பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த புலியும் சிறுத்தையும் நம் நாட்டில் வாழ எப்படிப் போராடி வருகின்றனவோ, அதேபோல அவை சார்ந்து குடும்பத்தைச் சேர்ந்த பனிச்சிறுத்தையும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. வெள்ளிப் பனிமலையின் மீது கம்பீரமாக உலவி வந்த பனிச்சிறுத்தைகள், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெறும் ராணுவ மோதல்கள், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரின் காரணமாக மோசமான நிலையில் உள்ளன.
சமவெளிப் பகுதியில் வாழும் சிறுத்தையைப் போலிருந்தாலும், பனி மூடிய மலைச் சிகரங்களில் வாழத் தகவமைத்துக் கொண்டவை பனிச்சிறுத்தைகள்.
முக்கியத்துவமில்லை
சீனா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றியுள்ள 11 நாடுகளிலும் இந்தியாவிலும் இருக்கும் பனிமலைகளில் வாழ்பவை பனிச்சிறுத்தைகள். இமயமலைப் பகுதிகளில் இவை தென்படுகின்றன.
உலகம் முழுவதும் 4,000 முதல் 7,000 வரை இவற்றின் எண்ணிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது 2003-ம் ஆண்டின் கணக்கு. அழிந்து வரும் இந்த உயிரினத்தைப் பாதுகாக்க இச்சிறுத்தைகள் வாழும் நாடுகள் போதிய முக்கியத்துவம் தராததால், இவற்றின் எண்ணிக்கை தீர்மானமாக அறிவிக்கப்படவில்லை.
கள்ளவேட்டை
புலி, சிறுத்தைகளைப் போலவே தோல், எலும்புகளுக்காக இந்தச் சிறுத்தைகள் தொடர்ச்சியாகக் கள்ளவேட்டை ஆடப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனால் 1975-ம் ஆண்டில் ‘அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட உயிரின வர்த்தகத்துக்கான சர்வதேசப் பேரவை ' (Convention on International Trade in Endangered Species) பனிச்சிறுத்தைகளைக் கள்ளவேட்டையாடுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆனாலும், இந்தச் சிறுத்தைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் பனிச்சிறுத்தையின் தோலுக்கு இருக்கும் பலமான கிராக்கியும், இச்சிறுத்தைகளுக்கு வளர்ப்புக் கால்நடைகள் இரையாக மாறுவதும்தான். இமய மலைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு, அவர்களிடம் உள்ள கால்நடைகளே முக்கிய வாழ்வாதாரம்.
இரைக்குப் பஞ்சம்
இமயமலைப் பகுதிகளில் இயற்கையாகத் தென்படும் ஆடுகள், மான்கள் போன்றவற்றைப் பனிச்சிறுத்தைகள் இரையாக்கிக் கொள்கின்றன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்கள், பனிச்சிறுத்தைகள் வாழும் மலைத்தொடர்களில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மோதல் போன்ற சம்பவங்களால் பனிச்சிறுத்தைகளின் வாழிடம் மோசமாக அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவற்றின் உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால், மக்கள் வளர்க்கும் கால்நடைகளை இந்தச் சிறுத்தைகள் இரையாக்கிக் கொள்கின்றன. இதைத் தடுக்க, மக்களே இந்தச் சிறுத்தைகளை வேட்டையாடத் தொடங்கிவிட்டனர். அதற்குப் பிறகும், பனிச்சிறுத்தையின் உடல் பாகங்கள் கள்ளச் சந்தைக்கே செல்கின்றன.
அதனால் பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
'வெள்ளிப் பனிமலை மீதுலாவ' மனிதர்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதா என்ன?