க
டந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழைக்கு முந்தைய சிறு மழையில் எங்கள் வீட்டின் முன்னால் பரங்கிக் கொடி தானாகவே முளைத்திருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் பரங்கிப் பூக்கள் மலர்ந்து விரிந்து போவோர் வருவோரைக் கவர்ந்திழுக்கும்.
அந்த பரங்கிக் கொடி வீட்டின் முன்புறத்தை சூழ்ந்து வளர்ந்து பரவிக்கொண்டே இருந்தது. பரங்கிப் பூக்களைவிட, அந்த பூக்களிலும் இலைகளிலும் எந்நேரமும் குட்டிக் குட்டியாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்த செந்நிற வண்டுகள் என் கவனத்தை ஈர்த்தன.
இந்தப் பூசணி வண்டுகள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக இருந்தன. Red Pumpkin Beetle என்று ஆங்கிலத்திலும் Aulacophora foveicollis என்கிற அறிவியல் பெயரிலும் இவை அழைக்கப்படுகின்றன.
பரங்கி தவிர பூசணி, தர்பூசணிக் கொடிகளிலும் இந்தப் பூசணி வண்டைக் காணலாம். இலைக்கு அடியில் பொதுவாகக் காணப்படும் இவை பயிரினங்களுக்குத் தொல்லை தரும் பூச்சியாகக் கருதப்படுகின்றன.
சிவப்பு தவிர கத்தரிப்பூ நிறம், சாம்பல் நிறத்திலும் பூசணி வண்டு வருவது உண்டாம். இவற்றின் இளம்பூச்சிகள் வேர், தண்டு, கனிகளை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இளம்பூச்சிகள் பிறந்தவுடன் அழுக்கு வெள்ளை நிறத்திலும் சற்று வளர்ந்த பிறகு பாலாடை போன்ற மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
வளர்ந்தவை பூக்களையும் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன. வயல்களில் அறுவடைக்குப் பிறகு இந்தப் பூச்சிகள் மண்ணுக்குள் நெடுந்தூக்கம் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
எங்கள் வீட்டுக்கு முன் இருந்த பரங்கிக் கொடியில் கடைசிவரை காய் பிடிக்கவேயில்லை. ஆனால், அந்தக் கொடி பிழைத்திருந்தவரை பூசணி வண்டுகளுக்குக் குறைவே இருந்ததில்லை.