உயிர் மூச்சு

வினையான புனிதப் பசு

ஜெய்

சில வாரங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய வித்தியாசமான போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் அரசு அலுவலங்களுக்குள் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளை விரட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கான காரணம் அந்தத் தெரு மாடுகளால் அறுவடைக்குக் காத்து நிற்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதுதான். இதற்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல முறை கோரிக்கை வைத்தும் அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. அதனால் தங்களுக்குத் தொந்தரவு தரும் மாடுகளை அரசு அலுவலகங்களுக்கு விரட்டித் தங்களின் பாட்டைத் தெரியப்படுத்தினர்.

அலிகர் மாவட்டத்தில் டமொசியா என்னும் கிராமத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல கிராமங்களுக்கும் பரவியது. பால் தருவதை நிறுத்திய பசுக்களைத் தெருவில் விட்டுவிடுவதால்தான் இது நடக்கிறது என அரசுத் தரப்பு சொல்கிறது.

ஆனால், தெருவில் அலையும் மாடுகளுக்கு அடைக்கலம் கொடுக்க அரசு கோசாலையில் இடம் இல்லை என அரசு அதிகாரி அசோக்குமார் கூறினார். சில ஆண்டுகளுக்குள் அங்குள்ள அடிமாட்டுக் கூடங்கள் பூட்டப்பட்டன. இதுதான் மாடுகள் தெருவில் அலைவதற்கான காரணங்களுள் முக்கியமானது.

உத்தரப்பிரதேச எல்லையோரக் கிராமமான ஜெம்ரி விவசாயிகள், டமொசியா விவசாயிகளைப் போல் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவர்களே ஒரு தீர்மானம் எடுத்தனர். தங்கள் வாழ்க்கைப்பாட்டுக்குத் தடையாக உள்ள இந்த மாடுகளை நாடுகடத்துவது என முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி விதித்து வசூலித்துள்ளனர்.

22 டிராக்டர்களை வாடைக்குப் பிடித்துள்ளனர். அதில் 225 தெரு மாடுகளை ஏற்றி, நோபாள எல்லைப் பகுதியில் கொண்டுவிடப் புறப்பட்டனர். பசுக்களைக் கொல்வது பாவம் என்று நம்பப்படுவதால் நேபாளத்தில் விடும் வழக்கம் பொதுவாக அந்தப் பகுதியில் இருக்கிறது. நேபாளத்தில் கொல்வது தடைசெய்யப்பட்டதும்கூட.

40 இருசக்கர வாகனங்களில் நூற்றுக்கணக்கான கிராமத்தினர் பாதுகாப்புக்கு ஆயுதங்களுடன் வனப் பகுதியைக் கடந்து நோபாள எல்லைக்குச் சென்றுள்ளனர். தீர்மானித்ததுபோல் மாடுகளை இறக்கிவிட்டுள்ளனர். ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த கஜியா கிராம மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறக்கிவிட்ட மாடுகளைப் பிடித்து ரயில் தண்டவாளத்தில் கட்டியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம். அது கைகலப்பாக மாறியபோது ரயில், 30 பசுக்களைக் கொன்று கடந்தது.

இது ஒரு பக்கம் என்றால், இந்தப் புனிதப் பசுக்களால் நேபாள எல்லையோரக் கிராமங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்திருக்கின்றன. அடிமாட்டு வியாபாரத்துக்கு நேபாளத்தில் தடை இருப்பதால், அங்கு தெருவில் அலையும் மாடுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதிசெய்து நேபாள விவசாயிகள் சம்பாதித்தனர்.

இப்போது அந்த வியாபாரம் முடங்கியிருக்கிறது. மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து புதிய விருந்தாளிகள் நேபாள விவசாயிகளுக்கு வினையாகவும் ஆகியிருக்கின்றன. நேபாள அரசு இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. எல்லையோரக் கிராமங்களில் புதிய கோசாலைகள் அமைக்க அந்நாட்டு அரசு கட்டுமானப் பணிகளையும் தொடங்கியுள்ளது.

மேற்கண்ட இரு சம்பவங் களுக்கும் காரணம் ‘பால் தரும் பசு, புனிதமானது’ என்ற பிரச்சாரம்தான். கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாட்டுக் கறி விற்பதும் சமைப்பதும் உண்பதும் மிகப் பெரிய குற்றமாக மாற்றப்பட்டது. இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் விசாரணைகள் இன்றி அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டனர்.

மனிதப் பயன்பாட்டுக்குப் பல விதங்களில் உதவிய இந்த மாடுகள் இன்று விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே வினையாக மாறிவிட்டன.

SCROLL FOR NEXT