பருத்திக்காய்ச் செம்புழு தாக்கத்தால் மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விவசாயிகள் 15.09 லட்சம் பேர்தான் இந்தச் செம்புழுத் தாக்குதல் குறித்து அரசுக்குப் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட மாநில அரசு ஏக்கருக்கு ரூ. 30,800 இழப்பீடு கொடுப்பதாக அறிவித்தது. மகாராஷ்டிர பருத்தி விதைச் சட்டத்தின்படி இதில் ரூ. 16,000 இந்தப் பருத்தி விதைகளை விற்ற நிறுவனங்கள் கொடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பருத்தி விதைகளை விற்ற 14 நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளன. உயர் நீதி மன்றம் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இருக்கிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அரசு முழுத்தொகையும் அளிக்க வேண்டும். அதற்குப் பிறகு நிறுவனங்களின் பங்கை வசூலித்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் நலனில் அக்கறையுள்ள அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆளில்லா டிராக்டர்
ஆளில்லாமல் இயங்கும் டிராக்டர் தொழில்நுட்பம் குறித்து சில ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்துவருகிறது. இப்போது கனடாவைச் சேர்ந்த டீர் அண்ட் கோ நிறுவனம் டாட் (DOT Technology crop) என்னும் பெயரில் ஆளில்லாமல் இயங்கும் டிராக்டரைச் சந்தைப்படுத்தியுள்ளது.
இந்த டிராக்டர், உழவுசெய்வது மட்டுமல்லாமல் களை எடுப்பது, மருந்து தெளிப்பது, நடுவது போன்ற பல பணிகளுக்கும் பயன்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற விவசாயக் கருவி, உலகின் 2-வது பெரிய வேளாண் நாடான இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
வறட்சி வருகிறது
மத்திய நீர்வள ஆணையம், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நீர் வறட்சி குறித்து அறிவுரை வழங்கிக் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் 91 முக்கியமான அணைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நீர்வள ஆணையம், கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவு நீர் மட்டம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
91 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 161.993 பில்லியன் கன மீட்டர். இருப்பு அளவு 35.99 பில்லியன் கன மீட்டர். அதன் மொத்தக் கொள்ளளவில் 22 சதவீதமே இப்போது இருப்பதால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புயலால் இறால் உற்பத்தி பாதிப்பு
ஏப்ரல் 26-ல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற்று ஒடிசாவில் கரையைக் கடந்தது. ஃபானி எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயலால் ஒடிசாவின் இறால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 30, 000 டன் அளவு இறால் உற்பத்திசெய்து நாட்டின் 5-வது இறால் உற்பத்தி மாநிலமாக ஒடிசா விளங்குகிறது.
புயல் தாக்குதலால் மாநிலத்தின் இறால் உற்பத்தி 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புயலால் சேதமடைந்துள்ள இறால் பண்ணைகளைப் பராமரித்துச் செயல்பாட்டுக் கொண்டுவரவும் காலம் பிடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.