இன்றைய காலகட்டத்தில் திருமண விருந்து என்பது உணவைத் தாண்டி அந்தஸ்தின் குறியீடாக மாறிவிட்டது. ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன், பாயசம், சாம்பார் இட்லி என்று பல பதார்த்தங்களும் ஞெகிழி அல்லது தெர்மாகோல் குடுவைகளில் ஞெகிழிக் கரண்டியுடனேயே பரிமாறப்படுகின்றன. தண்ணீரோ ஞெகிழி புட்டிகள் அல்லது ஞெகிழி கோப்பையில் தரப்படுகிறது.
ஒருவர் உண்டு முடிப்பதற்கு மூன்று முதல் ஆறு ஞெகிழிக் குப்பையை உருவாக்கிவிடுகிறார். அத்துடன் ஃபிளெக்ஸ் பேனர்களும் செயற்கையான அலங்காரங்களும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. ஒரு திருமணத்தின் முடிவில் நாம் கொட்டும் குப்பைகள், அடுத்த பத்து சந்ததியின் திருமணங்கள்வரை பூமிக்கு பாரமாகவே இருக்கின்றன.
சிறு மாற்றம்
தமிழகத்தில் இன்றைய திருமண விருந்துகள் வெறும் பசியும் ருசியும் சார்ந்த விஷயமாக இல்லை. ஒரு மண்டபத்தில் இரண்டு மணி நேரத்துக்குள் இரண்டு ஆயிரம் பேர் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றால், அதற்குப் பெரும் திட்டமிடலும் துரிதமான செயல்பாடும் தேவை.
அந்த வகையில் திருமண ஏற்பாட்டாளர்களுக்கு ஞெகிழி உற்ற நண்பன். ஞெகிழியிலிருந்து மாறுவதற்கு உணவு வகைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அந்த முடிவு அவர்கள் கையில் மட்டும் இல்லை, உண்ணும் நம்மிடமும், விழாவை நடத்துபவரிடமும் உள்ளது.
மீண்டும் நினைவுபடுத்துகிறேன் - பெரிய மாற்றங்கள் அனைத்தும் சிறிதாகவே தொடங்குகின்றன. உங்கள் வீட்டு விசேஷத்தில் ஞெகிழிக்கு இடமில்லை என்று நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முடிவு, உங்கள் பேரக் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய வரமாக மாறும்.
- கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org