‘உ
ங்கள் குழந்தைகள் வளர்வார்கள் ட்டாலர், ஸ்டிராங்கர்’ என்கிற ரீதியில் காட்சி ஊடகத்தில் இப்போது விளம்பரங்கள் நிறையவே வருகின்றன. வடகமும் பப்படமும் வகைவகையாக நம் பாட்டிமார்கள் வீட்டிலேயே தயாரித்த காலம் சமூக நினைவு அடுக்கிலிருந்து கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.
திணை நிலங்களின் பண்டைய உணவுப் பழக்கங்களிலிருந்து நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். பழைய உணவு மேலாண்மையில் இரண்டு முக்கியமான கூறுகள் உண்டு. ஒன்று, அந்தந்த மண்ணின் விளைச்சலை பருவம்தோறும் உணவாக்கிக்கொள்வது. இரண்டு, எந்தப் பொருளையும் வீணடிக்காமல் ஏதாவது ஒரு பயன்பாட்டுக்குக் கொணர்வது. கிழங்கு மீந்தால் வற்றல், சோறு மீந்தால் வடகம். மண்ணின் விளைச்சல் அந்த மண் சார்ந்த மனிதர்களின் தேவைக்கும் செரிமானத் தன்மைக்கும் மரபாகப் பொருந்திவிடுகிறது.
நெய்தல் மக்களின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது? முன்பெல்லாம் பணப் புழக்கம் மிகக் குறைவு. ஆனால், பணத்துக்கு மதிப்பிருந்தது. பெரும் பஞ்ச காலங்களில் ஒருவேளை அரிசி உணவு, பெரிய வரம். கடற்கரைக் கிராமங்களில் பகலில் புகை வரும் குடில்கள் அப்போதெல்லாம் மிகக் குறைவு. கோயிலில் சில வேளைகளில் கஞ்சித்தொட்டி திறப்பார்கள். சில நேரம் குடும்பத்துக்கு 100 ரூபாய் வீதம் ஊரே கடனளிக்கும். மீன்பாடு காலத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும். மரவள்ளிக் கிழங்கு மலிவானது என்றாலும் வாங்கப் பணமிருக்காது. அப்படியே கொஞ்சம் வாங்கினாலும் தனிநபர் சாப்பிடுகிற கிழங்கின் அளவைவிட மீன் அல்லது கருவாடு அதிகமாக இருக்கும்.
பெரும்பான்மை வீடுகளில் வாளை, மொரல், சாளை, நெத்திலிக் கருவாடு இருப்பு வைத்திருப்பார்கள். பஞ்ச காலத்தைக் கடக்க கருவாடு என்கிற உலர்மீன்தான் நெய்தல் மக்களுக்குப் பக்கத்துணை. அந்த மக்களுக்கு வேறெந்த உணவையும்விட மீன்தான் மலிவானது. உப்பின்றி உலர்த்திப் பாடம் செய்யும் உலர்மீன்களில் மிக முக்கியமானது நெத்திலி. மீனாகவும் கருவாடாகவும் பத்திய உணவு நோயாளிகளுக்கும்கூட நெத்திலி ஏற்றது. அதில் புரதமும் சுண்ணாம்புச் சத்தும் மிகுதி என்பதும் எளிதில் செரிக்கும் என்பதும் முக்கியமான காரணங்கள்.
வெள்ளை மணலில் தெளித்து வெய்யிலில் உலர்த்துவது நெத்திலி கருவாட்டுக்குப் பொருத்தமான முறை. ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் நவர, காரைப்பொடி மீன்வகைகளை இன்றும் இம்முறையில் உலர்த்தியெடுக்கிறார்கள். வெயில் தரும் வரம். எல்லா மீன்களுக்கும் இது கைகூடுவதில்லை. வாளை மீன் வரவாகும் காலத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும். உடனடியாகக் கொள்முதலைப் பதப்படுத்த வியாபாரிகள் ‘குழியுப்பு’ முறையைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
தென்னங்கன்று நடவு செய்யத் தோண்டுவதுபோல, ஆனால் இன்னும் பரப்பாக, ஆழமாகச் சதுரக் குழிகளைத் தோண்டி, அதில் ஓலைப்பாய் அல்லது தென்னங்கிடுகுகளைப் பரப்பி அதில் குறுக்கும் நெடுக்குமாக அட்டியிட்டு, உப்பிட்டு மீனை மூன்று மாத காலத்துக்குப் புதைத்துப் போடுவார்கள். பாடம் செய்த இந்தக் குழியுப்பங்கருவாடு மாதக் கணக்கில் கெடாமலிருக்கும். இது, கோயில்பட்டிச் சந்தையைக் கலக்கும் சரக்கு!
(அடுத்த வாரம்: நெத்திலிச் சம்பல்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com