உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 72: சரிவு குறைந்தால் சாகுபடி அதிகம்

பாமயன்

நிலத்தின் சரிவை வைத்துகுறிப்பிட்ட பகுதி சாகுபடிக்கு ஏற்றதா இல்லையா என்று நவீன அறிவியலாளர்கள் நிலத்தைப் பிரிக்கின்றனர்.

1) சரிவு விழுக்காடு 0-1 என்ற அளவில் இருந்தால், அந்த நிலம் சாகுபடிக்கு மிகப் பொருத்தமானது. எல்லா வகையான பயிர்களையும் இதில் பயிர்செய்ய முடியும். பல்வேறு வகையான சாகுபடி நுட்பங்களைக் கையாண்டு அதிக விளைச்சலை எடுக்க முடியும்.

2) சரிவு விழுக்காடு 1-3 என்ற அளவில் இருந்தால் எல்லாப் பயிர்களையும் பயிர்செய்ய முடியும். ஆனால், மண் அரிமானத்தைத் தடுக்கும் தடுப்புப் பயிர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சமமட்ட வரப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

3) சரிவு விழுக்காடு 3-5 என்ற அளவில் இருந்தாலும் எல்லா வகைப் பயிர்களையும் பயிர்செய்ய முடியும். சமமட்ட வரப்புகள், மண் அரிப்புத் தடுப்புப் புற்கள், சமமட்டத் தடுப்புப் படியமைப்புகள் இதற்குத் தேவை.

4) சரிவு விழுக்காடு 5-8 என்ற அளவில் இருந்தால் குறிப்பிட்ட பயிர்களை மட்டுமே பயிர்செய்ய முடியும். அடிக்கடி உழவுசெய்வதைத் தவிர்க்க வேண்டும். மூடாக்கு உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மண்ணை மழைநீர் தாக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மட்ட வரப்புகள், மண் பிடிமானப் பயிர்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும்.

5) சரிவு விழுக்காடு 8-12 என்ற அளவில் இருக்கும் நிலத்தை தீவிர சாகுபடிக்கு உட்படுத்த இயலாது. அதிக அளவில் புற்களை வளர்த்து மேய்ச்சல் தரையாக வைத்துக்கொள்ளலாம். குறுகிய கால மரங்களை வளர்க்கலாம். வேளாண் காடுகளை உருவாக்கலாம்.

6) சரிவு விழுக்காடு 12-18 என்ற அளவில் இருந்தால் பயிர் சாகுபடி செய்ய இயலாது. நீண்ட கால மரங்கள் வளர்க்கலாம். கால்நடைகளை வளர்க்கலாம். இந்த நிலத்தைப் புல், இதர பயிர்களைக்கொண்டு மூடி வைக்க வேண்டும்.

7) சரிவு விழுக்காடு 18-25 என்ற அளவில் இருந்தால் மரப் பயிர்களை அதிகம் வளர்க்க வேண்டும். குறிப்பாக நீண்ட காலத்துக்குப் பலன் தரும் மா, பலா போன்ற பயிர்களை வளர்க்க வேண்டும். இங்கு மரம் வெட்டக் கூடாது. புல் போன்ற தாவரங்களைக் கொண்டு மண்ணை மூடியே வைத்திருக்க வேண்டும்.

8) சரிவு விழுக்காடு 25-க்கு மேல் இருந்தால், இங்கு அடர் காடுகளை அமைக்க வேண்டும். மரம் வெட்டுதல் கூடாது. காடுபடு பொருட்களை மட்டுமே எடுக்க வேண்டும்.

(அடுத்த வாரம்: மண்ணில் உள்ள ஊட்டங்கள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT