உயிர் மூச்சு

தூய்மையிலும் கடவுளைக் காணலாம்

க்ருஷ்ணி

கடவுளாலும் வழிபாட்டு முறைகளாலும் சுற்றுச்சூழல் சீர்கெடுமா? நடக்கும் நிகழ்வுகளும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் ‘ஆம்’ என்றே சொல்கின்றன.

முன்பெல்லாம் சிறு அளவில் குடும்பத்துக்குள் கொண்டாடப்பட்ட பண்டிகைகள், தாராளமயமாக்கலுக்குப் பிறகு பெரு விழாக்களாகவும் பொதுவிழாக்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. விநாயகர் சதுர்த்தியும் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசராவும் அதில் முக்கியமானவை.

திருவிழாக்களைப் பெரிய அளவில் கொண்டாடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், பண்டிகை முடிந்த பிறகு சிலைகளை ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளில் கரைப்பது, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.

சிலைகளால் அதிகரிக்கும் மாசுபாடு

பல்வேறு வகையில் வெளியேறும் கழிவுநீரும் நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. ஆனால், கடவுள் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தைவிடக் குறைவான பாதிப்பையே கழிவுநீர் ஏற்படுத்துகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீர்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், செயற்கைக் களிமண் (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்), சுட்ட களிமண், காகிதக்கூழ் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகள், நீர்நிலைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். தவிர, இந்தச் சிலைகளைச் செய்யவும் அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சுகள், வண்ணத் திரவங்கள், இரும்புக் கம்பிகள், பல வகையான துணி ரகங்கள், செயற்கை மணிகள் – மாலைகள் போன்றவையும் நீர்நிலைகளைப் பெரிய அளவில் மாசுபடுத்துகின்றன.

ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக், காரீயம் போன்ற கன உலோகங்கள் நிறைந்திருக்கும். இவற்றில் பல புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. இவை நீரில் கரையும்போது அங்கு வாழும் உயிரினங்களும் அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் பறவையினங்களும் தாவரங்களும் பாதிக்கப்படும். அந்த நீரில் வளர்ந்த மீனைச் சாப்பிடுவதன் மூலம் நமக்கும் அந்த வேதிப் பொருட்கள் கடத்தப்படும். 

குறையாத ரசாயன அளவு

ஒவ்வோர் ஆண்டும் ஹூக்ளி நதியில் மட்டும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் துர்கை சிலைகள் கரைக்கப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. இதன்மூலம் 16.8 டன் வார்னிஷ், 32 டன் பெயிண்ட் போன்றவை நீரில் கலக்கின்றன. தசரா முடிந்த பிறகு எண்ணெய், கிரீஸ் போன்றவற்றின் அளவு ஒரு லிட்டருக்கு 0.99 மி.கி. அளவுக்கு உயர்வதாகவும் கன உலோகங்களின் அளவு 0.104 மி.கி. அளவுக்கு உயர்வதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. பெரிய நதியான ஹூக்ளியில் கலக்கும் மத்திய மாசுப் பொருட்களின் அளவே அதிர்ச்சி தருகிறது என்றால், நமக்கு அருகில் இருக்கும் கிணறு, குளம், ஏரி போன்ற சிறு சிறு நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தின் அளவைப் புரிந்துகொள்ளலாம்.

தவிர செயற்கைப் பொருட்களால் செய்யப்படும் சிலைகள், முழுவதுமாக நீரில் கரைவதில்லை. அது நீர்நிலையின் ஆழத்தைக் குறைத்து, நீரோட்டத்தைப் பாதிக்கும். சிலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களால் சில நேரம் நீரில் கரையும் நுண்ணூட்டச் சத்துகளின் அளவு அதிகரித்து, ‘யூட்ரோஃபிகேஷன்’ ஏற்படலாம்.

அதாவது அளவுக்கு அதிகமான நுண்ணூட்டச் சத்துகளால் நீர்நிலைகளில் திடீரென ஆல்கே, ஆகாயத் தாமரை போன்றவை வளர்ந்து நீரின் மேற்பரப்பு முழுவதும் படர்ந்துவிடும். இதனால் நீரில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். நீரினுள் சூரிய ஒளி புகுவதும் தடுக்கப்படும். இதனால் நீர்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிடும்.

மாற்றி யோசிக்கலாம்

‘அதற்காகக் கொண்டாட்டமே தேவையில்லையா?’ எனக் கொதிக்கத் தேவையில்லை. சுடாத களிமண்ணால் சிறிய சிலைகளைச் செய்து வழிபடலாம். சிலைகளை அழகுபடுத்த ரசாயனப் பூச்சுகளுக்குப் பதிலாக நீரில் கரையக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தலாம். இது நடக்க வேண்டுமென்றால் நீர்நிலை மாசுபாடு குறித்த விழிப்புணர்வைச் சிலை வடிப்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.

பொதுமக்களும் சிலைகளின் எண்ணிக்கையையும் அளவையும் குறைக்கலாம். அவற்றைப் பொது நீர்நிலைகளில் கரைப்பதைவிட, அதற்கெனத் தனியாகத் தொட்டி அமைத்துக் கரைக்கலாம். கரைப்பதற்கு முன் சிலைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களைத் தனியாக எடுத்துவிட்டால் மாசுபாட்டை ஓரளவு குறைக்க முடியும். இப்போது சூழலியலுக்கு உகந்த வகையில் விதையுடன் கூடிய சிறு சிலைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வழிபடலாம். வழிபட்ட பிறகு முளைத்துவரும் செடியிலும் இறைவன் இருப்பார்!

SCROLL FOR NEXT