உயிர் மூச்சு

எது இயற்கை உணவு 07: இயற்கை விளைபொருட்கள் இயற்கையானவையா?

அனந்து

‘ஹெர்பல்', ‘இயற்கை’ (Natural) என்று பல விளைபொருட்கள் இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மையான இயற்கை விளைபொருட்கள்?

இந்த அடையாளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயற்கை வேளாண் விளைபொருட்களின் முக்கியத்துவமும் மருத்துவ குணமும் இன்றைக்குப் பிரபலமாகி, அவற்றைக் குறித்த விழிப்புணர்வும் அதிகமாகி உள்ளது.

இதனால், வியாபார நோக்கத்தை மட்டுமே கொண்டு உள்ளே நுழைந்துள்ள சிலர், எதை வேண்டுமானாலும் ‘இயற்கை', ‘ஹெர்பல்' என்று சாதாரணமாகப் பெயரிட்டு அறமில்லாமல் விளம்பரப்படுத்துகின்றனர்.

வழக்கமான வேதிப்பொருட்களுடன் பற்பசையை உற்பத்தி செய்து ஓரிரு மூலிகைகளை மட்டும் அவற்றில் சேர்த்தும் (சேர்க்காமலும்) ‘ஹெர்பல்' என்று விற்கின்றனர்.

எனவே, இயற்கை விளைபொருட்களை மிகவும் மெனக்கட்டு உறுதிப்படுத்தி, பல கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்கான பதிலைப் பெற்ற பின்பே நாம் நுகர வேண்டும். ‘நேரமில்லை' என்ற காரணத்தின் பின்னால் ஒளியக் கூடாது. உணவுக்கு, உயிருக்கு நாம் முன்னதாகச் செலவழிக்காத நேரம், பின்னர் மருத்துவமனையிலும் மருத்துவரிடமும் பெரும் பகுதி செலவழிக்க வைத்துவிடலாம்.

இன்று கற்றாழைச் சோற்றைப் பல நிறுவனங்களும் கடைகளும் விற்கின்றன. இதன் முக்கியத்துவம் இப்படித் திடீரென அதிகரித்ததற்குப் பல மருத்துவர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து பேசிப் பிரபலப்படுத்தியதே காரணம்.

ஆனால், அதேநேரம், மிக எளிதாக ஓரிரு வேதிப்பொருட்களைக் கலப்பதால் கற்றாழைப் போன்ற போலிகளும் வந்து குவிகின்றன. இது ஓர் உதாரணம். இதேபோலத்தான் பல பொருட்களின் கதைகள் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்ப்போம்

பிரபல சாமியார் படம் போட்டும், நடிகர்கள் சிலர் அளிக்கும் உத்தரவாதத்துடனும், வீட்டுக்கே வரும் ‘ஆர்கானிக் விளைபொருள்' என்றும் பல்வேறு வகை விளம்பரங்களை, அவற்றின் அடிப்படையில் விற்கப்படும் பொருட்களை எந்த அளவுக்கு நம்பலாம்?

மேலே கூறியதைப் போல் பல கேள்விகளைக் கேட்டு, தீர விசாரித்து உறுதிப்படுத்திய பிறகே இயற்கை விளைபொருட்களை வாங்க வேண்டும். எந்த நடிகரும் காசு வாங்காமல் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. கொடுத்த காசுக்கு, அவர்களிடம் கூறப்பட்ட வாசகங்களை அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

பிரபல சாமியார் படம் போட்டுவிட்டால் அது இயற்கையாகவோ புனிதமாகவோ மாறிவிடுமா, அப்படி நம்புவது நமது பகுத்தறிவை நாமே தாழ்த்திக்கொள்வதைப் போன்றது, இல்லையா?

எந்தப் பொருளாக இருந்தாலும், யார் அதை விற்கிறார்கள் என்றாலும் என்றைக்கு அது பெரிதாகவோ பிரபலமாகவோ வியாபாரப்படுத்தப்படுகிறதோ, அப்போது நுகர்வோர், இயற்கை, சுற்றுச்சூழல், நியாய விலை, வாழ்வாதாரம் எல்லாமே பின்னுக்குத் தள்ளப்படுவதையே நாம் பார்த்துவருகிறோம்.

பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை, அதே வேதிப்பொருட்களைக் கலந்து உற்பத்திசெய்து அட்டையில் மட்டும் பிரபல சாமியார் படத்தைப் போட்டு விற்பதைப் பார்க்கிறோம். இப்படி வியாபாரம் செய்பவர்கள் பெருநிறுவனத் தயாரிப்பு முறைகளுடன் ஓரிரு மூலிகைகளை, இடுபொருட்களை மட்டும் புதிதாகச் சேர்த்து பெரிதாக விளம்பரப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள்.

வீட்டுக்கே இயற்கை விளைபொருள் வருவதும், அப்படிப்பட்ட வியாபாரமே. அடிப்படையில் இது ஒரு பெருவியாபாரம். இதில் இயற்கை அம்சம் மட்டும் எப்படி அப்படியே மாறாமல் இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

இதற்கும், தெருமுனைக் கடையில் நமக்கு உள்ள நல்ல தொடர்பாலும் உறவாலும் வீட்டுக்குப் பொருட்களைக் கொண்டுவந்து தரும்படி கேட்டுப் பெறுவதும் இருவேறு துருவங்களாக இருப்பதை உணரலாம்.

ஒரு வேளை இயற்கை விளைபொருளை விற்கிறார்கள் என்று ஒரு கூற்றுக்கு வைத்துக்கொண்டாலும், இப்படி அதிகப்படி விளம்பரமும் கடன் பெற்று பெரும் பணத்தை முதலீடு செய்து இயங்கும் வியாபாரம் அறத்துடன் செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி எழ வேண்டாமா? லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இதுபோன்ற விற்பனைப்பொருளில் வேதிப்பொருள் இல்லை என்று சொல்லி விற்கப்படும் பொருட்கள் உண்மையில் எவ்வளவு இயற்கையாக இருக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான்.

கட்டுரையாளர்,

இயற்கை வேளாண் நிபுணர்

தொடர்புக்கு: organicananthoo@gmail.com

SCROLL FOR NEXT