உயிர் மூச்சு

கற்பக தரு 42: பனையோலைச் சிலுவை

காட்சன் சாமுவேல்

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் குருத்தோலைப் பெருநாள் விரைவில் வரவுள்ளது. பாரம்பரியமாகத் தென் மாவட்டங்களில் கொண்டாடப்படும் இவ்விதக் கொண்டாட்டங்களின்போது குருத்தோலைகளைக் கொண்டு சிலுவை உட்படப் பல்வேறு வடிவங்களைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம். பனை ஏறுபவர்கள் திரளாக இருந்த காலத்தில் பனையில் ஏறி குருத்தோலைகளை எடுத்து அவற்றில் திருச்சபையினரே அலங்காரங்களைச் செய்து எடுத்துச் செல்லும் காலம் கடந்துபோய் விட்டது.

இயேசுபிரான் தமது இறுதிப் பயணத்தை பெத்தானியா என்ற ஊரிலிருந்து தொடங்கி, எருசலேம் நோக்கிச் செல்கிறார். இப்பயணத்தில் அவரை எதிர்கொள்பவர்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள் என்ற உண்மையை நற்செய்தியாளர் யோவான் பதிவுசெய்கிறார். பெத்தானி என்றால் பேரீச்சைகளின் வீடு என்று எபிரேய மொழியில் பொருள். இந்தப் பொருள் விளக்கம் இயேசுவின் பயணத்தில் குருத்தோலைகளின் பங்களிப்பை நமக்குத் தெளிவுற எடுத்துச் சொல்கிறது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் குருத்தோலைப் பெருநாளை முன்னிட்டு குருத்தோலைச் சிலுவைகளை எளிதாகச் செய்வது எப்படி எனத் தொடர்ந்து கற்றுக்கொடுத்து வருகிறேன். பனை ஓலைகளை 21X2.3 செ.மீ.

நீள அகலமாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிற்பாடு 14X2.3 செ.மீ என்ற அளவில் வெட்டிக்கொள்ள வேண்டும். இவ்விரு துண்டுகளையும் மிகச் சரியான இடங்களில் உள்நுழைத்து எடுத்துவிட்டால், ஓலை ஒன்றை ஒன்று பிடித்துக்கொள்ளும். இவ்விதமான ஓலைகளைத் தாராளமாகப் பல ஆண்டுகள் பயன்படுத்த முடியும்.

இவ்விதம் செய்யும் ஓலைச் சிலுவை நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் இருப்பதால், வெளிநாடுகளில் இவற்றை விரும்பி வாங்குவார்கள். ஓலைகள் அரிதாகக் கிடைக்கும் இடங்கள், தமிழகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கிறவர்கள், ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் என அனைவரும் குருத்தோலைப் பெருநாளை முன்னிட்டு விரும்பி வாங்கும் ஒரு பொருளாகப் பனையோலைச் சிலுவை இருக்கும்.

ஓலைகள் கிடைக்கும் பட்சத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இவற்றைச் செய்து தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம். ஓலைச் சிலுவை வேண்டுபவர்கள் திருச்சபை போதகரின் அத்தாட்சி கடிதத்தோடு ஷைனி ஜெகனைத் (8056152667) தொடர்புகொள்ளலாம்.

- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT