உயிர் மூச்சு

கற்பக தரு 45: கருப்பட்டி மைசூர்பாக்

காட்சன் சாமுவேல்

நவீன வாழ்வில் வெள்ளைச் சர்க்கரை முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. குறிப்பாக, பேக்கரி பொருட்களுக்கு அடித்தளமே வெள்ளைச் சர்க்கரைதான். ஆனால், சர்க்கரை வியாதி வியாபித்து இருக்கும் சூழலில், அனைவருமே வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்க விரும்புகின்றனர். அப்படி இருக்கும் சூழலில், வெள்ளைச் சர்க்கரைக்கு பனங் கருப்பட்டி ஒரு சிறந்த மாற்று.

ஆனால், வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் பனஞ்சர்க்கரை விலை அதிகம். அதனால் பனங்கருப்பட்டி கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலையும் அதிகம். ஆனால், ஆரோக்கியத்துக்கு நல்லது; பற்களைச் சேதப்படுத்தாது, எவ்வகையிலும் உண்பவர் உடலில் சர்க்கரையின் அளவைப் பெருக்காது. சுவையே சிறப்பாக இருக்கும்.

பனங் கருப்பட்டியைச் சேர்த்துச் செய்யும் பல்வேறு பொருட்கள் நம் மரபில் உண்டு. நமது மரபு உணவுவகைகள் அவ்வகையில் ஆரோக்கியம் ததும்பும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இன்று இவற்றை நாம் இழந்திருக்கிறோம் என எண்ணும் இளைய தலைமுறையினர் முழு வீச்சோடு, பல்வேறு புதிய உணவுப் பொருட்களைப் போட்டிபோட்டுக்கொண்டு களமிறக்குகிறார்கள். அவ்வகையில் இன்று முதலிடத்தில் இருப்பது, கருப்பட்டி மைசூர்பாக்.

எடப்பாடிக்கு அருகிலுள்ள கொங்கணாபுரம் என்ற ஊரில் ‘பனை வரம்’ என்ற அமைப்பை நடத்திவரும் முன்னாள் வான்படை வீரர் செல்வா ராமலிங்கம், கருப்பட்டி மைசூர்பாக்கை முன்பதிவு செய்பவர்களுக்குச் செய்துகொடுத்து வருகிறார். பனையோலைப் பெட்டியில் இட்டு கொடுக்கப்படும் கருப்பட்டி மைசூர்பாக் பிற பொருட்களில் இட்டு கொடுக்கப்படும் கருப்பட்டி மைசூர்பாக்கைவிட ஒரு வாரம் கூடுதலாகக் கெடாமல் இருக்கிறது.

மேலும், பனையோலைப் பெட்டியில் வைத்து உண்ணும்போது இதற்கென ஒரு தனித்துவமான வாசனையும் கிடைக்கும். திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மைசூர் பாக்கைப் ‘பனை வரம்’ செய்து கொடுக்கிறது.

கருப்பட்டி மைசூர் பாக் செய்வதற்குக் கடலைமாவு, கருப்பட்டி, கடலை எண்ணெய், நாட்டு மாட்டு நெய் ஆகியவற்றைச் சேர்த்து பக்குவமாகச் செய்ய வேண்டியது அவசியம். எப்போதும் ஒரே தரத்தில் கருப்பட்டி மைசூர்பாக்கைச் செய்வது மிகவும் சவாலானது என இதைத் தயாரிக்கும் செல்வா ராமலிங்கம் குறிப்பிடுகிறார். தேவையானவர்கள் 8050195385 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT