உணவு உற்பத்தியில் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நாடு இந்தியா, கூடிக்கொண்டு இருக்கும் மக்கள்தொகையையும், ஆங்காங்கே காணப்படும் வறட்சியையும் கணக்கில் எடுத்தால் அது புரியும்.
2018-19 ஆண்டில் உணவு உற்பத்தி 28.34 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டு (2013-14 முதல் 2017-18 வரை) கால உற்பத்தியைவிட 1.76 கோடி டன் அதிகம் எனக் கூறப்படுகிறது. இதில் அரிசி உற்பத்தி கடந்த ஆண்டைவிட 28.7 லட்சம் டன் அதிகரித்துள்ளது, அதேபோல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோதுமை உற்பத்தி 13.3 லட்சம் டன் அதிகரித்துள்ளது.
டெல்லி மாம்பழத் திருவிழா
31வது மாம்பழத் திருவிழா ஜூலை 5-7 டெல்லியிலுள்ள ஜனக்புரியில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத் துறையும் டெல்லி அரசும் இணைந்து இதை நடத்துகிறார்கள். இந்த நிகழ்வில் 500 வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதில் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து வரும் விவசாயிகள் தங்களது பாரம்பரிய, கலப்பின வகை மாம்பழங்களை காட்சிப்படுத்துகின்றனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அங்கு வரும் மக்களுக்கு இலவச மாமரக் கன்றுகள் அளிக்கப்படவுள்ளன.
வீணாகாத மீன் கழிவு
இந்திய உணவுப் பண்பாட்டில் மீன்கள் பயன்பாடு அதிகமுள்ளது. பொதுவாக மீனில் 50% மேல் கழிவு ஆகிறது, நாம் உண்பது போக அதன் தலை, தோல், முள், உள் உறுப்புகள் என அனைத்துமே வீண்தான். இந்தக் கழிவால் பொருளாதார இழப்பு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் மாசடைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. அதிகமாக மீன் உற்பத்தி செய்யும் இடங்களில் குஜராத்திலுள்ள வெராவல் என்ற ஊரும் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 60 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது, 2017-18ன் தகவலின் படிகுஜராத்திலிருந்து ரூ.5,482 கோடி மதிப்பிலான மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதில் கிடைக்கும் மீன் கழிவை வெராவல் ஊர் மீனவர்கள் மறு சுழற்சி மூலம் மீன் பண்ணைகளுக்கும் கோழிப் பண்ணைகளுக்கும் உணவாகத் தயாரிக்கிறார்கள். இதை ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு உருவாகிறது.
தொகுப்பு: சிவா