சில விளம்பரங்களில் வருவது போல், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட விளை பொருட்களைக் கழுவினால் போதுமா? அல்லது உப்பு, பேகிங் சோடா போன்ற ஏதாவது ஒன்றில் ஊறவைத்துக் கழுவ வேண்டுமா?
முதலாவது விளம்பரங்கள் என்பவை காசு வாங்கிக்கொண்டு காசுக்காகச் சொல்லப்படும் விஷயங்கள். பல உண்மையற்றவை. பழத்தையோ காய்கறியையோ கழுவது என்பதெல்லாம், அது ஏதோ அழுக்குபோல் நம் காய் கனிகள் மேல் ஒட்டிக்கொண்டிருப்பது என்ற மூடநம்பிக்கையால்தான்.
Residual என்பது ஒரு இயற்கைப் பொருளில் தங்கும் எச்சம். அது Systemic என்னும் வகையில் உள்பாய்ந்து, அந்தச் செடியின் உள்ளும்- மரபணுக்கள்வரை பாய்ந்து, முழுவதுமாகப் பரவி, செடியின் நாளங்கள், இலை, காய் என எல்லாவற்றிலும் எச்சங்கள் மிகுந்து, நம் தட்டுவரை அது வந்துசேருவதே இன்று நம்மிடையே அதிகம் பார்க்க முடிகிற மோசமான பல பக்கவிளைவுகளுக்குக் காரணம்.
எனவே, பூச்சிக்கொல்லிகளைக் கழுவி அகற்றிவிடுவது எந்த வகையிலும் சாத்தியமல்ல. இதற்கான மிக எளிதான தீர்வு: நம்பகமான, நஞ்சற்ற இயற்கை வேளாண்மையே ஒரே வழி.
சரி, நாம் ஏன் பூச்சிக்கொல்லிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். 100-க்கும் மேற்பட்ட ‘கொடிய நஞ்சு' என வரையறுக்கப்பட்டுப் பல்வேறு நாடுகள் பல பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்துள்ளன.
அப்படிப் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள கொடிய வேதிப் பூச்சிக்கொல்லிகள் நமது நிலத்துக்கும் நம் தட்டுக்கும் அன்றாடம் வந்துகொண்டிருப்பது பெரும் துயரம். உதாரணத்துக்கு மோனோகுரோடோபாஸ் 60 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது; புரொப்பனோபாஸ் 30 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு பெரிய பட்டியலே உள்ளது. ஆனால், இந்தியாவில் இவை தாராளமாகப் புழங்கி வருகின்றன.
பிஹாரில் சில ஆண்டுகளுக்கு முன் மோனோகுரோடோபாஸ் இருந்த ஒரு ட்ரம்மில், ஒரு பள்ளியின் மதிய உணவுக்கான எண்ணெய் கொண்டுவரப்பட்டு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டதில் பல குழந்தைகள் உயிரிழந்தனர். ஆனால், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை. அதனால்தான் பாதிக்கப்படும்போது வேளாண் சங்கங்கள், ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் (பி.டி.) பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி தெளித்த/பயன்படுத்திய பல உழவர்கள் காலமானார்களே, அது ஏன்,அவற்றைத் தடுத்திருக்க முடியாதா?
இது மிகவும் துயரமான நிகழ்வுகள்தான். நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒன்று- நமது அண்டை மாநிலமான கேரளம் 'மிகவும் ஆபத்தான' என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள பூச்சிக்கொல்லிகளைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுத்துள்ளதுபோல் நம் மாநிலத்திலும் எடுக்கப்பட வேண்டும். ஏன், நாடு தழுவிய அளவில் அப்படியொரு முடிவெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இப்படி மிகவும் ஆபத்தானது, பல கொடிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று வரையறுக்கப்பட்டுப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 99 பூச்சிகொல்லிகள் நம் நாட்டில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையும் கிளைஃபோசேட், பாராக்வாட் போன்ற கொடிய களைக்கொல்லிகளையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
இரண்டு- பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மையின் அறிகுறிகள், மோசமான விளைவுகள் பற்றியும், அதேநேரம் உழவர்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், சூழலியலுக்கு உகந்த இயற்கை மாற்றுவழி முறைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அரசு நடத்த வேண்டும். எளிய, இயற்கையோடு இசைந்த, பாதிப்புகளற்ற வழிமுறைகளைப் பிரபலப்படுத்த வேண்டும். அரசின் பல்கலைக்கழகங்கள், வேளாண் துறை ஆகியவை இந்த முறைகள் குறித்த படிப்பினை களை ஆவணப்படுத்த வேண்டும், ஆராய்ச்சி – ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
- கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com