பனிக் கரடிக்கு இது போதாத காலம். ஆமாம், ஆர்டிக் துருவப் பிரதேசத்தில் மட்டுமே வாழ்ந்து வரும் இந்த விலங்கு கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாக எச்சரிக்கிறது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்.
இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்த விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.
புவி வெப்பமடைதல் பிரச்சினை காரணமாக ஆர்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது முக்கியப் பிரச்சினையாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் உயர்ந்தது, பிறகு புதுத் தண்ணீர் பனிப்பாறையாக உறைந்ததால் பனிக் கரடிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பனிக் கரடிகள் உணவின்றி மடியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவருவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, கனடாவை ஒட்டியுள்ள ஆர்டிக் மேற்கு ஹட்சன் விரிகுடாவில் வாழும் பனிக் கரடிகள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பனிக் கரடிகளின் முக்கிய உணவு கடல்சிங்கம் (சீல்). ஆனால், சீல்கள் வேட்டையாடப்பட்டு எஞ்சிய மாமிசம் மட்டுமே பனிக் கரடிகளுக்கு கிடைக்கிறது. இதனால், ஆர்டிக் பகுதிகளில் வாழும் மான்கள், பனி வாத்துகள் ஆகியவற்றை தற்போது அவை உண்பதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே அருகி வரும் இனமாகவும், பாதுகாக்க வேண்டிய இனமாகவும் பனிக் கரடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புவி வெப்ப மடைதல் காரணமாகப் பனிப் பிரதேசங்களில் மாறிமாறி ஏற்படும் பருவநிலை காரணமாக, இவற்றுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வேட்டையாடுவதால் பனிக் கரடிகள் இனம் வேகமாக குறைந்து வருவ தாக சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. தற்போது உணவு பழக்கம் மாறுவதால் பனிக் கரடிகளுக்கு ஆபத்து அதிகரிக்குமோ என்று ஆய்வறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் கோடைகாலம் தொடங்கும் என்பதால் பிரச்சினை மோசமடையும் என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்ப மடைதல் பிரச்சினைகளில் இருந்து பனிக் கரடிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச இயற்கை வளம், இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.