உயிர் மூச்சு

கற்பக தரு 36: பனையோலைச் சாவிச் சங்கிலி

காட்சன் சாமுவேல்

முக்கியச் சுற்றுலா தலங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பரிசுப் பொருட்களுள் ஒன்று சாவிச் சங்கிலி. இது பலவிதமான மூலப் பொருட்களில் செய்யப்படுகிறது. குறிப்பாகச் சுற்றுலாத் தலம் அமைந்துள்ள வட்டாரத்தின் சிறப்பை எடுத்தியம்பும் வகையில் அங்கு கிடைக்கும் மூலப் பொருட்களில் செய்யப்படும்.

மரக்கட்டைகள், களிமண் பொம்மைகள், தோல் பொருட்கள், பாசிகள், பவழங்கள், கற்கள் எனப் பலவிதமான பொருட்களில் சாவிச் சங்கிலி கிடைக்கிறது. இந்த வரிசையில் வைக்க வேண்டிய ஒன்றுதான் பனையோலைச் சாவி சங்கிலி. பனை ஓலைகளில் செய்யப்படும் சாவி சங்கிலி குறித்த வாய்ப்புகள் அளப்பரியது.

 பனை ஓலைகளில் செய்யும் நட்சத்திரங்கள், கோள வடிவ பொருட்களில் ஒரு சாவி வளையத்தை நுழைத்துச் செய்யும் ஒரு புதுமை இது. எவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம். எங்கும் எடுத்துச் செல்லும் எளிமை. தமிழகத்தின் மரமென உயர்ந்து நிற்கும் பனைமரங்களைக் குறித்த புரிதலைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல இவை உகந்தவை. சூழலை மாசுபடுத்தாத ஒரு உன்னத நவீன படைப்பு.

இம்மாதிரியான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை முன்னெடுப்பது இன்றைய தேவையாக இருக்கிறது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டாம்புளி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் பனையோலை சாவிச் சங்கிலிகளைச் செய்துவருகிறர். ஒவ்வொன்றும் விலை ரூபாய் 20 மட்டும்தான். தற்பொழுது இரும்புச் சங்கிலி இணைக்கப் பட்டிருந்தாலும், பனையிலிருந்து பெறப்படும் நார் கொண்டும் சங்கிலியையும் வளையத்தையும் செய்ய இயலும். தற்சமயம் செய்து வரும் வடிவங்களைத் தாண்டி மாற்று வடிவங்களைச் செய்ய முயன்று வருகிறார். 

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT