உயிர் மூச்சு

கற்பக தரு 32: துறவிப் பெட்டி

காட்சன் சாமுவேல்

சமீபத்தில் ஒரிசா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது அங்குள்ள ‘மொகிமா தர்மா’ துறவிகள் குறித்துக் கேள்விப்பட்டு அவர்களைச் சந்திக்கச் சென்றேன்.

ஒருநாள் முழுவதும் அவர்களோடு இருந்தும் அவர்களது பயன்பாட்டிலிருக்கும் துறவிகளின் பையை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. இறுதியாக அங்கிருந்த ஒரு துறவி மடத்தை முயன்று பார்ப்போம் என எண்ணி அங்கே சென்றோம். அங்கிருந்த துறவிகள் மரவுரி ஆடை அணிந்திருந்தனர். துறவிகளைத் தவிர வேறு எவரும் அதைச் செய்வதில்லை எனக் கூறி எங்களுக்கு அதைத் தர மறுத்துவிட்டனர்.

மொகிமா தர்மா துறவிகள் செய்யும் அந்த ஓலைப் பை மிக அழகாகவும்அடக்கமாகவும் இருந்தது. இத்துறவிகளின் வாழ்வில் பனை மரம் முக்கியமானது. இவர்கள் பனை ஓலையில் தனித்துவமான விசிறி வைத்திருக்கிறார்கள்.  தியானம் செய்யப் பனை ஓலைகளிலான சிறிய தடுக்குகளை வைத்திருக்கிறார்கள். பனை இவர்களின் துறவுவாழ்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

இவர்கள் கரத்தில் எடுத்துச் செல்லும் பையானது ஒரு ஜாண் அளவு நீளமும் அரை ஜாண் அளவு அகலமும் கொண்ட இரு சிறிய பெட்டிகளால் ஆனது. நான்கு முக்குப் பெட்டிகள் என்றாலும், ஒரு வரி தடிமனே உள்ள நெருக்கமான பெட்டி. பிரீஃப் கேஸின் மிகச் சிறிய வடிவமாகக் கச்சிதமாக இருக்கிறது. கீழிருக்கும் பெட்டியில் தொடங்கிய ஒரு நாடா மேலிருக்கும் பெட்டிக்குள்ளாக நுழைந்து கரங்களில் பற்றிக் கொள்ளும் ஒருகைப்பிடியாக உருவெடுப்பதுதான் இதன் தனித்தன்மை.

துறவிகள் வாழ்வில் பனை முக்கிய அம்சம் பெறுவது பனை சார்ந்த ஆன்மிகத்தை நாம் புரிவதற்கு ஏதுவாக இருக்கும். மொகிமா தர்மா துறவிகள் பனை சார்ந்த பல்வேறு கலைகளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டவர்களும் உள்ளூரில் இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஒரிசாவில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேயன்குழியில் வசிக்கும் செல்லையயை தொடர்புகொண்டேன். அவர், இவ்விதமான ஒரு வடிவத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்று உறுதியளித்தார்கள். மிகக் கச்சிதமாகச் சொன்னபடியே அவர் அதைச் சாதித்தும் காட்டினார்கள்.

இவ்விதமான பெட்டிகள் நவீன யுகத்தில் மிகவும் முக்கியமானவை. பெண்கள், ஆண்கள் என அனைவரும் அலுவலகம் செல்லுகையில் தங்கள் கரங்களில் சிறுபொருட்களை எடுத்துச் செல்லுவதற்கு ஏற்றவை. கச்சிதமானவை. நவீனவாழ்வுக்கு ஏற்ற இப்பெட்டிகளை வாங்க விரும்புகிறவர்கள். சங்கர் கணேஷைத்  தொடர்புகொள்ளலாம். எண்:  9578065700

- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

SCROLL FOR NEXT