உயிர் மூச்சு

இயற்கையைத் தேடும் கண்கள் 34: பல குரல் பறவை

ராதிகா ராமசாமி

துடுப்பு வால் கரிச்சானைப் பார்த்தவுடன் சட்டென்று நம்மைக் கவர்வது அதன் நீண்ட துடுப்பு போன்ற வால்தான். ஏற்கெனவே கம்பீரமாக இருக்கும் இந்தக் கரிச்சானை, இந்த வால் இன்னும் அழகாக்குகிறது.

சற்றே பெரிய பறவையான இதன் எடை 10 முதல் 100 கிராம்வரை இருக்கும். நீளம் 30 முதல் 35 செ.மீ.வரை. ஆண், பெண் என்று எளிதில் தனித்து உணர முடியாதபடி, இரண்டு பறவைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். மலை, மலையை ஒட்டிள்ள காடுகளில் வாழும் பறவையான இது, தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கிழக்கு இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இந்தப் பறவை அதிகம் காணப்படுகிறது.

துணிச்சலான பறவை

அமைதி என்றால் என்னவென்றே இந்தப் பறவைக்குத் தெரியாதோ என்று நினைக்கும் அளவுக்கு, இது எப்போதும் சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கும். இது மிகவும் துணிச்சலான பறவை. காக்கைகளையும், சில நேரம் தனது எல்லைக்குள் வரும் பெரிய வேட்டைப் பறவைகளையும் கொத்தி விரட்டியடிக்கும். காட்டுப் பகுதியில் உணவைத் திருட வரும் ராஜாளி, வல்லூறு போன்ற பறவைகளைப் போல ஒலியெழுப்பும் ஒப்புப்போலிப் பண்பையும் கொண்டது.

இதன் கூடு ஒரு நேர்த்தியான கோப்பையைப் போன்று அழகாக இருக்கும். இந்தக் கூட்டை, மரக்கிளைகள் கூடும் இடத்தில், ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்து கட்டுவது வாடிக்கை. மழைக்கு முன்பாகக் கோடைக்காலத்தில்தான், இது இனப்பெருக்கம் செய்யும். ஒரு நேரத்தில் நான்கு முதல் ஐந்து முட்டைகள்வரை இடும்.

திரும்ப வரும்

பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். சில நேரம், பூக்களிலிருந்து தேனையும் உட்கொள்ளும். பூச்சிகளையும் புழுக்களையும் உண்பதால், விவசாயத்துக்கு உதவும் இயற்கை பூச்சிக் கட்டுப்படுத்தி எனக் கருதப்படுகிறது. பழங்களைத் தின்றுவிட்டு, எச்சத்துடன் கொட்டைகளை வேறிடத்தில் இடுவதன் மூலம் காடு செழிக்கவும் இது காரணமாக உள்ளது.

இதன் கால்கள் மிகவும் சிறியவை என்பதால், எப்போதும் மரத்தின் உச்சியில் இருக்கும் மெல்லிய கிளையில்தான் இருக்கும். இதனால், இந்தப் பறவையைத் தலை முதல் வால்வரை முழுமையாகப் படம் எடுப்பது கடினம். ஆனால், எங்கே சென்றாலும், மீண்டும் முன்பு இருந்த கிளைக்கே திரும்பி வந்து அமரும் என்பதால், சற்றுப் பொறுமையுடன் காத்திருந்தால், இதை முழுமையாகப் படமெடுத்துவிடலாம். கன்ஹா தேசியப் பூங்காவில் 2007-ல் இந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தேன். கேரளத்தில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயத்திலும் இதை அதிக அளவு பார்த்துள்ளேன். இங்கு உள்ள படங்களும் அங்கு எடுக்கப்பட்டவையே.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

SCROLL FOR NEXT