உயிர் மூச்சு

உருளைக்கிழங்குகளுக்கு உதவிக் கரம்

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உருளைக்கிழங்கு மேற்கு வங்கத்தில் உற்பத்திசெய்யப்படுகிறது. அங்கு சென்ற ஆண்டைவிட 15 சதவீதம் அதிகமாக உருளைக்கிழங்கு விளைந்துள்ளது. சென்ற ஆண்டு உற்பத்தியான உருளைக்கிழங்குகள் ஏற்கெனவே சேமிப்புக் கிடங்குகளில் முடங்கியுள்ளன. மிதமிஞ்சிய உருளைக்கிழங்கு உற்பத்தியால் ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 வரை விலை சரிவடைந்துள்ளது. இதைச் சரிசெய்யும் விதமாக மேற்கு வங்க அரசு உருளைக்கிழங்குகளை வாங்க முன்வந்துள்ளது. உருளைக்கிழங்குகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விலை கிலோவுக்கு ரூ.5.50 என அரசு நிர்ணயித்துள்ளது. இந்தத் திட்டம் மார்ச் 17 வரை மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்களிலும் மார்ச் 24 வரை மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களிலும் நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

பருத்தி உற்பத்தி வீழ்ச்சி

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பருத்தி உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாக ‘இந்தியப் பருத்திக் கழகம்’ அறிவித்துள்ளது. இந்த வருடம் எதிர்பார்ப்புக்கும் குறைவாக 328 லட்சம் பண்டல் அளவுதான் பருத்தி உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 37 லட்சம் பண்டல் அளவு குறைவு. இதற்கு முன்பு 2009-ல் 305 லட்சம் பண்டல் அளவு உற்பத்தி ஆனது. அதற்குப் பிறகு இந்த ஆண்டுதான் உற்பத்தி இந்த அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த உற்பத்திக் குறைவுக்கான காரணம் பருவ மழை பொய்த்ததுதான் என இந்தியப் பருத்திக் கழகம் தெரிவித்துள்ளது. பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் குஜராத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்தது. இந்தியப் பருத்தி உற்பத்தியில் அடுத்த பங்கு வகிக்கும் மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பருவ மழை தவறியதும் உற்பத்தி குறைவுக்கான காரணங்கள் என ‘இந்தியப் பருத்திக் கழகம்’ குறிப்பிடுகிறது. பருத்திச் செடிகளைத் தாக்கும் பருத்திக்காய் செம்புழுவும் (Pink bollworm) இதற்கான காரணங்களுள் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.

சிர்சி பாக்குக்குப் புவிசார் குறியீடு

பாக்குக்கு முதன்முறையாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பாக்கு உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் கர்நாடகம். இதன் வடபகுதியில் உள்ள உத்தர கன்னட மாவட்டத்திலுள்ள சிர்சி, ஏலாபூர், சித்தாபூர் ஆகிய மூன்று ஊர்களில் விளையும் பாக்கு சிர்சி பாக்கு என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் மொத்தப் பாக்கு உற்பத்தியில் 7 சதவீதம் இங்குதான் கிடைக்கிறது. இந்தப் பாக்குக்கு அதிகக் கிராக்கி உள்ளது. 40 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் இங்கு உற்பத்திசெய்யப்படுகிறது. இந்தப் புவிசார் குறியீடுக்காக சிர்சி வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தொடர்ந்து முயன்று வந்தது. அதன் பலனாக இம்மாத முதல் வாரத்தில் புவிசார் குறியீடு அமைப்பு இந்தக் கோரிக்கையை ஏற்று சிர்சி பாக்குக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT