உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 35: வால் நீண்ட காக்கை

ராதிகா ராமசாமி

ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்போர் புலிகள் சரணாலயத்தில்தான் வால் காக்கையை முதன்முதலில் நான் பார்த்தேன். காக்கை இனத்தைச் சேர்ந்த அந்தப் பறவை இனிமையான குரலில் மயக்கும் விதமாகப் பாடியது, பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

காக்கையைவிடச் சற்றே சிறிய உடல். வால் நீளமாக இருந்தது. இதன் முகம் கறுப்பு நிறத்திலும் உடல் பழுப்பு நிற‌த்திலும் வால் சாம்பல் நிற‌த்திலும், இறகுகள் வெள்ளை, சாம்பல் நிற‌த்திலும் இருந்தன. மூக்கும் கால்களும் கறுப்பு நிற‌த்தில் இருந்தன. இதன் வாலின் நீளம் 30 செ.மீ. வரை இருக்கும். ஆண் பறவையும் பெண் பறவையும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கும்.

புலிகளின் பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் மாமிசத் துணுக்குகளைப் பயமின்றிக் கொத்திச் சாப்பிடுவதால், இதற்கு ‘டைகர் டூத் பிக்’ என்றொரு பெயரும் உண்டு. இந்தியா முழுவதும் இந்தப் பறவை காணப்படுகிறது. காடுகளில் மட்டுமல்லாமல் நம் வீட்டுத் தோட்டத்திலும் வயல்வெளிகளிலும் இது காணப்படும். பெரும்பாலும் தன் ஜோடியோடுதான் இது இருக்கும்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரை வால் காக்கையின் இனப்பெருக்க காலம். 4 முதல் 5 முட்டைகள் இடும். முட்டைகள் சாம்பல் நிற‌த்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டும் குஞ்சு வளர்ப்பில்  ஈடுபடும். குஞ்சு பொரிக்கும் காலத்தில் இதன் கூட்டுக்கு அருகில் சென்றால்,  ஆக்ரோஷமாகத் தலையில் கொத்தி விரட்டும்.

பழங்கள், பூச்சிகள், பல்லிகள், தவளைகள், பூரான் ஆகியவற்றை உண்ணும். அரணை, ஓணான் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். பப்பாளியும் வாழைப்பழமும் இதற்கு மிகவும் பிடிக்கும். சிறு பறவைகளின் கூட்டைக் கலைத்து அவற்றின் முட்டைகளை இது தின்றுவிடும். கரிச்சான் குருவிதான் இதற்கு ஒரே எதிரி. ஏனென்றால், கரிச்சான் குருவி இதைக் கண்டவுடன் கொத்தி விரட்டிவிடும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT