வேலூரில் நாங்கள் வசித்தபோது பக்கத்து வீட்டுக்காரர் எங்களைப் பார்க்கும் போதெல்லாம், வணக்கம் சொல்வதுபோல ‘இன்னைக்கு மழை பெய்யுமா சார்’ என்பார். அவருக்கு நாங்கள் வைத்த பெயர் சாதகப்புள் (“பஸ் ஸ்டாண்டில் சாதகப்புள்ளைப் பார்த்தேன்”).
மழைக்காக ஏங்கும் சாதகப்புள்ளைப் பற்றி பல கவிஞர்கள் பாடியுள்ளனர். இந்தப் பறவை வானில் பறந்துகொண்டே மழைத்துளிகளை உணவாகக் கொள்வதால் மழை வேண்டி குரலெழுப்புகிறது என்பது ஐதீகம். இந்தப் பறவையைப் பற்றிய விவரத்தைத் தேடியபோது நம் ஊரில் மழைக்காலத்துக்கு முன் காணப்படும் பருத்திக்குயில்தான் இது என்று தெரிந்தது. வடநாட்டில் இதன் பெயர் ‘சாதக்’ என்பதும் ஒரு தடயமாகக் கிடைத்தது.
நான், சென்னை முகப்பேரில் இந்தப் பறவையைப் பார்த்திருக்கிறேன். புலவர் ரத்தினம் தனது புத்தகத்தில் இதை ‘சுடலைக்குயில்’ என்று குறிப்பிடுகிறார். இது ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வலசை வரும் ஒரு பறவை என்று இன்று நமக்குத் தெரியும்.
கதைகளில் வாழும் பறவைகள்
நாம் அன்றாடம் காணும் சில பறவைகள் தொன்மத்தில் இடம்பெற்று விடுகின்றன. அது மட்டுமல்ல, அதைப் பற்றிப் பல கதைகளையும் சேர்த்துவிடுவார்கள். ஃபோனிஷிய வணிகர்கள், பூநாரையின் செந்நிறச் சிறகுகளை ஆப்பிரிக்காவிலிருந்து எடுத்து வந்து, ‘இது தீயினின்று உயிர்பெற்ற பறவையின் சிறகு. இதை வைத்திருந்தால் நோய் அண்டாது’ என்று சொல்லி ஐரோப்பாவில் விற்றனர். இதுதான் ஃபீனிக்ஸ் பறவையின் கதை. பூநாரையை நாம் கோடிக்கரையிலும் பழவேற்காடு ஏரியிலும் கூட்டம் கூட்டாக இருப்பதைப் பார்க்கலாம்.
தூக்கணாங்குருவிகள் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து அவற்றைக் களிமண் உருண்டைகளின் மேல் பதித்து வைப்பதாகக் கேள்விப்பட்டதாகவும், இரவில் ஒளிரும் கூட்டைப் பார்த்தவர்கள் சொல்லிக் கேட்டுள்ளதாகவும் ஒரு வாசகர் எனக்கு எழுதியிருந்தார். அண்மையில் கோயம்புத்தூரில் நான் பேசிய கூட்டத்தில் ஒருவர், ‘கழுகு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மறைவான இடத்தில் சென்று எல்லா இறகுகளையும் உதிர்த்து விட்டு, புத்தம் புதிய இறகுகளை வளர்த்துக் கொண்டு வருமாமே’ என்று கேட்டார். இப்படிப் பல கதைகள்.
அன்னம், ரவிவர்மாவின் கைவண்ணம்
தமிழ் மேம்பாட்டு நிறுவனமொன்றிலிருந்து சங்ககால பறவைகளைப் பற்றி குறும்படமொன்று எடுக்க நல்கை பெற்ற ஒருவர் நேர்காணலுக்காக என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். (இம்மாதிரி எடுக்கப்படும் ‘குறும்படங்கள்’ ஒரு முறை திரையிடப்பட்ட பின், மறக்கப்பட்டுவிடும்). கேமராவை நிலைப்படுத்தி, விளக்கை போட்டபின், ‘ஆரம்பிங்க சார்... முதலில் பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னம் பற்றி பேசுங்கள்’ என்றார்.
நான் விளக்கை அணைக்கச் சொல்லிவிட்டு அவருக்குப் புள்ளினம் பற்றி ஒரு ‘ஆனா ஆவன்னா’ பாடம் எடுத்தேன். அன்னம் என்றால் எந்தப் பறவை என்று கேட்டார். ஐரோப்பியோவில் காணப்படும் ஸ்வானை (Swan) நமது இலக்கியத்தில் குறிப்பிடும் அன்னத்துடன் குழப்பியதால் வந்தது இது. ஓவியர் ரவிவர்மா சகுத்தலையை தைல ஓவியமாகத் தீட்டும்போது, அவள் தூதுவிடும் பறவையாக ஒரு ஸ்வானைச் சித்தரித்துவிட்டார். ரவிவர்மா படைப்புகளில் காணும் சில மேற்கத்தியத் தாக்கங்களில்
இதுவும் ஒன்று!
அப்படியானால் தமிழ் இலக்கியம் குறிப்பிடும் அன்னம் எது? இன்று பட்டைத்தலை வாத்து (Bar-headed goose) என்று அறியப்படுகிற புள்ளினம்தான் அன்னம். துப்பாக்கி இங்கு வருவதற்கு முன், அதாவது 17-ம் நூற்றாண்டுக்கு முன், கிராமங்களுக்கு அருகிலுள்ள நீர்நிலைகளிலேயே இந்தப் பெருவாத்துக்கள் (goose) கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
பட்டைத் தலை வாத்து | படம்: நித்திலா பாஸ்கரன்
கூந்தங்குளத்தில் அன்னம்
துப்பாக்கிப் பயன்பாடு வந்து, வேட்டை ஒரு பொழுதுபோக்காக ஆனபின் சில பறவைகள் தமிழகத்திலிருந்து அற்றுப்போய்விட்டன. சட்டென நினைவுக்கு வருவது கானமயில் (Great Indian Bustard), அடுத்தது வரகுக்கோழி (Lesser Floricon). இன்று வடநாட்டில் எளிதில் காணக்கூடிய Greylag goose எனப்படும் பெருவாத்துகள்கூட தமிழ்நாட்டில் பெருமளவில் தென்பட்டன என்பதற்குப் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தப் பெருவாத்துகள்தாம் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் அன்னம் என்று அனுமானிக்கலாம்.
இந்தப் பறவைகள் தரையில் நன்றாக நடக்கக் கூடியவை. இன்றும் பட்டைத்தலைப் பெருவாத்துக்களை தமிழ்நாட்டில் கூந்தங்குளத்தில் நூற்றுக்கணக்கில் காணலாம். இவை நடப்பதைப் பார்த்தால் அன்னநடை என்ற உவமையின் பொருத்தம் விளங்கும். திருச்சிக்கு அருகிலும், ராமேஸ்வரத்துக்கு அருகிலும் இந்த எழிலார்ந்த பறவையை நான் பார்த்ததுண்டு. மங்கோலியாவிலிருந்தும் இமயமலையிலிருந்தும் இவை தெற்கே வலசை வருகின்றன.
யுத்தம் தீர்த்த பறவை
எங்குமே இல்லாத சில கற்பனைப் பறவைகளும் நமது தொன்மத்தில் உண்டு. அதில் பிரபலமானது கர்நாடக ஆலயங்களில் சிற்ப உருவில் சித்தரிக்கப்படிருக்கும் ‘கண்டபேரண்ட பட்சி’ எனும் இரட்டைத்தலைப் பறவை. நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்கும் நடந்த துவந்த யுத்தத்தைத் தீர்க்க உருவாக்கப்பட்டதுதான் இந்த இரட்டைத்தலையுடைய பலம் வாய்ந்த பட்சி.
கேளடி என்னும் ஊரிலுள்ள ராமேஸ்வரர் ஆலயத்தின் சிற்பம் ஒன்றில் கண்டபேரண்ட பட்சி, அதன் அசுர சக்திக்குக் குறியீடாகத் தனது கால்களில் யானைகளையும் அலகுகளில் சிங்கங்களையும் பிடித்திருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. விஜயநகரப் பேரரசின் நாணயங்களின் காணப்படுகிற இந்தப் பட்சி, மைசூர் ராஜ்ஜியத்தின் அரச சின்னமாக இருந்தது. 1956-ல் கர்நாடக மாநிலம் உருவானபோது அதே சின்னத்தைச் சுவீகரித்துக்கொண்டது.
‘சகோரப்பட்சி’ என்று ஒரு பறவையும் இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. கவுதாரி வடிவிலான இது, நிலாவின் ஒளிக்கதிர்கள் மேல் உயிர் வாழ்கிறது என்கிறது ஒரு தொன்மம். தமிழ் இலக்கியத்தில் இது ‘நிலா முகிப்புள்’ என்றும் குறிக்கப்படுகிறது.
(அடுத்த கட்டுரை – செப்டம்பர் 1 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com