பனை மரம் ஒரு புல்வகைத் தாவரம் எனத் தமிழ் மரபு கூறும். ஆகவே மரத்தின் தன்மைகளை இதில் காண்பதைவிடப் புல்லின் தன்மைகளே இதில் மேலோங்கியிருப்பதைக் காணலாம். பொதுவாக மரங்களுக்கு வைரம் பாயுமிடம் மரத்தின் உட்பகுதி.
ஆனால், பனை மரங்களுக்கு அதன் வெளிப்புறப் பகுதி. பனை மரத்தின் வெளிப்புற பகுதி ‘சிறா’ என்று சொல்லப்படும் மெல்லிய ஆனால் உறுதியான பகுதிகளின் தொகைதான். இவ்விதமான வடிவம் தென்னை, பாக்கு போன்ற பனை வகை மரங்களில் இருக்கும்.
பனை மரம் என்பது ஆண்டாண்டு காலமாக வீடுகளை தாங்கிப்பிடிக்கும் தூண்களாகவும், ஓடுகளுக்கு வேயும் கழிக்கோல்களாகவும் உத்தரங்களாகவும், பட்டியலாகவும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
பனை மரங்கள் இன்று பல இடங்களில் வெட்டப்படுகின்றன, வீணாக்கப்படுகின்றன. மேலும் அவை செங்கல் சூளைகளைகளுக்கு விறகாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினர் இன்று போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இவ்விதப் போராட்டங்களின் மற்றொருபுறம் மிகவும் மவுனமாகப் பனை மரத்தை பயன் மிக்க மரமாக அநேகர் வெளிப்படுத்தி வருவது ஆறுதல். பனை மரம் ஏறுவோர், பனை ஓலைப்பொருட்கள் செய்வோர், பனை நார் பொருட்கள் செய்வோர், பனைத் தும்பு வேலைகள் செய்வோர் எனப் பல்வேறு வகையில் பனையை மக்கள் காத்து வருகின்றனர்.
பனை மரங்கள் நமது சிற்ப சாஸ்திரத்தில் கட்டுமானங்களுக்காக பயன்பட்டதே அன்றி, உருவங்களை வடித்தெடுக்கும் நோக்கில் அவை பயன்பட்டதாகத் தெரியவில்லை. குமரி மாவட்டத்திலுள்ள பழங்கால வீடுகளில் அடுக்கப்பட்டிருக்கும் கழிக்கோல்களின் கடைசியில் ஒரு சுழியைப் அந்தக் கால மரத் தச்சர்கள் செய்திருப்பார்கள்.
இன்று பனை மரத்தை வடித்தெடுக்கும் உளிகளோ பொறுமை மிக்கக் கலைஞர்களோ இல்லை. பனை மரத்தில் பணி செய்யத்தக்க உளிகளைச் செய்யும் கொல்லர்களும் இன்று இல்லாமல் போய் விட்டார்கள்.
பனைமரத்தில் சாதாரணமாகவே உளி பட்டால் உளி தெறிக்கும் எனும் அளவுக்கு உறுதி ஒருபுறம், அதில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறா என்ற வைரம் பாய்ந்த பகுதி, நினைத்த வடிவங்களை நோக்கி உளிகளை கொண்டு செல்ல விடாது.
ஆனால் திருப்பூரைச் சார்ந்த ஆனந்த பாலசுப்ரமணியன் பனை மரத்தில் காணப்படும் இந்தச் சவாலான பணியை முன்னெடுத்திருக்கிறார்.
முன்னோர்களின் 1,000 ஆண்டுக் கால பாத்திரத் தொழிலிலிருந்து விலகி, சிற்பத் தொழிலைத் தனது எதிர்காலமாகக் கொண்ட இவருக்கு, பனை மரத்தில் ஏன் சிற்பங்கள் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, தனது உள்ளுணர்வால் உந்தப்பட்டுச் சிற்பங்களைச் செய்துவருகிறார்.
தனித்தன்மை மிக்க இவ்விதச் சிற்பங்கள், தமிழகத்தின் கலை மரபை உலகம் எங்கும் எடுத்துச் செல்ல வல்லவை. இவ்வித சிற்ப மரபு ஒன்று தமிழகத்தில் முன்னெடுக்கப்படுமென்றால், பனை மரம் நம்மோடு நெடுங்காலம் இருக்கும்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு:
malargodson@gmail.com