பனை சார்ந்த உணவுப் பொருட்கள் குறித்து தமிழக மக்கள் பெருமளவில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பனை சார்ந்த நமது தொடர்பு விட்டுப்போய் அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. பனை சார்ந்து இயங்கிய குடும்பங்கள்கூட, பனைசார் உணவை மறந்துவிடும்படியான சூழல் வந்திருக்கிறது. அதற்குக் காரணம், பனை சார்ந்த உணவுப் பொருட்களாக நுங்கும் கருப்பட்டியும் மட்டுமே எனப் பொது அபிப்ராயம் நிறுவப்பட்டதாகும்.
பனைசார் வாழ்வைக் கொண்டிருந்த நாடார் சமுதாயத்தினரிடம், பனை உணவு குறித்த நுட்பமான தகவல்கள் இறைந்து கிடக்கின்றன. பனை பொருட்களைக்கொண்டு விதவிதமாக அவர்கள் செய்த உணவுப் பழக்கங்கள் அரிதாகிவிட்டன.
அறுபது, எழுபதுகளில் வாழ்ந்த குமரி மாவட்டச் சிறுவர்களே இன்று அறுபதுகளையும் எழுபதுகளையும் நெருங்கிவிட்டார்கள். இப்பெரியவர்களிடம் கதை கேட்போமென்றால், மிகவும் சோகமான ஒன்றைக் கூறத் தவற மாட்டார்கள். “நாங்கள் சிறு வயதில் பள்ளிக்கூடம் செல்லும் முன்னால் எங்களுக்கு உணவே கிடையாது. உணவு என்பது அரிதினும் அரிதான ஒன்றாக எங்களுக்கு இருந்தது. வெறும் பதனீர் குடித்துவிட்டே பள்ளிக்கூடம் சென்று படித்தோம்” எனக் கூறுவார்கள். பதனீர் எந்த வகையில் குறைவுபட்ட உணவு என எனக்குப் புரியவில்லை.
அன்றைய தினத்தில் பனை உணவு சார்ந்த பார்வை ஏன் அப்படி இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பதனீர் அல்லாத உணவு விலை அதிகமாக இருந்ததால், பனை சார் மக்கள் பதனீரையே பெருமளவில் உட்கொண்டனர்.
தினம்தோறும் பதனீர் குடித்துச் சலித்துப்போயிருக்கும் பிள்ளைகளுக்காகத் தாய்மார்கள் செய்யும் சுவையான பதார்த்தம்தான் அக்கானிக்
கஞ்சி. காலை வேளையில் பதனீரைக் காய்ச்சிக் கருப்பட்டி செய்கையில் பொன்னிறமாக மாறும் பதனீரை எடுத்துத் தனி பாத்திரத்தில் இட்டுச் சிறிது பச்சரிசி மாவையும் விட்டுக் கிண்டுவார்கள். மாவைச் சேர்க்கையில் அதைப் பச்சைப் பதனீரில் போட்டு நன்றாக கலக்கிப் பாத்திரத்தில் ஊற்றியிருக்கும் காய்ந்த பதனீரோடு சேர்த்து இதமாகத் துழாவுவார்கள். இதில் அக்கானி அடி பிடித்துவிடாமல் இருக்க தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம். கிட்டத்தட்ட 5 லிட்டர் பதனீர் குறுகி கால் லிட்டர் வருகையில் அதோடு இணையும் மாவு தித்திப்பான பதார்த்தமாக மாறிவிடும்.
சிறிது நேரத்தில் தானே அல்வா போல் இறுகிவிடும். இந்தப் பதார்த்தம் சிறு குழந்தைகளுக்கு உயிர். இதன் சுவையும் மணமும் உலகில் வேறு எங்கும் கிடைக்காத அபூர்வமான ஒன்று. சில நாட்டார் வழிபாட்டுகளில் இதைப் பிரசாதமாக கொடுப்பது வழக்கம்.
குமரி மாவட்டம், தேவிகோடு என்ற ஊரைச் சார்ந்த செல்வி ஜான்சன் இந்தத் தின்பண்டத்தை மீட்டுத் தந்திருக்கிறார். எங்காவது பதனீர் கிடைத்தால் நீங்களும் வாங்கி செய்ய முயற்சியுங்கள், முழுமையான செய்முறை இடுமுறைகளை அறிந்துகொள்ள செல்வி ஜான்சனைத் தொடர்புகொள்ளலாம். அவரது எண்: 9444284066.
- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com