புகைத்த பின் தூக்கியெறியப்படும் சிகரெட் துண்டுகள் தற்போது கடல் மாசுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. அமெரிக்காவின் கடற்கரை ஓரங்களில் மட்டும் கடந்த 1980-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 60 கோடி சிகரெட் துண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேசத் தொண்டு நிறுவனமான ‘Ocean Conservancy’ தெரிவிக்கிறது. சாலை, கால்வாய், கழிப்பறை போன்ற இடங்களில் வீசப்படும் சிகரெட் துண்டுகள் எல்லாம் இறுதியில் கடலில்தான் சேர்கின்றன. இந்த சிகரெட் துண்டுகளில் உள்ள நிகோடின், ஆர்சினிக், நுண்ணிய ஞெகிழி ஆகியன கடல் உயிரினங்களைப் பாதிக்கின்றன. கடல் நீருடன் இந்த சிகரெட் துண்டுகளை விழுங்கும் மீன், ஆமை போன்ற கடல் உயிரினங்கள் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாகக் கடலை நம்பி வாழும் 70 சதவீதக் கடற்பறவைகளும் 30 சதவீத ஆமைகளும் இறந்துள்ளதாகவும், இந்த ரசாயனங்களை உட்கொண்ட மீன்களைச் சாப்பிடும் மனிதர்களுக்கு நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது எனவும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.