ஜோத்தம்பட்டி மனோகரனிடம் மாடுகள், கோழிகள், வாத்து, வான்கோழி போன்ற கால்நடைகள் உள்ளன. கோழிகள் இவரது வீட்டின் புரதத் தேவையைப் பெருமளவு நிறைவு செய்துவிடுகின்றன. இதன் மூலம் முட்டைகள், இறைச்சிக்கான பெருமளவு செலவு தடுக்கப்படுகிறது. இதற்கென்று தனியாகக் கணக்குப்போட்டுப் பார்த்தால் பெரிய தொகை வரும். நகரவாசிகள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்குக் கட்டுப்படியாகாமல் போக, இப்படிப்பட்ட செலவுகளே காரணமாகின்றன. எளிமையான, இன்பமான வாழ்க்கையை இப்படிச் சிக்கலான, துன்பமான வாழ்க்கையாக மாற்றிக்கொண்டது நாம்தான்” என்கிறார் மனோகரன்.
நச்சு வளையம்
அடுத்ததாக இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்து, அதை நேரடியாகச் சந்தைப்படுத்தவும் செய்கிறார். ஐந்து ஏக்கர் பரப்பில், நெல் சாகுபடி செய்கிறார். ரசாயன வேளாண்மை செய்த காலத்தில் ஏக்கருக்கு ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய்வரை பணமாகச் செலவு இருந்தது. இப்போது பதினெட்டாயிரம் ரூபாயாக அது குறைந்திருக்கிறது. அதாவது குடும்பத்தாருடன் இவர் செய்யும் வேலைகள் மூலம் பெருமளவு செலவு குறைந்துள்ளது. முன்பு எல்லா இடுபொருள்களையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. அதற்குத் தேவையான பணத்துக்குக் கடன் வாங்க வேண்டியதாயிற்று, கடனை அடைக்கச் சந்தையில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இப்படியான ஒரு நச்சு வளையத்துக்குள் உழவர்கள் தேவையின்றி மாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது.
தெளிப்புக் கரைசல்கள்
இப்போது பெருமளவு சொந்த உழைப்பாலேயே இடுபொருட்கள் தயாரிக்கப்படுவதால், பணம் தேவைப்படுவதில்லை. மற்றக் குடும்பத் தேவைகளுக்குத்தான் பணம் தேவைப்படுகிறது. இப்படியாக, உழவர்கள் தாக்குப்பிடிக்கும் நிலையை எட்டிவிட முடியும். இவர் நீண்ட நாட்களாக இயற்கைமுறை நெல் சாகுபடி செய்துவருவதால் பெரிய சிரமம் இல்லாமல் விளைச்சலை எடுக்கிறார்.
முதலில் பல பயிர் விதைத்து அறுபது நாள் வளர்த்து, அதை மடக்கி உழவு செய்துகொள்ள வேண்டும். அதற்குத் தோதாக நாற்றங்காலைத் தயார்செய்துகொள்ள வேண்டும். ஒற்றை நெல் சாகுபடியும் செய்யலாம், சூழலுக்கு ஏற்ப அடர் நடவும் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு முறை பாசனத்தின் போதும், அமுதக் கரைசல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இவரிடம் தெளிப்புக் கரைசல்கள் எப்போதும் தயாராக இருக்கும். குறிப்பாகப் பஞ்சகவ்யம், திறமி, மீன்பாகு போன்றவற்றை வைத்திருப்பார். தன்னுடைய அனுபவ அடிப்படையில் நெல்லின் வளர்ச்சி முறையைப் பார்த்துத் திறமிக் கரைசல் அல்லது மீன்பாகு அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றைத் தேவைக்கு ஏற்பத் தெளிப்பு செய்கிறார்.
முதலில் நெல் சாகுபடிக்கு வருபவர்கள் மேலே சொன்ன கரைசல்களை வாரம் ஒருமுறை மாற்றி மாற்றி தெளிப்பு செய்தால், சிறப்பாக இருக்கும் என்பது இவரது கருத்து. அதேநேரம், பஞ்சகவ்யம் போன்ற மாட்டுச் சிறுநீரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நெல் மணிகள் பெருத்து, சன்ன ரக அரிசியானது பெருவெட்டு அரிசியாக மாறிவிடும்.
விநோத அரிசி விலை
இவர் நெல்லை அறுவடை செய்து குறிப்பிட்ட காலம் வைத்திருந்து அரிசியாக்குகிறார். அப்போதுதான் அரிசி சுவையாக இருக்கும். அடுத்ததாக அரிசிக்கு இவர் விலை நிர்ணயிக்கும் முறை வியப்பானது. செலவுகளின் அடிப்படையில் விலையை உறுதிசெய்கிறார். உழுவது முதல் இடுபொருள்வரை சாகுபடிச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார், இத்துடன் மாதத்துக்கு ஒரு விழுக்காடு (ஆண்டுக்கு 12%) என்று வட்டியைச் சேர்த்துக்கொள்கிறார். அத்துடன் தனக்கும் தனது மனைவிக்கும் இரண்டு ஆள் சம்பளமாக ஐந்து மாதங்கள் சேர்த்துக்கொள்கிறார். தன்னுடன் உழைக்கும் சக தொழிலாளி சம்பளத்தையே தனது சம்பளமாக எடுத்துக்கொள்கிறார்.
அத்துடன் அரிசியாக மாற்றுவதற்குரிய ஆலைக் கட்டணம், போக்குவரத்துச் செலவு ஆகியவற்றைச் சேர்த்து, அதிலிருந்து ஒரு கிலோ அரிசிக்கான விலையை உறுதி செய்கிறார். பல நேரம் இவரது அரிசி விலை சந்தையைவிட குறைவாகவும் இருக்கும். சில நேரங்களில் கூடுதலாகவும் இருக்கும்.
உழவர் கூட்டமைப்பு
உழவர்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், எந்தப் பகுதிக்கு எந்த நிலத்துக்கு எந்த வகையான நெல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்பதைக் கண்டறிந்து சாகுபடி செய்தால், பெரும்பாலும் சிக்கல் வருவதே இல்லை. புதிய நெல் வகையைச் சாகுபடி செய்யும்போது பல தொல்லைகள் வருகின்றன என்கிறார் மனோகரன்.
இவருடன் சேர்ந்து சில உழவர்கள் கூட்டாக ‘அமராவதி உழவர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி விளைச்சலைச் சந்தைப்படுத்துகின்றனர். இதன்மூலம் சந்தை தாக்குதலிலிருந்து இவர்கள் ஓரளவு தப்பித்துவருகின்றனர். அத்துடன், இப்பகுதியைச் சேர்ந்த பல உழவர்களுக்குப் பயிற்சியும் ஆலோசனையும் வழங்கிவருகிறார் முன்னத்தி ஏரான மனோகரன்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com மனோகரன் தொடர்புக்கு: 90038 21430
(அடுத்த வாரம்: மண்ணை வளமாக்கும் மந்திரம்)