உயிர் மூச்சு

கான்கிரீட் காட்டில் 25: சாக்கடையானால் என்ன?

ஆதி வள்ளியப்பன்

நீ

ர் சாகச விளையாட்டை பார்ப்பதற்காக தென்சென்னையில் சித்தாலப்பாக்கம் - பொன்மார் அருகேயுள்ள நீர்நிலை ஒன்றுக்கு ஒரு விடுமுறை நாளில் சென்றிருந்தேன். அங்கே நீர் சாகச விளையாட்டுகளுடன், என்னைக் கவர்ந்தவை தட்டான்கள்.

செம்பழுப்பு நிற இறக்கையைக் கொண்ட தட்டான் ஒன்று நீர்நிலைக்கு மேலே இருந்த காய்ந்த குச்சியில் வந்து அமர்வதும், பிறகு மேலெழுந்து ஒரு சுற்று பறப்பதுமாக இருந்தது. இந்த வகைத் தட்டான் தேன் தட்டான் என்று தமிழில் அழைக்கப்படுகிறது.

மாசுபட்ட பகுதிகளில் பொதுவாதத் தென்படுவதால் ஆங்கிலத்தில் இதற்கு Ditch Jewel (அறிவியல் பெயர்: Brachythemis contaminata)என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

சில பறவைகளைப் போலவே தட்டான்களிலும் ஒரே இனத்தின் ஆணும் பெண்ணும் வேறு வேறு நிறங்களில் காணப்படலாம். அவற்றை கவனமாகக் கூர்ந்து நோக்க வேண்டும்.

இந்த வகையில் ஆண் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். இதுதான் இந்த இனத்தின் ஆண், பெண்ணுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு.

ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் போலிருக்கிறது. நான் பார்த்தது ஆண் தட்டான்.

அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ள இது, வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டிருக்கும். தாழ்வாகப் பறக்கக் கூடிய இந்தத் தட்டான் வகை, சில நீர்நிலைகளுக்கு அருகே கூட்டமாகக் கூடவும் செய்யுமாம். இந்தியாவிலும், கீழ்த்திசை நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதைக் காணலாம்.

நீர்த் தாவரங்கள், நீர்நிலையை ஒட்டியுள்ள குச்சிகள் போன்றவற்றில் அமர்ந்து ஓய்வெடுக்கும். பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகே, குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளிலும்கூட இதைப் பார்க்கலாம் என்கின்றன வழிகாட்டிப் புத்தகங்கள். நான் சென்றிருந்த நீர்நிலை மாசுபட்டிருக்கவில்லை. ஆனாலும் அந்தத் தேன் தட்டான் அந்த இடத்தை மேலும் அழகாக்கியது.

SCROLL FOR NEXT