உயிர் மூச்சு

கற்பக தரு 50: பனையோலைப் படங்கள்

காட்சன் சாமுவேல்

பனை சார்ந்து எனது பயணம் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. பனை மரத்தைக் காக்கும் ஒரு பெரும் பொறுப்பு நமக்கு முன்பு இருக்கிறது. பல்வேறு முறைகளில் இது முன்னெடுக்கப்பட வேண்டும். நான் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய பனையோலை ஓவியம் அந்த முறைகளில் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

பனை ஓலை ஒரு பாரம்பரிய மூலப்பொருள். மாதம் ஒரு ஓலை வீதம் பல வருடங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். என்றாலும் இன்று நமக்குக் கிடைக்கும் ஓலைகளில் 80 சதவீதம் பனை மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலேயே கிடைக்கின்றன.

மூலப்பொருள் தட்டுப்பாடு, கைவினைக் கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாமை போன்ற காரணங்களால் இது சார்ந்த தொழில்கள் ஒரு கட்டத்தில் நின்றுவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே, பொறுப்புணர்வோடு ஓலைகளைக் கையாள்வது முக்கியம்.

குருத்தோலைகள் மீதான ஆர்வமே பனை மரங்களை நான் நேசிக்க முழுமுதற் காரணம். அந்த அளவுக்கு அதில் ஒரு வசீகரம் இருக்கிறது. நாளடைவில் குருத்தோலைகள் கடவுளுக்குப் படைக்கப்படும் ஒன்றாகவும் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.

ஆகவே, குருத்தோலைகளைக் குறைவாகவும் சிக்கனமாகவும் எப்படி நவீனச் சமூகத்தில் களமிறக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தபோதுதான், பிற ஓலைகளின் முக்கியத்துவம் எனது பார்வைக்கு வந்தது.

சாரோலைகள் என நாம் பொதுவில் சொன்னாலும் இரண்டாவது குருத்து, மூன்றாவது குருத்து, ஈள ஓலைகள், அடி ஓலை, காவோலை என ஓலைகளை நுட்பமாகப் பிரிக்கும் மரபு இங்கு இருந்திருக்கிறது.

பனை ஓலைகளில் நிழலோவியங்களைச் செய்த பின்பு, பனை ஓலைகளில் ஒளிப்படங்களைப் பிரதியெடுக்க இயலுமா என முயன்று அதில் வெற்றியும் கண்டேன். இந்த முயற்சியைக் கடந்த 12 ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்த்துக்கொண்டேன்.

 பனை ஓலையில் ஒருவரின் ஒளிப்படத்தைப் பிரதி எடுப்பதற்கு, பல்வேறு வண்ணங்களில் ஓலைகள் தேவைப்படும், குறிப்பாகக் காற்றடித்து கீழே விழுந்த காவோலை அதன் முக்கியத் தேவை. ஓலைகளின் வண்ணங்களுக்கேற்ப அவற்றைச் சேகரிப்பது, பிரிப்பது பயன்படுத்துவது என்பது நுட்பமான வேலை.

காவோலை சற்றே செம்பு நிறத்துடன் இருக்கும். அனைத்துக் காவோலைகளையும் நாம் பயன்படுத்திவிட இயலாது, காவோலையின் அழகைப் புரிந்துகொண்டோர் அவற்றை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இப்படியாக அடுப்பெரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பொருளை, வரவேற்பறையில் காட்சிப்படுத்தும் நோக்கில் கொண்டு வந்தது மிகப் பெரும் மாற்றம்தான்.

சிறு சிறு துண்டுகளாகத் தேவைப்படும் ஓலைகளை நறுக்கி, அவற்றைத் தேவைக்கேற்பக் கையால் தயாரிக்கப்பட்ட காகிதத்தில் ஒட்டி, அவற்றின் திரட்சி ஒரு படமாக எழுந்து வருகையில், இந்தக் கலை ஒரு தனித்துவமான ஓவியக் கலையாக ஆகிறது.

ஒளிப்படங்களுக்கு இணையாக இது நேர்த்தியான ஒன்றாக இல்லாமல் இருந்தாலும், இதில் உள்ள குறைபாடுகளே இதன் அழகாகவும் தனித்தன்மையாகவும் வெளிப்படுவது சிறப்பு. (இந்த ஒளிப்படத்துக்குத் தொடர்புகொள்க: 9080250653)

மேலும் ஓலைகளின் ஆயுள் 400 வருடங்கள் ஆகையால், இவ்விதப் பொருட்கள் கண்ணாடிச் சட்டமிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டால், நமது பரம்பரைகளுக்கே கைமாற்றி விடும் அரிய பொருளாக இருக்கும். ராப்ர்ட் ஜேம்ஸ் பிரேம் குமாரின் திருமணத்துக்காக நான் செய்த இந்த அழகிய பனையோலைப் படம் அவரது இல்லத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு:

malargodson@gmail.com

SCROLL FOR NEXT