மான் இனங்களில் வெளிமான்களுக்கு (ஆங்கிலத்தில், ‘பிளாக்பக்’) ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவற்றின் கொம்புகள்தாம் அந்தச் சிறப்புக்குக் காரணம். சுமார் 24 அங்குலங்கள் வரை அந்தக் கொம்புகள் சுற்றிச் சுற்றி வளர்ந்திருக்கும். ஆனால், ஆண் மான்களுக்குத்தான் இந்தச் சிறப்பு. பெண் மான்களுக்குக் கொம்புகள் இருக்காது.
வடக்கில், ராஜஸ்தான் தால் சப்பர் சரணாலயம், குஜராத் வேலாவதர் தேசியப் பூங்கா போன்றவற்றில் இந்த மான்களை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். தெற்கில், கோடியக்கரையில் இந்த மான்களைப் பார்க்கலாம். ஆனால், இங்குள்ள மான்களின் உடலில் உள்ள பழுப்பு நிறம், வடக்கத்திய மான்களைவிடச் சற்று மங்கலாக இருக்கும்.
கூட்டமாக வசிக்கும் இவற்றுக்குப் புற்கள்தாம் முக்கிய உணவு. என்றாலும், நீர்நிலைகள் உள்ள இடங்களில் இவை அதிக அளவில் சுற்றித் திரியும். இவற்றின் தோல், எவ்வளவு வெயிலையும் தாங்கக் கூடியது. அதனால், பகல் நேரத்தில்தான் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
2011-ல் முதன்முதலாக தால் சப்பரில்தான் படமெடுத்தேன். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வெளிமான்களை அப்போது பார்க்க முடிந்தது. பொதுவாக ஆண் வெளிமான்கள் தனிக்கூட்டமாகவும், பெண் வெளிமான்கள் தனிக்கூட்டமாகவும் சுற்றித் திரியும். மாலை நேரம் அது. அப்போது ஒரே ஒரு ஆண் வெளிமான், ஒரே ஒரு பெண் வெளிமானைத் துரத்திக் கொண்டிருந்தது. இணை சேர்வதற்கான விளையாட்டுதான் அது. அப்போது எடுத்த படம் இது.
தங்களது கொம்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக அவ்வப்போது இரண்டு ஆண் வெளிமான்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். பார்ப்பதற்குச் சண்டை போடுவது போலத் தெரியும். சில நேரம் அது உண்மையான சண்டையாகவும்கூட மாறிவிடும். தால் சப்பாரில் அப்படி இரண்டு மான்கள் மோதிக்கொண்ட போது எடுத்ததுதான் இரண்டாவது படம்.
இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துகொண்டு வருகிறது. எனவே, இவற்றை விலங்குக்காட்சி சாலைகளில் வைத்து, செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புல்வெளி நிலங்கள் குறைந்து வருவதே இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமானது!
கட்டுரையாளர்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com