உயிர் மூச்சு

கற்பக தரு 21: சுண்ணாப்பெட்டி

காட்சன் சாமுவேல்

பனையேறிகளது வாழ்வில் சுண்ணாம்பு இரண்டரக் கலந்த ஒன்று. நேர்த்தியான சுண்ணாம்பு இருந்தால் மட்டுமே பதனீர் இறக்க இயலும். கடலோரங்களில் இருக்கும் பனையேறிகள் பெரும்பாலும் கடல் சிப்பியை நீற்றி சுண்ணாம்பு எடுக்கிறார்கள். கடலோரப் பகுதிகளில் இல்லாத பனையேறிகள் சுண்ணாம்புக்கல்லை நீற்றித் தேவையான சுண்ணாம்பு எடுக்கிறார்கள். சுண்ணாம்பு எடுப்பதற்காகக் காளவாய் அமைப்பார்கள்.

பனை மரம் ஏறுபவர்களுக்குக் கள் இயற்கையாகக் கிடைக்கும் என்றாலும், கள்ளின் பயன் சார்ந்த ஆயுள் ஒரு நாள் மட்டுமே. மிக அதிகமாகக் கிடைக்கும் கள் வீணாவது சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த தொல் குடிகளுக்குச் சவாலாக இருந்தது. ஆகவே, அவர்களின் தேடலின் ஒரு அங்கமாக பனையிலிருந்து ஊறும் சுவைமிக்க நீரில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து புளித்துப்போவதை  ஒருசில மணி நேரத்திற்குத்  தள்ளி வைத்தனர். இவ்விதமான செயல்பாடுக்காகச்  சுண்ணாம்பை எடுத்துச் செல்வதற்கு என அவர்கள் செய்துகொண்ட பெட்டியின் பெயர்தான் சுண்ணாப்பெட்டி.

பனை ஓலையில் செய்யப்படும் பெட்டிகளின் அடிப்பாகம் தரைக்குச் சமமாக இருக்கும். அப்படி இருந்தால்தான் அவற்றை ஒரு சமதளத்தில் வைக்க முடியும். ஆனால், பனையேறிகள் செய்யும் சுண்ணாப்பெட்டியின் வடிவம் மட்டும் மற்ற பனை பொருட்களின் வடிவமைப்பிலிருந்து வெகுவாக மாறுபடும். இதன் அடிப்பாகம் ஆங்கில எழுத்து ‘V’ போல் காணப்படும். இவ்விதமான ஒரு வடிவமைப்பு, பனைத் தொழில் சார்ந்த பல அவதானிப்புகளை உள்ளடக்கியது. 

ஒரு மனிதருக்குச் சுண்ணாப்பெட்டி செய்யத் தெரிந்தால் அவரைத் தேடி எண்ணற்ற பனையேறிகள் வருவார்கள். குறிப்பாக, சுண்ணாப்பெட்டியின் வாய் அதில் சுண்ணாம்பை இடுமளவுக்கு விரிந்தும் கலக்குமட்டை (சுண்ணாம்பைப் பதனீர் பானையில் தடவும் கருவி) உள்ளே நுழையும் அளவுக்குக் கச்சிதமாகவும் செய்யப்பட்டிருக்கும். தொழில் சார்ந்து மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டதால் இன்று இது குறித்துப் பொதுமக்களிடம் போதுமான அளவில் விழிப்புணர்வு இல்லை.

குருத்தோலைகளைக் கொண்டு ஒரு முறைக்கு நான்கு முறை பின்னல்கள் ஊடுபாவாகச் செல்லவைத்து அமைக்கப்படும் இவ்விதச் சுண்ணாப்பெட்டிகளிலிருந்து ஒரு துளி சுண்ணாம்பு வெளியில் சிந்தாது. குருத்தோலைகளைக் கொண்டு அடைக்கும் விதம் இதன் பயன்பாட்டையும் ஆயுளையும் நீட்டிக்கும் வண்ணம் செய்யப்படுகின்றன. சுண்ணாப்பெட்டியின் மேல் பகுதியில் கருக்குவைத்து சுற்றிக் கட்டி அதைப் பலம் வாய்ந்ததாக மாற்றிவிடுவார்கள். கண்டிப்பாக மூன்று வருடங்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதன் ‘V' வடிவ அடிப்பாகம் அமைப்பில் ஒரு சுவாரசியம் உண்டு. பனையேறிகள் பயன்படுத்தும் தளவாடங்களை வைக்க பயன்படுத்தும் அருவாப்பெட்டியின் உள்ளே இதை வைக்கையில் இதன் அடிப்பாகம் குவிந்து இருந்தாலே உள்ளே நிற்கும் என்ற பயன்பாட்டுப் புரிதலை பனையேறிகளிடமிருந்தே பெறமுடிந்தது. ஆகவே, இது எத்துணை அர்த்தம் பொதிந்த  வடிவமைப்பு என வியப்பே மேலிடுகிறது. மேலும் இவர்களின் வாழ்வு முறையே போர் வீரர்களின் வாழ்வியலை ஒத்தது. ஆகவே, உடைவாளை வைப்பது போன்ற ஒரு வடிவமைப்பில் இது இருக்கிறது என்றும் எண்ண வாய்ப்பிருக்கிறது.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த காட்டுவிளை என்ற பகுதியில் வாழும் செல்லத்துரை  இவ்விதமான சுண்ணாப்பெட்டியைச் செய்வதில் வல்லவர். இன்று இப்பெட்டியைச் சுவரில் மலர்கள் வைக்கும் அலங்காரப் பொருளாகப் பாவிக்க ஏற்றது. விலை ரூ 150/- செல்லத்துரை இதற்கான பயிற்சியையும் அளிக்கிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT