உயிர் மூச்சு

குரங்கணி காட்டுத்தீ: விடை தேட வேண்டிய கேள்விகள்

ஆதி

குரங்கணி - கொழுக்குமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மார்ச் 22-ம் தேதியுடன் 18 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையிலும் முதல்வர் பேசிவிட்டார். எந்தப் பெரிய சலனமும் இல்லாமல் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து இன்னும் பதில் அளிக்கப்படாத கேள்விகள் நிறைய இருக்கின்றன:

காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும் நடையுலா செல்பவர்களும் நாடெங்கிலும் உள்ள பல்வேறு காடுகளுக்குச் சென்று பெரும்பாலும் பத்திரமாகத்தான் திரும்பிவருகிறார்கள். இந்தியக் காடுகளில் ஆபத்து நேர வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. அதேநேரம், காட்டுத்தீயால் இறந்தவர்கள் என்று பார்த்தால், இதுவரை பொருட்படுத்தக்கூடிய அளவு பெரிதாக இல்லை.

இதுவரை காட்டுத்தீ பிரச்சினை இத்தனை கோரமான விபத்தை ஏற்படுத்தாததே, நடையுலா ஏற்பாட்டாளர்களும் வனத்துறையும் அலட்சியமாகச் செயல்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தச் சம்பவத்தில் நடையுலா ஏற்பாட்டாளர்கள் ஆபத்து நேர உயிர்காப்புப் பயிற்சிகளில் கவனம் செலுத்தாத அதேநேரம், உயிர்பலியை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தாவிட்டாலும் காட்டுத்தீயைக் கண்காணிப்பதில் வனத்துறைக்குக் கூடுதல் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் காடுகள் பரவியுள்ள கேரளம், கர்நாடகத்தில் நடையுலா செல்பவர்களை வனத் துறையினர் கண்காணித்தே அனுப்புகிறார்கள். வழிகாட்டியையும் உடன் அனுப்புகிறார்கள். இது மட்டுமில்லாமல் தீத்தடுப்பு எல்லைகளைத் தொடர்ச்சியாகப் பராமரிக்கிறார்கள். இதனால், செயற்கையாகவோ-இயற்கையாகவோ காட்டுத்தீ பிடித்தாலும்கூட குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அவை பரவாமல் இருக்கின்றன. அதேபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்தில் முறைப்படி கடைப்பிடிக்கப்பட்டனவா?

பிப்ரவரி - ஜூனுக்கு இடைப்பட்ட மாதங்களில் காட்டுத் தீ பரவுவதற்கான அதிக சாத்தியமுள்ள காலத்தில் அனுமதி பெற்றோ, பெறாமலோ காட்டுக்குள் 36 பேர் நடையுலா போவது, வனத் துறைக்குத் தெரியாமல் போனது எப்படி?

காடு என்பது அரசு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது. அந்தக் காட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது வனத்துறையினரின் கடமை. காட்டுக்குள் செல்வதற்குச் சிலர் அனுமதிச் சீட்டு பெற்றாலும் பெறாவிட்டாலும், குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது வனத்துறையின் அடிப்படைக் கடமை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

இந்தியாவில் 90 சதவீத காட்டுத் தீ மனிதச் செயல்பாடுகளால் உருவாவதுதான் என்கிறார் மத்திய வனத் துறை தலைமை இயக்குநர் சித்தாந்த தாஸ். குரங்கணிச் சம்பவத்தில் எந்தக் காரணத்தால் காட்டுத்தீ ஏற்பட்டது என்பது உறுதிசெய்யப்படாவிட்டாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

குரங்கணி காட்டுத்தீ குறித்து செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையில், தேசிய தொலை உணர்வு மையம் அளித்த எச்சரிக்கை மாநில வனத் துறையை சென்றடையவில்லை என்று சித்தாந்த தாஸ் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் எல்லா நவீன அறிவியல் எச்சரிக்கை வசதிகளும் இருந்தும்கூட, அலட்சியத்தால் நேர்ந்த கோர விபத்தாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை 2013-ல் 89 ஆக இருந்தது, கடந்த ஆண்டில் 301 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பைக் கையாளவும் கட்டுப்படுத்தவும் தமிழக வனத் துறை எடுத்த நடவடிக்கை என்ன?

நவீன வசதிகள் எதுவும் அளிக்கப்படாமல் இன்னும் கற்காலத் துறையாகவே வனத்துறையை அரசு வைத்திருப்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. தனியார் நிறுவனங்கள், வெட்டுமரம் கடத்துபவர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், காட்டுயிர்களைக் கடத்துபவர்கள்-கொல்பவர்கள், காடுகளின் எல்லையை ஆக்கிரமிப்பவர்கள், காட்டுக்குள் சட்டவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வனத் துறையினருக்குக் கையில் நவீன பாதுகாப்பு, போக்குவரத்து சாதனங்கள் இல்லாமலும், ஆள் பற்றாக்குறையுடனும் வைத்திருப்பது ஏன்?

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயசிங் என்கிற வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அவர் சம்பந்தப்பட்ட காட்டுப் பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் அல்ல. அருகிலுள்ள காட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான அவர், கூடுதல் பொறுப்பாக முந்தால் பகுதிக்கும் வனவராக நியமிக்கப்பட்டவர். இதிலிருந்தே வனத்துறையில் உள்ள காலியிடங்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்ளலாம்.

சுனாமிக்குப் பிறகு கடற்கரையில் இருந்து மீனவப் பூர்வகுடிகளை வெளியேற்றுவதற்கு அப்போதைய தமிழக அரசு முயற்சித்தது. அதேபோல, குரங்கணி காட்டுத்தீயைக் காரணமாக வைத்து ‘டிரெக்கிங்’ என்கிற நடையுலாவுக்குத் தடை விதிப்பதற்கு முயற்சிகள் நடக்குமோ என்கிற கேள்வி, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொதுச் சொத்தான காடுகளை மக்களின் பார்வையிலிருந்து விலக்கி வைப்பது நல்லதா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

காட்டுப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆசிரமங்கள், கல்லூரிகள், உல்லாச விடுதிகள் போன்றவை நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களே இவற்றை அங்கீகரிப்பதுபோல் இந்த இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதேநேரம், இயற்கையை நெருக்கமாக உணர்ந்துகொள்ள நினைக்கும் நடையுலா ஆர்வலர்களுக்குத் தடை விதிப்பது எப்படி சரியாக அமையும்?

நமது அரசு அமைப்பிலும் நிர்வாகத்திலும் நீண்டகாலமாக ஓட்டைகள் இருந்துவந்தாலும்கூட, ஏதாவது ஒரு கொடிய துர்ச்சம்பவத்தால்தான் அவை வெளியே தெரிய ஆரம்பிக்கும். அப்படித் தெரிய வந்துள்ளதுதான் குரங்கணி காட்டுத்தீயில் 18 பேர் பலியான சம்பவமும். மேற்கண்டது உள்ளிட்ட தீவிரமான கேள்விகளுக்கு விடை தெரியும்போதுதான் எதிர்கால பலிகளைத் தடுக்க முடியும்.

எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

காட்டின் மீது உரிய மதிப்பும், உடல் வலுவையும் கொண்டவர்கள் சில அடிப்படை பயிற்சிகளைப் பெற்று நடையுலா செல்ல அனுமதிக்கலாம். இயற்கையைச் சீரழிக்காமல், நெருக்கமாகப் புரிந்துகொள்ளத் தயாராக இருப்பவர்கள் உரிய அனுமதி பெற்றுச் செல்வதை முறைப்படுத்தலாம். திடீர் ஆபத்து நேரிடும்பட்சத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்கிற ஆபத்தைக் கையாளும் பயிற்சியும் அவசியம்.

எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காட்டில் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், காட்டை நன்கு அறிந்த வழிகாட்டி, வனத்துறை அலுவலர் உதவியுடன் காட்டுக்குச் சென்று திரும்பும் வகையில் முறைப்படுத்தலாம்.

குறிப்பாக, காட்டுத்தீ, உயிரினங்களை எதிர்கொள்ளல் போன்றவற்றிலிருந்து தப்புவதற்கான பயிற்சிகள், காட்டில் சென்று திரும்புவதற்குத் தேவையான ஆபத்து உதவிக் கருவிகள், தொடர்புகொள்ளும் வசதிகளை நடையுலா ஏற்பாட்டாளர்களும் செய்ய வேண்டும்.

குழந்தைகள், உடல் வலு இல்லாதவர்கள், ஆபத்தை எதிர்கொள்ளும் பயிற்சியைப் பெறாதவர்களுக்கு நடையுலா செல்ல அனுமதி மறுக்கலாம்.

நடையுலா செல்பவர்கள், அதற்கு ஏற்பாடு செய்பவர்களை நெறிப்படுத்தவும் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரவும் அரசு முறைப்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு துறை சார்ந்தவர்கள் அடங்கிய தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT