2050-க்குள் ஞெகிழி உறிஞ்சுகுழல்கள் பயன்பாட்டை நாம் நிறுத்தாவிட்டால் “கடலுக்குள் மீன்களைவிட உறிஞ்சுகுழல்களே அதிகமாக இருக்கும்” என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இளநீரும் பழரசங்களும் அதிகம் பருக வேண்டிய காலம் இது. இந்த முறை நீங்கள் பானங்களை அருந்தும் முறையில் சிறு மாற்றத்தை நிகழ்த்திப் பார்க்கலாமே. . இனிமேல் இயற்கையான குளிர்பானங்களைச் செயற்கையான உறிஞ்சுகுழலைக்கொண்டு தொண்டையைக் குளிர்வித்துக்கொள்ள வேண்டாம். அந்தக் குழல் இல்லாமலே இளநீரை ருசிக்கலாம்.
ஏனென்றால், பதினான்கு வகை ஞெகிழிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில், ஞெகிழி உறிஞ்சுகுழல்களும் அடங்கும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட ஞெகிழி உறிஞ்சுகுழல்கள் வாய்க்கால்களையும், ஆறுகளையும் கடல்களையும் மாசுபடுத்தி வந்தது. இனி, அதற்கு இடமில்லை! மக்காத உறிஞ்சுகுழல்களா, மாசற்ற உயிர்ச்சூழலா? என்ற கேள்விக்கான பதில் நம் அனைவருக்குமே தெரியும் இல்லையா?
உலகம் முழுதும் உறிஞ்சுகுழல்களைத் தவிர்க்க வேண்டும் என்ற முழக்கம் பரவி வருகிறது. உலகத்தில் உள்ள மனிதர்கள் மொத்தம் 760 கோடி. வருடந்தோறும் ஒவ்வொரு மனிதரும் சராசரியாக 30 கிலோ ஞெகிழிக் குப்பையை உருவாக்குகிறார். இதில் உறிஞ்சுகுழல்களின் எடை மிக மிகச் சிறிதே. ஆனாலும், மாற்றத்தை நாம் அதிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு உறிஞ்சுகுழலில் தொடங்கும் மாற்றம் நம்மை ஒரு ஞெகிழியில்லா உலகத்தை நோக்கி நகர்த்தும்.
எனவே, இனிமேல் தலையைத் தூக்கி இளநீர் குடிப்போம், கண்ணாடிக் குவளைகளில் பழரசங்களைக் குடிப்போம். உடல் உபாதை அல்லது வேறு காரணத்துக்காக உறிஞ்சுகுழலின் தேவை இருக்கும் பட்சத்தில், காகித உறிஞ்சுகுழல்களைப் பயன்படுத்துவோம். காகித உறிஞ்சு குழல்கள் கடைகளில் கிடைக்கின்றன. நாம் வாங்கத் தயார் என்றால் உலோகம், மூங்கில் போன்ற பல முறை பயன்படுத்தக்கூடிய உறிஞ்சுகுழல்கள் இணையதளங்களில் கிடைக்கின்றன.
உங்கள் மேல் உள்ள கரிசனத்தில் கடைக்காரர் ஞெகிழி உறிஞ்சுகுழலைக் கொடுத்தால், பூமியின் மீது உள்ள கரிசனத்தால் அதை நீங்கள் மறுத்து விடுங்கள். வேண்டாம் என்று சொல்வதற்கு வெட்கப்படவோ ஐயப்படவோ தேவையில்லை.
கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org