வரிக்குதிரைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை தாவர உண்ணிகள். குதிரை, கழுதை போன்ற உயிரினங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை இவை.
ஆப்பிரிக்க நாடுகளில் இதை அதிக எண்ணிக்கையில் காண முடியும். இந்தியாவில் விலங்குக்காட்சி சாலைகளில் மட்டுமே பார்க்கலாம்.
வரிக்குதிரை, சமூக விலங்கு. ஆகவே, இவற்றை எப்போதும் குழுவாகத்தான் காண முடியும். எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது.
இந்தக் குதிரைகளின் உடலில் உள்ள வரிகள் ஒரே மாதிரியாக இருப்பது போலத் தோன்றும். ஆனால், மனிதர்களின் கை ரேகை, எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறதோ, அதேபோல இந்த வரிகளும் குதிரைக்குக் குதிரை மாறுபடும்.
காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழும். அவை விலங்குக்காட்சி சாலையில் இருந்தால் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.
சமீபத்தில் கென்யாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே மசாய் மரா ரிசர்வ் காட்டுப் பகுதியில், மாரா என்ற நதி உண்டு. அந்த நதியை வரிக்குதிரைக் கூட்டம் ஒன்று கடந்து சென்றது. அப்போது எடுத்த படங்கள் இவை.
வரிக்குதிரைகள் அவ்வப்போது, இன்னொரு வரிக்குதிரைகளின் மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்றிருக்கும். பார்ப்பதற்கு அவை ஏதோ கட்டித் தழுவுவது போல இருக்கும். கூடலில் ஈடுபடுகின்றனவோ என்று நினைத்தால், அது தவறு. உண்மையில், அவை ஓய்வு எடுத்துக்கொள்வதற்காகவே அப்படிச் செய்கின்றன.
கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com