இந்தியாவைப் பொறுத்த அளவில் தோல் சாராத மூன்று தொல் எழுதுபொருட்கள் புழக்கத்தில் இருந்தன. ஒன்று பூர்ஜ் (Himalayan Birch) மரப்பட்டை, அடுத்தது தாலிப்பனை (Thalipot Palm) ஓலை, மூன்றாவது பனையோலை. இந்த மூன்றில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகத் தனி ஆவர்த்தனம் செய்தது பனை ஓலைச் சுவடிதான்.
தமிழ் மரபில் மட்டுமல்ல. தென்னிந்திய இலக்கியங்களிலும் அதன் வளர்ச்சியிலும் பனை ஓலைகள் முக்கியப் பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. ஓலைகளே நமது மொழியின் வரி வடிவ அமைப்பை நிறுவியிருக்கின்றன.
தமிழின் அத்தனை செவ்வியல் படைப்புகளும் ஓலைகளில் எழுதப்பட்டன.
சுமார் 60 வருடங்களுக்கு முன்புவரை குமரி மாவட்டத்தில் நிலம் சார்ந்த பட்டாக்களை எழுதிவைக்கும் ஓலைப்பத்திரங்கள் வழக்கில் இருந்துள்ளன. ஓலைச் சுவடிகளின் இறுதி மூச்சு என்பது ஜாதகம் பார்ப்பவர்களால் 21-ம் நூற்றாண்டுவரை வெகு பிரயத்தனப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வகை எழுத்துகள் எழுத்தாணிகளால் ஓலையில் கீறல் முறையில் எழுதப்பட்டுப் பின்னர் மஞ்சள் பூசப்படுவதால் தெளிவாக வாசிக்கக் கிடைப்பவை. இவ்வகை ஓலைச் சுவடிகள் 400 ஆண்டுகள் வரையிலும் கெடாமல் இருக்கும்.
ஓலையில் எழுதுவதைக் கலைப் பொருளாக விற்பனைக்குக் கொண்டுவரலாம். அது பனை சார்ந்து வாழ்பவர்களுக்கு வருவாயை ஈட்டிதரும். தமிழ்நாடு சுற்றுலாத் துறை இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
இன்றும் பனையோலையில் எழுதத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவ்வகையில் விழுப்புரம் மாவட்டம் ஈஸ்வரகண்ட நல்லூரைச் சேர்ந்த ஜோதிடர் வேலாயுதம், இன்றும் ஜாதகத்தை ஓலைகளில் எழுதிவருகிறார். பனைமரம் என்ற புத்தகத்தை எழுதிய பண்ருட்டி பஞ்சவர்ணத்தின் உதவியாளர் லெட்சுமி இம்மனிதரைக் கண்டடைய உதவினார்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com