என்றால், அரசு இயந்திரமோ இன்னமும் உறங்கிக்கொண்டே இருக்கிறது. இப்படியே உறங்கினால் முகத்தில் தெளித்து எழுப்புவதற்குக்கூட நாளை குழாயில் நீர் சொட்டப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
- கட்டுரையாளர், சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com