பனையோலைகளை நவீன காலப் பயன்பாட்டுக் கொண்டுவருவதில் சில சிக்கல்கள் உண்டு. உதாரணமாகப் பனையோலைகளைப் பயன்படுத்தி பொருட்கள் செய்யக் காலம் பிடிக்கும். அதனால்தான் இன்றைய நெகிழிப் பைகளுக்கு மாற்றாகப் பனையோலைப் பைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலவில்லை. இது ஒரு சவாலான விஷயம்தான்.
இவற்றுக்கு விடை காணும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் பனையோலைத் திருமண அழைப்பிதழ். காலம் காலமாகப் பனையோலைகள் செய்திகளைச் சுமந்து செல்லுபவையாக நமது மரபில் இருந்திருக்கிறது. மணவோலைகள் மங்கலவோலைகள் என்றே கருதப்பட்டன. பனையோலைகளில் பூசப்படும் மஞ்சளே பின்னாளில் காகிதங்களில் அச்சடித்த அழைப்பிதழ்களின் ஓரங்களை அலங்கரிக்க ஆரம்பித்தன. இன்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் திருமண அறிவிப்புகளை வாசிப்பதை ‘ஓலை வாசித்தல்’ என்றே தென் மாவட்டங்களில் குறிப்பிடுவார்கள். தாலம் எனும் மற்றொரு பெயர் பனைக்கு உள்ளதால், பனையோலையில் செய்யப்பட்டு அணியப்படும் மங்கல அணிகலன் தாலி ஆயிற்று. ஆகவே ஓலை என்பது இன்றும் திருமண நிகழ்வுகளில் மங்கல இடத்தைப் பிடித்திருக்கிறது.
நவீன காலத்தில் பனையோலைகளில் செய்யப்படும் அழகிய ஓலை திருமண அழைப்பிதழ் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. பாரம்பரியத்தின் அடையாளமாகவும் இயற்கையின் வடிவாகவும் தற்சார்பு வாழ்வின் அடையாளமாகவும் கலாச்சாரக் கண்ணியாகவும் பின் நவீனத்துவத்தின் வரவாகவுமே பனையோலைத் திருமண அழைப்பிதழ் முன்னிறுத்தப்படுகிறது.
எவரும் எளிதில் செய்யக்கூடிய வகையில் காணப்படும் இவ்வோலைகளைச் சில அடிப்படைப் புரிதல்கள் இருந்தாலே சிறப்பான முறையில் செய்துவிடலாம். முதலாவதாக ஓலைகளைத் தெரிவுசெய்ய அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஓலை பல்வேறு தரத்தில் கிடைக்கும். குருத்தோலைகள் தந்த நிறத்திலும் சாரோலைகள் பசுமை நிறத்திலும் காவோலைகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
காவோலைகளைப் பயன்படுத்துவது சற்றே சிரமமானது. குருத்தோலைகளில் செய்வதே பெருமளவில் அனைவரும் விரும்புவார்கள் எனினும், அவை மரங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும். சாரோலையிலும் இளம் சாரோலை, முற்றிய சாரோலை ஆகிய இருவகை உண்டு. இவற்றைச் சரியான முறையில் பிரித்தெடுத்து, நன்கு வெயிலில் உலர்த்தி, ஈர்க்கில் நீக்கி, சீராக ஒரே அளவில் நீளம், அகலம் இருக்குமாறு வெட்டி எடுத்துக்கொள்வது ஏற்றது.
சீராக வெட்டிய மூன்று ஓலைகளை இணைத்து ஓட்டை இட்டு அவற்றைக் குஞ்சலம் இட்ட நாடாவால் கட்டி, தேவையான தகவல்களை அச்சடித்துவிட்டால் பனையோலைத் திருமண அழைப்பிதழ் தயார். மிடாலக்காடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான ஜாஸ்மின் இவ்வித திருமண ஓலைகளைச் செய்வதில் வல்லவர். பனையோலைகளில் செய்யப்படும் இவ்வித அழைப்பிதழ் காகிதப் பயன்பாட்டைக் குறைக்க உதவும். நமது மண்ணின் கலாச்சாரத்தை உலகெங்கும் எடுத்துக்கூறவும் இது ஒரு வழியை உண்டாக்கும்.
ஜாஸ்மின் தொடர்புக்கு: 91235 67414
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com