ஒடிசா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பல்லுயிர் வளம் நிறைந்த நியமகிரி மலை உள்ளது. இந்த மலைச்சிகரங்களில் இருந்து உருவாகும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் நீராதராமாக விளங்குகின்றன. இங்குள்ள அடர் காடு, வேங்கைகளின் வாழிடம். யானைகளின் வழித்தடம் இந்த வழியே செல்கிறது.
இந்த மலைப்பகுதியில் வாழும் எட்டாயிரம் மக்கள்தொகை கொண்ட டோங்க்ரியா கோந்த் எனும் பழங்குடிகளுக்கு இந்த மலையே தெய்வம்.
13 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ், நியமகிரி மலைப்பகுதியில் பாக்சைட் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்றது. விளைவாக, 1,660 ஏக்கர் வளமான மலைப்பகுதி அழிவை எதிர்நோக்கியது. நியமகிரி மலையைச் சீர்குலைக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தொடக்கப் புள்ளியாகப் பாக்சைட் எடுப்பதற்குப் பெற்ற இந்த அனுமதி அமைந்தது.
எதிர்ப்பின் அடையாளம்
ஒடிசாவில் பிறந்து, வளர்ந்த பிரஃபுல்லா சமந்தராவுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இது குறித்து எதுவும் அறியாத அப்பாவிப் பழங்குடிகளான டோங்க்ரியா கோந்த் மக்களையும் நியமகிரி மலையையும் பாதுகாக்க வேண்டுமென அவர் முடிவெடுத்தார்.
அவர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படும் ஆபத்து குறித்துப் பழங்குடிகளை எச்சரித்தார். மக்களுடன் இணைந்து பிரசாரம், சிறு கூட்டங்கள், பேரணிகள் மூலம் சுரங்க வேலைகள் தொடராமல் இருக்கப் போராடினார். மற்றொருபுறம் வேதாந்தா பாக்சைட் சுரங்கத்தைத் தடைசெய்யும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் முதல் ஆளாகத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே வேதாந்தாவின் சுற்றுச்சூழல், மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அந்நிறுவன முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற்றனர்.
திருப்பு முனைத் தீர்ப்பு
இந்த வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. அதன்படி, வேதாந்தா சுரங்கம் அமைப்பது தொடர்பான தங்கள் ஆதரவு, எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளூர் சமூகங்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 2013 ஆகஸ்ட் மாதம் 12 பழங்குடி பஞ்சாயத்துகளும் சுரங்கத்துக்கு எதிராக வாக்களித்தன. இதைத் தொடர்ந்து பகுதியளவு செயல்பாடுகளை நிறுத்திய வேதாந்தா நிறுவனம், 2015 ஆகஸ்ட்டில் அலுமினியச் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றிலும் மூட முடிவெடுத்தது. டோங்க்ரியா கோந்த் பழங்குடியினர் நியமகிரி மலையைப் பாதுகாப்பதை 2016-ம் ஆண்டில் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், ஒடிசா சுரங்க நிறுவனம், வேதாந்தா மனுக்களை நிராகரித்தது.
முத்திரை
இந்த 12 வருடச் சட்டப் போராட்டத்தை நடத்திய பிரஃபுல்ல சமந்தராவுக்கு பசுமை நோபல் பரிசு என்று பாராட்டப்படும் கோல்டுமேன் சூழலியல் விருது சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை மக்களுக்கான சூழலியல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் ஆறு செயல்பாட்டாளர்களுக்குக் கோல்டுமேன் சூழலியல் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆசியப் பிரிவில் பிரஃபுல்ல சமந்தரா விருது பெற்றார்.
பழங்குடி மக்கள் சார்ந்து ஒரு சூழலியல் போராட்டத்தை முன்னெடுத்த பிரஃபுல்லா சமந்தரா, ‘மாவோயிஸ்ட்’ முத்திரை குத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேயா