இயற்கை சார்ந்த உயிரி-பூச்சிக்கொல்லிகள் பயனளிப்பவையா? அவற்றை அதிகம் பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?
இயற்கை வேளாண்மையை அறிந்துகொள்ள முயலும்போது ஒரு முக்கிய விஷயத்தில் தெளிவுகொள்வது நமக்கு அவசியமானதாகிறது. பூச்சிகள் நம் எதிரிகள் அல்ல.
நம் உணவுக்குப் போட்டியாக வரும் ஒரு சதவீதப் பூச்சிகளை, அவற்றை இரையாகக் கொள்ளும் உயிரினம்/பூச்சி, பார்த்துக்கொள்ளும். இப்படி நன்மை செய்யும் பூச்சிகள்-உயிரினங்களை அழிக்காமல் இருப்பதே, பூச்சி மேலாண்மையின் முதல் பாடம்.
பிறகு எளிய முறைகள், விளக்குப் பொறி, எண்ணெய்ப் பொறி, ஒட்டுப்பட்டை எனப் பல கூடுதல் வழிகள் உண்டு. இவை தவிர பயிரினப் பன்மையைப் பராமரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நோய் அல்லது பூச்சித் தாக்குதல் நடக்காமல் பாதுகாக்கலாம்.
மேலும் பொறிப் பயிர் (trap crop), துணைப் பயிர் (companion crop) என மேலும் பல வழிகள் உண்டு. பஞ்சகவ்யம், கோமயம், நுண்ணுயிர்க் காடிகள், ஜீவாமிர்தம், பன்மூலிகைக் கரைசல்கள் என்று பலன் தரும் பல பூச்சிவிரட்டிகள் உண்டு.
எருவையோ மற்ற கரைசல்களையோ அதிகம் இட்டால் பெரும் ஆபத்து ஒன்றுமில்லை. அலோபதி மருந்துக்கும் நாட்டு மருந்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றதுதான் இது. ஆனால், கோமயம் போன்ற சிலவற்றை அதிகம் பயன்படுத்தினால் செடியோ பூவோ கருகும் அபாயம் உண்டு.
இயற்கை வேளாண்மையைப் பொறுத்தவரை பட்டோ, கேட்டோ தெரிந்து/தெளிந்துகொள்ளுதல் அவசியம். மற்றபடி நன்மைகளே அதிகம் கிடைக்கும். அத்துடன் இவை சுற்றுசூழலுக்கோ மனித ஆரோக்கியதுக்கோ கேடு விளைவிப்பதில்லை.
இந்த உயிரிப் பூச்சிவிரட்டிகளை முகர்ந்தோ, குடித்தோ, தவறாகத் தெளித்தோ உயிர் இழந்தவர்களோ பாதிக்கப்பட்டவர்களோ கிடையாது. இன்னொரு விஷயம், கடந்த 15 ஆண்டுகளில் பல லட்சம் உழவர் தற்கொலைகள் நிகழ்ந்திருந்தும், அப்படி இறந்தவர்களில் ஒருவர்கூட இயற்கை உழவர் இல்லை என்பதே இயற்கை வேளாண்மைக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய நற்சான்றிதழ்.
இயற்கை முறையில் உற்பத்தி என்றால் இடுபொருள் செலவு குறைவாக அல்லவா இருக்கவேண்டும்? ஆனால், ஏன் இயற்கை இடுபொருட்கள் எல்லாம் அதிக விலையில் இருகின்றன, நியாயமான விலை எது?
ஆம்! இயற்கை வேளாண்மை என்றால் இடுபொருள் செலவு குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், இதற்கான மெனக்கெடல், வேலைகள், ஆட்கூலி (சுயமாகவோ வெளியிலிருந்தோ) எல்லாமே அதிகம் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும். அதேபோல் இயற்கை இடுபொருட்களை, வேதிப்பொருட்களைப் போல் வெளியிலிருந்து கொண்டு வந்தால் அவற்றின் செலவும் கூடும்.
நம் அரசு, வேளாண் துறை, வேளாண் கல்லூரிகள் எல்லாம் பரந்த மனத்துடன் இந்த அம்சத்தை அணுக வேண்டும். இயற்கை வேளாண் இடுபொருட்களையும் இயந்திரத்தனமாக, பெரு நிறுவனம் உற்பத்திசெய்ய வேண்டிய ஒரு இடுபொருளாக மட்டுமே பார்த்தால், அது நீடித்து நிலைக்க உதவாது.
அப்படி வெளியிலிருந்து கொண்டு வருவதால் மட்டுமே இடுபொருள் செலவு அதிகமாகி, விலை கூடுகிறது. இன்னொன்றையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நியாய விலையும் சரியான விலையும் கொண்டதாக ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்க்கும் கண்ணோட்டம் தேவை. அடுத்த 2-3 ஆண்டுகளில் நல்ல விலைக்கு, நியாய விலைக்கு வழிவகுக்கும் இயற்கை வேளாண்மை நடைமுறைக்கு வரும் என்பது உறுதி.
கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com