ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15 முதல் 18 வரை பொங்கல் விடுமுறை நாட்களில் ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு’ நடைபெறுகிறது. இந்த ஆண்டும் அதே நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டைச் சுற்றியோ, அருகிலுள்ள பூங்காவிலோ, பறவைகள் அதிகம் கூடக்கூடிய இடங்களிலோ குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பறவைப் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பிறகு அந்தப் பட்டியலைwww.ebird.org/indiaல் பதிவேற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு:
>http://www.birdcount.in/events/pongal-bird-count/pongalbirdcount_2017_tamil/ தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் இந்தப் பறவை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கண்ணகியின் அடிச்சுவட்டில் பறவைகளைத் தேடி
பொங்கல் பறவை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகக் கோவையைச் சேர்ந்த அருளகம் அமைப்பு கண்ணகியும் கோவலனும் நடந்த அடிச்சுவட்டை ஒட்டி பறவை கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கோடியக்கரை – பூம்புகார் தொடங்கித் தஞ்சாவூர், திருவானைக்காவல், திருச்சி, விராலிமலை வழியாக மதுரை வைகை கரைவரை இந்தப் பயணம் நடைபெறும். ஜனவரி 14 முதல் 17-ம் தேதி வரை (தை 1 முதல் 4 வரை) இந்தப் பயணம் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 98432 11772