உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் பேராபத்து பருவநிலை மாற்றம். இது குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே எச்சரித்தவரும், ‘புவி வெப்பமாதல்‘ (global warming) என்ற பதத்தை பிரபலப்படுத்தியவருமான முன்னோடி விஞ்ஞானி வாலஸ் புரோய்க்கர் (87) கடந்த வாரம் காலமானார்.
அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த அவர், வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு புவியை வெப்பப்படுத்தும் என்பதை 1975-லேயே சரியாகக் கணித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அதேபோல் தட்பவெப்பநிலையையும் பருவநிலை மாற்றத்தையும் தீர்மானிக்கக்கூடிய பெருங்கடல் நீரோட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவரே முதலில் கண்டறிந்தார்.
கரியமில வாயு போன்றவற்றின் அதிகரிப்பு பெருங்கடல் நீரோட்டத்தின் தன்மையைப் பேரளவில் மாற்றக்கூடும் என்றும் கணித்துக் கூறினார். அவருடைய இந்த ஆராய்ச்சிக் கணிப்புகள் அந்தத் துறை சார்ந்த விழிப்புணர்வை வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கின.
அரசியல் மாற்றம் அவசியம்
அறிவியல் ஆராய்ச்சி, வெகுமக்கள் விழிப்புணர்வு சார்ந்து பங்களித்துவந்த புரோய்க்கர், இந்தப் பிரச்சினைக்கு அரசியல்ரீதியிலான தீர்வு காணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். கரியமில வாயு போன்றவை வளிமண்டலத்தில் சேகரமாவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பருவநிலை அமைப்பு ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு எதிர்பாராதவிதமாகத் தாவி பயங்கர அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் 1984-லேயே அவர் எச்சரித்தார்.
பூமியின் பருவநிலை வரலாற்றைப் புரிந்துகொள்வதில் அவருடைய கண்டறிதல்கள் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தின. அவருடைய கருதுகோள்கள் பிற்காலத்தில் நிரூபணமாயின, உலகளாவிய பருவநிலை விஞ்ஞானிகள் அவருடைய கூற்றை அதற்கு முன்பே ஏற்றுக்கொண்டு இருந்தார்கள்.
கோபமான உயிரினம்
பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை பேரளவு எரிப்பதன் காரணமாக கரியமில வாயு அதிகரிப்பது பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரிசோதனை. ‘பருவநிலை அமைப்பு’ என்ற கோபமான உயிரினத்துடன் நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம். அது மிகவும் கூருணர்வு மிக்கது என்று புரோய்க்கர் எச்சரித்தார்.
இப்படியாக அதிரடிப் பருவநிலை மாற்றங்கள், எதிர்பாராத பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்ற கருதுகோளை மக்கள், கொள்கை வகுப்பாளர்கள் என இருதரப்பினரிடமும் எடுத்துச்சென்று தன் கடமையை முழுமையாக நிறைவேற்றிய விஞ்ஞானியாக புரோய்க்கர் செயல்பட்டார்.
‘பருவநிலை அறிவியலின் பாட்டன்’, ‘பருவநிலை விஞ்ஞானிகளின் புலத் தலைவர்’ என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட புரோய்க்கரின் ஆராய்ச்சிகள் உலகைக் காக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் குரலாகத் தொடர்ந்து ஒலித்துவந்தன. பருவநிலை மாற்றம் ஏற்படுத்தவுள்ள பேராபத்துகளை உணர்ந்து உலக அரசியல் தலைவர்களும் உலக மக்களும் செயல்பாட்டில் இறங்குவதே, அவருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.