ம
ஞ்சள் நிறத்தில் பளபளக்கும் சேலையைக் கவனமாகப் பிடித்தபடி மேடையில் ஏறினார் அவர். தன் மீது பாயும் ஒளி வெள்ளத்தில் கூசும் கண்களைச் சுருக்கி இருளில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்க்கிறார். அவர் சேலையில் ஒலிபரப்புக் கருவி பொருத்தப்படுகிறது. அந்தக் கருவியின் மைக், அவர் கன்னங்களின் மேலாக நீண்டு, அவர் இதழோரமாக, அது உதிர்க்கப் போகும் வார்த்தைகளை எதிர்பார்த்து, ஆவலுடன் காத்துக்கொண்டு நிற்கிறது.
அந்த அறையின் குளிரிலும் அவர் கன்னத்தில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. சன்னமான குரலில் தீர்க்கமாக ‘என் பெயர் ஜமுனா டுடு. நான் காட்டை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் முயற்சியில் நூலிழையில் உயிர்பிழைத்தவள்’ என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.
ஜார்க்கண்டில் மதுர்காம் எனும் கிராமத்தைவிட்டு ஜமுனா (37 வயது) வெளியே வருவது மிகவும் அபூர்வமான நிகழ்வு. அந்த அபூர்வமான நிகழ்வில் ஒன்றுதான் அவருடைய இந்த டெல்லி பயணம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘இந்தியாவை உருமாற்றும் பெண்கள்’ என்று நிதி ஆயோக் தேர்ந்தெடுத்த பன்னிரெண்டு பெண்களில் இவரும் ஒருவர். அதற்கான விருதைப் பெறும் விழாவில்தான் ஜமுனா இவ்வாறு பேச ஆரம்பித்தார்.
ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் ஜமுனா. அவருடைய தந்தை விவசாயி. அவர் வசித்த பகுதியைப் பச்சைப் பசேலென்று காடுகள் சூழ்ந்திருந்தன. சிறு வயதில் நாற்றுகளைச் சுமந்து சென்றும் தண்ணீர் பாய்ச்சியும் தன் தந்தைக்கு அவர் உதவுவார். அப்போது விதைகள் முளைவிட்ட செடிகளைச் சிறு குழந்தையைக் கொஞ்சுவது போன்று ஆனந்தமாகக் கொஞ்சுவது வழக்கம். ‘என் வாழ்நாள் முழுவதும் பசுமைக்குள்ளேதான் வாழ்ந்துள்ளேன்’ என்று அந்த உரைக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கண்களில் பசுமை மின்னக் கூறினார் ஜமுனா.
1998-ல் ஜமுனாவுக்கு 18 வயதானபோது அவருக்கு மான்சிங் டுடு என்பவருடன் திருமணம் நடந்தது. மான்சிங், கட்டுமானத் தொழிலாளராக இருந்தார். தன் கணவரின் கிராமமான மதுர்காம் ஜமுனாவின் சொந்த ஊரிலிருந்து 100 கி.மீ., தள்ளியிருந்தது. திருமணமான அன்றே சொந்த ஊரைப் பிரிய மனமின்றி மதுர்காமுக்கு ஜமுனா இடம்பெயர்ந்தார். என்ன செய்வது, பெண்களின் வாழ்க்கை இப்படித்தானே உள்ளது?
திருமணமான மறுநாள் ஜமுனாவின் மாமியாரும் அண்ணியும் வீட்டைச் சுற்றிக் காட்டியுள்ளனர். அப்போது வீட்டுக்குப் பின்பக்கம் சென்ற ஜமுனா அதிர்ச்சியில் உறைந்து போனார். வீட்டுக்குப் பின் பக்கம் பரவிப் படர்ந்திருந்த காட்டில் மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு மூளியாகக் காட்சியளித்தன. அந்தக் காட்சி ஜமுனாவை பெருந்துயரில் ஆழ்த்தியது. அண்ணியிடம் கேட்டபோது, மதுர்காம் காட்டின் தேக்கு மரமும் சால் மரமும் மிகவும் பிரசித்திப் பெற்றவை என்பதால், அப்பகுதியைச் சார்ந்த மர வியாபாரி ஒருவர் ஊர் மக்களை மிரட்டி அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டியெடுத்து கடத்திச் செல்வது அவருக்குத் தெரியவந்தது.
ஜமுனா ஏதாவது செய்து அந்தக் காட்டுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அந்தக் கிராமத்து ஆதிவாசிப் பெண்களை ஒன்று திரட்டிக் காட்டைப் பாதுகாக்க ‘வன சுரக்ஷா சமிதி’ எனும் குழுவை அமைத்தார். அந்தப் பெண்களில் பெரும்பாலோர் படிப்பறிவு அற்றவர்கள்.
தங்களின் அடிப்படைத் தேவைக்குக்கூட அதற்கு முன் அவர்கள் குரல் கொடுத்தது இல்லை. சொல்லப்போனால் தன்னம்பிக்கை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் இருந்தார்கள். ஜமுனா, மெல்ல மெல்ல அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட ஆரம்பித்தார். காட்டின் முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் அவர்களுக்குப் புரியவைத்தார். காடு செழித்திருந்தால்தான் மக்கள் அங்கு உயிர் வாழ முடியும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைத்தார். முதலில் சற்று தயங்கினாலும், சிறிது நாட்களில் தாங்களாகவே அந்தக் காட்டைக் காக்க அவர்கள் முன்வந்தனர்.
ஜமுனாவும் அவர் இயக்கத்தில் உள்ள 32 பெண்களும் காட்டுக்குள் சென்றனர். அங்கு மரம் வெட்டிக்கொண்டிருந்த ஆண்களிடமும் பெண்களிடமும் அதை நிறுத்தும்படி ஜமுனா கூறியுள்ளார். ஜமுனாவை மேலும் கீழும் பார்த்த அவர்கள் சற்று எள்ளலுடன் ‘யார் நீ?’ என்று கேட்டுள்ளனர். ஜமுனா தன்னையும் தன் இயக்கத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். ‘இதை எப்போது ஆரம்பித்தீர்கள்?’ என்று அவர்கள் கேட்டுள்ளனர். ‘இன்றைக்குத்தான்’ என்று ஜமுனா உறுதியுடன் சற்று அழுத்திக் கூறியுள்ளார்.
ஆரம்பித்த ஓர் ஆண்டுக்குள் ஜமுனாவின் இயக்கம் வலுப்பட்டுவிட்டது. அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் கம்புகள், மண் வெட்டிகள், வில் அம்புகள் போன்றவற்றுடன் காட்டுக்குள் சென்று அங்கு முறையற்று மரம் வெட்டுபவர்களைப் பயமுறுத்தி விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டனர். பயந்து ஓடுபவர்கள் விட்டுச் சென்ற ரம்பங்களைக் கைப்பற்றித் தங்கள் கிராமத்தில் அவற்றை ஒளித்து வைத்தனர். இது மரக்கடத்தலில் ஈட்டுபட்ட அந்த மாஃபியா கும்பலுக்கும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்தது.
மதுர்காம் வனப்பகுதி நக்சல்களின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், ஜமுனாவின் நடவடிக்கைகள் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. ஆனால் ஜமுனாவின் நடவடிக்கைகளும் அவர் இயக்கம் பெற்ற வெற்றியும் குறுகிய காலத்திலேயே, அந்தச் சந்தேகத்தை நம்பிக்கையாக மாற்றியது. ஜமுனாவின் வற்புறுத்தலால், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்தக் கும்பல் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதில் சிலர் சிறைவாசத்தையும் பரிசாகப் பெற்றனர்.
ஆனால், எந்த வெற்றியும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லையே? ஜமுனா தன் இயக்கத்தை அருகில் இருக்கும் கிராமங்களிலும் கிளைகளை உருவாக்கினார். 2004-ம் ஆண்டு சகுலியா எனும் ஊரில் அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐம்பதாக உயர்ந்தது. ஜமுனாவின் அசுர வளர்ச்சி அந்த மாஃபியா கும்பல்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஜமுனாவின் வீட்டை அவர்கள் சூறையாடினர்.
அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து, ஜமுனா தன் கணவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தபோது கொடூரமான கல்லெறித் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் அவர் கணவர் மான்சிங் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். ‘அவர் உயிர் பிழைக்கமாட்டார் என்று அப்போது நினைத்தேன்’ என்று ஜமுனா அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார்.
பறந்து பறந்து அடிப்பதற்கு ஜமுனா ஒன்றும் திரையுலக நாயகி இல்லை. அவர் ஒரு சாதாரண ஆதிவாசிப் பெண்தான். அன்றாடம் உழைத்துத்தான் தன் வாழ்நாட்களை அவர் கடத்த வேண்டும். ஆனால், அவர் உயிருக்கும் அவர் கணவர் உயிருக்கும் நேர்ந்த ஆபத்து அவருக்குத் துளியும் பயத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, அவருடைய செயல்களின் வீரியத்தை அது இன்னும் பெருக்கியது. தன் இயக்கத்தைத் தீவிரமாகவும் விரைவாகவும் அருகில் உள்ள கிராமங்களில் விரிவுபடுத்தினார்.
இன்று அவரது இயக்கத்தில் 300 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சுமார் ஐம்பது ஹெக்டேர் வனப் பரப்பைப் பாதுகாக்கின்றனர். அவர்கள் வெறும் பாதுகாப்போடு தங்கள் பணிகளைச் சுருக்கிக்கொள்ளாமல், மரக்கன்றுகளை நட்டு, வனத்துக்கு மறுவாழ்வும் அளிக்கின்றனர். ரக்ஷா பந்தன், பாய்தூஜ் போன்ற பண்டிகைகளைத் தங்களிடையே மட்டுமல்லாமல், அங்குள்ள மரங்களுடனும் சேர்ந்து இன்றைக்கு அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
‘வனப் பாதுகாப்புச் சட்டம் என்பது அப்பிராந்திய கிராம மக்களின் வனப் பயன்பாட்டு உரிமைகளை உள்ளடக்கியது. அதே நேரம் அவர்கள் அதை வணிகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும்வண்ணம் இருக்க வேண்டும்’ என்று ஜமுனா கூறுகிறார். மேலும் வனத்தை உயிர்ப்பிக்கிறோம் என்ற பெயரில் அரசாங்கம் எளிதாகவும் விரைவாகவும் வளரும் யூக்கலிப்டஸ் போன்ற மரங்களை நட்டு, காட்டை மலடாக்கக் கூடாது என்று உண்மையான அக்கறையுடன் அரசுக்கு ஜமுனா வேண்டுகோள் விடுக்கிறார்.
‘இந்த மாதிரியான விருதுகள் எனக்கு ஒரு அடையாளத்தையும் மரியாதையும் அளிக்கின்றன. நான் இன்னும் தீவிரமாகச் செயல்படுவதற்கு அது ஊக்கமளிக்கிறது. ஆனால், இன்று மத்திய அரசோ ஏறக்குறையச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையே கலைத்துவிட்டது. எங்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுக்கோ வனத்தைப் பேணிப் பாதுகாப்பதைவிட இயற்கை வளங்களைச் சுரண்டி எடுப்பதே முக்கிய வேலையாக உள்ளது. இந்தச் சூழலில் இந்த விருதால் எனக்கு என்ன பலன்?’ என்று கண்களை மறைக்கும் கண்ணீரை மறைவாகத் துடைத்தபடி உடைந்த குரலில் கேட்கிறார் ஜமுனா. அர்த்தமுள்ள கேள்விதான்.