உயிர் மூச்சு

கற்பக தரு 35: சுகம் தரும் பனை ஓலைப் பாய்

காட்சன் சாமுவேல்

பனைப் பொருட்களில் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது பனை ஓலைப் பாய்கள்தாம். உலகின் பல்வேறு சமூகங்களில் இப்பாய்கள் பின்னும் வழக்கம் இருக்கிறது. இது தமிழகத்திலும் பரவலாக இருக்கிறது.

மனிதர்களின் வாழ்வில் பாய்களின் பயன்பாடு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கற்குகைகளில் வாழ்ந்தவர்கள் கோடைக்காலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து தடுப்பதற்காக இலைதழைகளைப் பரப்பி படுக்கைகளைச் செய்தவர்கள், பின்னாளில் அதில் ஒரு வடிவநேர்த்தியை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். புற்களால் பின்னி முடைந்து உருவாக்கப்பட்ட பாய்களை மெசபடோமியா பகுதிகளில் கி.மு. 6000 வருடத்தில் உருவாக்கியதன் எச்சத்தைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித் திருக்கிறார்கள்.

சிறு செங்கற்களை வைத்து வீடு கட்டுவதுபோல் ஓலைக்கீற்றுகளை எடுத்து ஒன்றிணைக்கும் கலை மனிதர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் வாரி வழங்கியிருக்கிறது. பாய்கள் அவற்றில் முதன்மையானவை.

தமிழகமெங்கும் பாய் முடைபவர்கள் பரந்து விரிந்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் உத்தரங்கோடு பகுதியில் உள்ளவர்கள் பாய்களை முடைவதை இன்றும் தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் முடையும் பாய் படுப்பதற்கு ஏற்றவை. குருத்தோலைகளில் சிறிய பொளிகளாக வகிர்ந்து, பின்னர் அவற்றை முடைந்து உருவாக்கும் பாய்கள் ஒரு நபர் படுக்கப் போதுமானது.

4 X 6 என்ற கணக்கில் பின்னப்படும் பாய்கள் சுமார் 300 முதல் 500 ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றன. இது அவர்களின் உழைப்புக்கும், கலை நுணுக்கத்துக்கும் எவ்வகையிலும் ஈடுசெய்ய இயலாத எளிய தொகைதான். பாய்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சி தருவதாகவும் மழை/குளிர் காலங்களில் இதமான வெம்மை அளிக்கும் ஒன்றாகவும் இருப்பதைப் பாயில் படுத்துறங்கியவர்கள் உணர்ந்திருக்கலாம்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பன் பனை ஓலைப் பாய் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். உலகின் எவ்வித மெத்தைகளும் கொடுக்காத ஒரு குளிர்ச்சியையும் மென்மையையும் இப்பாய்கள் கொண்டிருக்கின்றன. புதிதாகச் செய்யப்பட்ட பாய்களில் உறங்கிப் பழகுவது சற்றே சவாலான காரியம். ஆனால் ஓலைப் பாயில் பழகிவிட்டால், பிற்பாடு அவற்றை விட்டுப் பிரிவது சுலபமல்ல.

உத்தரங்கோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பம் 25 வருடங்களுக்கும் மேலாகப் பனை ஓலைப் பாய் முடைந்துவருகிறார். மொத்தமாக வாங்க இயலாது. தனி நபர்கள் நேரில் சென்று தேவையான அளவுகளைக் கொடுத்து வாங்குவது நலம். புஷ்பம்

தொடர்புக்கு: 97903 95554

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT