கிராம்புப் பயிர் நல்ல வடிகால் வசதியுள்ள, இலைமட்கு நிறைந்த, சிறிது மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிடப்படுகிறது. இப்பயிர் விதை, பதியமிடல், மென்திசு ஒட்டு முறையில் இனவிருத்தி செய்யப்படுகிறது. பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள், 60-70 செ.மீ. நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் 10 கிலோ மக்கிய தொழுஉரம் இட்டுத் தென்னை மரங்களுக்கு நடுவில் நடப்படுகின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்து, 10 கிலோ தொழுவுரம் இடப்படவேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுரத்தையும் பயன்படுத்தலாம். மேலும் ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர் தருவதோடு மூடாக்கு போடுவதும் சிறந்தது.
அங்கக முறையில் நோய்களைக் கட்டுப்படுத்தச் சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் 0.2 %, லாசோனியா இலை சாறு 5 % கலந்து தெளிக்கவேண்டும். வருடம் இரண்டு முறை 2 - 3 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
தரமான கிராம்பு
கிராம்பு மரம் நட்ட 6 - 7 ஆண்டுகளில் பலனளிக்கத் தொடங்கும். பொதுவாக அந்தமானில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கள் தோன்றும். பூத்த 4-6 மாதங்களில் மொட்டு இளஞ்சிவப்பாக மாறும்போது பூக்கள் இதழ் விரிவதற்கு முன்னர்ப் பறித்து இளம் வெயிலில் காய வைக்கப்படுகின்றன. சூரியஒளியில் இயங்கும் உலர்த்திகளைப் பயன்படுத்துவதால் நல்ல தரமான கிராம்பை உற்பத்தி செய்ய முடியும்.
அந்தமானில் அங்கக முறையில் சிறப்பாக விளைவிக்கப்படும் கிராம்பில் யூஜினால், யூஜினால் அசிடேட் போன்ற உயிர்வேதிப்பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும், ஈரப்பதம் 6-8% மிகாமலும், ஆவியாகும் நறுமண எண்ணெய் அளவு 14-15% இருக்குமானால், அது முதல் தரம் கொண்டது. இத்தீவுகளுக்கு இயற்கை அளித்துள்ள கிராம்பு பயிரிடல் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பு பெருகுவதோடு பெரும் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும்.
(அடுத்த வாரம்: வணிகம் செழித்த நறுமணப் பாதை)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com