ஒ
ரு காலத்தில் விவசாயிகளும் மிகவும் விரும்பி வளர்த்த ஆட்டு ரகம் கொடி ஆடுகள். குறுகிய காலத்தில் குட்டிகள் ஈனுவதும், அதேபோலக் குறுகிய நாட்களில் விறுவிறுவென வளர்ந்து நல்ல எடையுடன் கம்பீரமாகக் காட்சியளிப்பதுமே இதற்கு முக்கியக் காரணங்கள்.
இந்த ஆடுகள் நன்கு உயரமாக வளரக்கூடியவை. நீண்ட கழுத்தும் உடலும் இவற்றின் கம்பீரத்தைக் கூட்டும். கொடி ஆடுகளில், வெள்ளையில் கறுப்பு நிறம் சிதறியது போலக் காணப்பட்டால் அது ‘கரும்போரை’, வெள்ளையில் செம்பழுப்பு நிறம் சிதறியது போலக் காணப்பட்டால் அது ‘செம்போரை’.
கொடி ஆட்டின் காலும் கொம்பும் மிக நீளமாக இருக்கும். பிறந்து 15 மாதங்களில் மூன்று அடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். அதுவும் இல்லாமல் அடிக்கடி குட்டி போடும். சில ஆட்டுக் குட்டிகளுக்குப் புட்டிப்பால் கொடுக்க வேண்டிய நிலை வரும். ஆனால், கொடி ஆடுகள் எந்தப் பெரிய பிரச்சினையிலும் சிக்குவது இல்லை.
பெண் ஆடு பிறந்து ஏழு மாதங்களிலேயே 15 கிலோ எடைவரை வளர்ந்துவிடும். அதேகாலத்தில் கிடா ஆடு 20 கிலோ எடைக்கு வந்துவிடும். இறைச்சிக்காகவே கொடி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே காணப்படும் ரகம் இது. குறிப்பாக, தூத்துக்குடி, எட்டையபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் இவற்றை அதிகமாகப் பார்க்கலாம்.
தமிழகச் சூழலுக்கு ஏற்ற இந்த ஆட்டு ரகம், ஒரு மாவட்டத்தில் மட்டுமே வளர்க்கப்படுவதால் மற்ற இடங்களில் பெரிதாகத் தெரிவதில்லை. தற்போது ஏழை விவசாயிகளும் கலப்பின ஆட்டு ரகங்களை வளர்க்க ஆர்வம் காட்டிவருவதால், கொடி ஆடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறது.