ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளுக்கான மவுசு குறைந்து காணப்படுகிறது. உள்ளூர்ப் பயன்பாடு தவிர வட இந்தியப் பயன்பாட்டுக்காகச் சிறிய அளவில் மஞ்சள் வியாபாரம் நடக்கிறது. ஆனால் விலை மாற்றம் அடையவில்லை என ‘ஈரோடு மஞ்சள் கூட்டுறவு சங்கம்’ தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு புதிய மஞ்சள் ஒரு குவிண்டால் ரூபாய் 5,459லிருந்து ரூபாய் 7,407 வரை விற்பனையானது. அதனால் தெலுங்கானவின் நிஸாமாபாத் சந்தையுடன் ஒப்பிடும்போது ஈரோட்டுக்கு வரத்து குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும் விரலி மஞ்சள், வேர் மஞ்சள் ஆகியவை முறையே குவிண்டாலுக்கு ரூ.200, ரூ.100 கூடுதல் விலை போவதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியப் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி அதிகரிப்பு
பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா புதிய இலக்கை எட்டியுள்ளது. ரூ. 30,000 கோடி ரூபாய்க்கு இந்தாண்டு ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.சி.ஆர்.ஏ. அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன் 2014-ல் 29, 300 கோடிக்கு ஏற்றுமதி செய்தது சாதனையாக இருந்தது. ஈரானின் அரிசித் தேவை இந்தாண்டு பெரிய அளவில் பெருகியிருப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை. மேலும் அடுத்தாண்டு இந்த ஏற்றுமதி அளவு இன்னும் 5 சதவீதம்வரை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை உலக அரிசித் தேவைகளைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறது.
பஞ்சாபில் கரும்பு விவசாயிகள் போராட்டம்
கரும்புக் கொள்முதலுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். பஞ்சாப் அரசு கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு, ரூ. 310 ரூபாயாக உயர்த்தியது. அதில் ரூ. 25 நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் எஞ்சிய ரூ.285 சர்க்கரை ஆலைகள் வழங்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,விவசாயிகளுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை.